
- படங்கள்: ஸ்ரீஹரி
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரிலுள்ள ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் 27.01.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறையால் இணைந்து நடத்தப்பட்டது.
மேடை நாடக வல்லுநர்களான, இயக்குனர் தாரிணி கோமல் மற்றும் மூத்த நாடகக் கலைஞர் எம். பி. மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அறக்கட்டளையின் அறங்காவலர், பத்திரிகையாளர் சந்திரமௌலி, ஷசுன் கல்லூரியின் முதல்வர் சா. பத்மாவதி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாணவிகள் இறைவணக்கப் பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட, நிகழ்ச்சி இனிதாக துவங்கியது. வரவேற்புரை வழங்கிய சந்திரமௌலி, அமரர் கல்கியைப் பற்றி கூறுகையில், சிறுகதை ஆசிரியர், நாவல் ஆசிரியர், சினிமா எழுத்தாளர், இசை விமர்சகர், சுதந்திரப் போராட்ட வீரர் என கல்கி அவர்களின் பன்முகத்தன்மை குறித்து சிலாகித்துப் பேசினார். கல்கியின் பொன்னியின் செல்வன் கிபி 1950 முதல் கிபி 1954 வரை கல்கியில் வெளிவந்ததை குறிப்பிட்டு, அச்சமயம், இந்தியாவிலேயே அதிகமாக விற்கும் வார இதழாக கல்கி வளர்ந்ததை நினைவு கூர்ந்தார்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை மூலம் சென்ற வருடம் 120க்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதையும், வளர்ந்து வரும் கர்நாடக இசை கலைஞர்களுக்கு அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் விருதினைப் பற்றியும் குறிப்பிட்டார்.
இன்று டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்து வரும் கல்கி குழுமம் தனது youtube சேனலில் வெளியிட்டுள்ள, கல்கி அவர்களைக் குறித்த, 'பேனா போராளி கல்கி' என்ற ஆவணப்படத்தினை அனைவரும் காணவேண்டும் என்று கல்லூரி மாணவிகளைக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், சிறப்பு விருந்தினர்களுக்கான அறிமுகம் வழங்கினார். தாரிணி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, கோமல் தியேட்டர் மூலம் நாடகத்துறைக்கு செய்து வரும் சேவையைப் பற்றி குறிப்பிட்டார். தாரிணி பல்வேறு குறும்படங்கள், ஆவணப் படங்கள் தயாரித்தது பற்றியும் குறிப்பிட்டார்.
எம்.பி மூர்த்தி அவர்கள் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களது நாடகக் குழுவில் சிறப்பாக பங்களித்தவர் என்றும், அவர் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து நாடகத் துறைக்கு தொடர்ந்து பங்களித்து வருவதையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் சா.பத்மாவதி, கல்கி அவர்களின் புத்தகங்கள் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 1970களில் அவரது வீட்டில் பொன்னியின் செல்வன் புதினத் தொடரை குடும்பத்தில் அனைவரும் விரும்பிப் படித்ததை நினைவு கூர்ந்தார். மாணவ மாணவிகள் தரமான இலக்கிய புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு கல்கி அவர்களின் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தாரிணி அவர்கள் 'நாடகத்தின் கூறுகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சிறுவயதிலேயே பல நாடகங்கள் பார்த்ததும், கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதையும் குறித்து பகிர்ந்து கொண்டார். பொன்னியின் செல்வனில் வரும் வர்ணனைகளைப் பற்றி பிரமித்துக் கூறினார். காதலன் காதலி அவர்கள் சார்ந்த ஒரு குறிப்பிட்ட வர்ணனை, எவ்வாறு நாடகத்திற்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் உரையாடல்கள் வழியாக கடத்தப்பட வேண்டும் என்று உதாரணத்துடன் விளக்கினார்.
தனது பள்ளி பருவத்திலேயே பொன்னியின் செல்வன் படித்ததை நினைவு கூர்ந்தார். கல்கி அவர்களின் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பான அலை ஓசை புதினத்தின் கதாநாயகி தாரிணியின் பெயரையே தன் தந்தை தனக்கு வைத்ததாகச் சொல்லி, 'தாரிணி' என்ற தன்னுடைய பெயருக்கான பின்புலத்தையும் பகிர்ந்து கொண்டார். கல்கி அவர்களின் படைப்புகள் நிறைய நாடக மேடைகள் ஏறவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ராணி மனோகரனின் சிறப்பான பங்களிப்புடனும் வழிகாட்டலுடனும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற, கல்கி அவர்களின் அருணாச்சலத்தின் அலுவல் என்கிற சிறுகதை நாடகமாக அரங்கேற்றப் பட்டது. (சிறப்பு விருந்தினரான மூத்த நாடக கலைஞர் எம். பி. மூர்த்தி அவர்கள் முன்பே இந்நாடகத்திற்கு வசனங்கள் எழுதி, மேடைக்கு ஏற்ற படைப்பாக தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.)
கல்லூரி மாணவிகள் ஸ்ருதி, வர்ஷா, காவ்யா, கீர்த்தனா, வைத்தீஸ்வரி, மற்றும் மதுமிதா மிகவும் அருமையாக நடித்தனர். காட்சி அமைப்புகள், ஒப்பனை என எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது. அந்தக் காலத்திலேயே மனைவி வேலைக்குச் சென்று கணவன் வீட்டினைக் கவனித்துக் கொள்வது என்ற புரட்சிகரமான கருத்தை கல்கி தனது சிறுகதையில் குறிப்பிட்டுள்ளார். கல்கி அவர்களின் சமூக சீர்திருத்த சிந்தனை இந்த சிறுகதையில் நமக்கு வெளிப்படுகிறது.
பின்னர் பேசிய எம்.பி மூர்த்தி, இன்னும் நிறைய இளைஞர்கள் நாடகத்தில் பங்கேற்க முன் வரவேண்டும் என்று கூறினார். நாடகங்களில் பங்கேற்பதன் மூலம், உடல் மொழி, பேச்சுத்திறன் என பல்வேறு அம்சங்களை நாம் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறினார். நாடகத்தில் பங்கேற்ற மாணவிகள் அனைவருமே தங்களது பாத்திரத்தை சிறப்பாக உணர்ந்து பங்கேற்றனர் என்றும் உடல் மொழி மற்றும் டைமிங் என அனைத்தும் அருமையாக அமைந்தது என்று பாராட்டினார்.
நாடகத்தில் பங்கேற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக கல்லூரி மாணவிகளிடையே கல்கி அவர்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது அருமையானதொரு விஷயம்.