1957 ஆகஸ்ட் மாதம் அன்று கிருஷ்ணஜெயந்தி. இரவு 10 மணி என் தாயார் முறுக்குச் சீடை, அவல், அப்பம் போன்றவற்றைத் தயார் செய்து திரு ஆராதனைக்காக, பெருமாள் படத்தின் முன்பு சமர்பித்திருந்தார்.
என் தந்தையார் திருப் பல்லாண்டு சேவித்து, தீர்த்தம் கொடுக்கும் முன்பு, பசி மிகுதியில் சமர்ப்பித்து இருந்த அப்பத்தை எடுத்து சாப்பிட வாயருகே கொண்டு போன போது, வாங்கினேன் பாருங்கள் ஒரு அடி. அதனால் உடனடியாக ரியாக்ஷன் என் கன்னம் வீங்கியது.
அடித்தது மட்டுமல்லாமல் என் தந்தை கூடவே. "பக்கி மாதிரி பறக்காதே" என்று கடிந்து கொண்டார். அன்று என் தந்தையிடம் நான் வாங்கிய முதல் அடியும் கடைசி அடியும் அது தான்.
அதற்குப் பிறகு எங்கள் வீட்டில், என் தம்பியோ, தங்கையோ, சாப்பாட்டுக்கு அவசரப்படும் போது என் தாயாரும் இந்த டயாலக்கை அடிக்கடி சொல்லி வருவார். இதன் அர்த்தம் கேட்டால் "எனக்குத் தெரியாது; ஏதோ பெரியவர்கள் சொன்னதைச் சொன்னேன்," என்பார்.
கிராமத்தில் உள்ள அனைவரும் அதிகம் படித்தவர்கள் கிடையாது. இருந்தாலும் வாழ்க்கையின் மேடு பள்ளங்கள், ஏற்ற தாழ்வுகள் அறிந்தவர்கள். அவர்கள் கூறும் பழமொழிகள், அனுபவத்தையும் அறிவு கூறுகளையும் விளக்கி சொல்லும் ஆற்றல் உடையவை.
சிறிய வயதில் கேட்ட, "பக்கி மாதிரி பறக்காதே" பற்றிச் சிந்தனை ஓட்டத்துக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை?
'பக்கி' ஒரு உருவமா? இல்லை பூச்சியா? இல்லை பறவையா?
எதற்கு யார் பார்த்தாலும் இந்தப் பழமொழியைச் சொல்கிறார்கள்.?
விடை தெரியாத வினாவாகிப் போய் விடுமோ ?
1957 முதல் விடை தெரியாத வினாவுக்கு, 1968-1969ல் கல்லூரியில் படிக்கும் போது zoology படிக்கும் Room mate விளக்கம் கொடுத்தான்.
'பக்கி' (nightjar), மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் நடுத்தர அளவுள்ள பறவை.
அவைகளில் நீண்ட வால் பக்கி, காட்டு பக்கி, சின்னப் பக்கி என்ற மூன்று வகைகள் உண்டு என்றும், கொத்துக் கொத்தாகச் சிறு சிறு பூச்சிகளை விழுங்கும் தன்மை உடையவை என்றும், இவைகள் எழுப்பும் சப்தம் ஒரு மாதிரியான வித்தியாசமான ஒலியை கொடுக்கும் என்றும், இவைகள் சாலையோரம் உள்ள எல்லை கற்களில் உக்கார்ந்து கொண்டு, பறந்து ஓடும் பூச்சிகளை அவசர அவசரமாக தின்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்றும், ஆந்தையைப் போலவே பெரிய கண்களையுடைய இந்தப் பறவை இருட்டிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய திறன் கொண்டது என்றும் விளக்கம் சொன்ன பிறகு நிம்மதி அடைந்தேன்.
மனிதர்களாகிய நாமும் அவசர அவசரமாக வாய் நிறைய உணவை அள்ளி போட்டு சாப்பிடுவதனால் தானோ "பக்கி மாதிரி பறக்காதே" என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்?
என்ன நண்பர்களே இனியாவது, நிதானித்து மெல்ல சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் "பக்கி மாதிரி பறக்காதே" என்கிற பெயர் உங்களுக்கும் கிடைக்கும், எவ்வளவு காலம் கடந்தாலும்!