"கல்கி தனக்கென்று ஏற்படுத்திய ஞாபகச் சின்னம்..." - ஐயா காமராஜர் சொன்ன அந்த நெகிழ்ச்சியான விஷயம்!

செப்டம்பர் 09 - 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த தினம்!
கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
கல்கி' கிருஷ்ணமூர்த்தி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

-வி.கோபாலன்

ல்கி குழும நிறுவனருள் ஒருவரான 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த தினம் இன்று. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் வி.கோபாலன் அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமக்கை மகன். அந்த வகையில், நெருங்கிய உறவு. 'கல்கி மாமா'வைப் பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ...

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது:

‘அவர் பன்முக சாதனையாளர், சிறந்த தேசபக்தர், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அதில் முழுமையாகப் பங்கேற்று மூன்று முறை சிறைக்குச் சென்றவர். மிகச் சிறந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதைகளும் சரித்திர மற்றும் சமூக பின்னணியையும் கொண்ட பல நாவல்கள் எழுதிய வித்தகர். அவருடைய சரித்திர நாவல்களில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’. சோழர் கால ஆட்சியை பின்னடியாகக் கொண்டது.

அந்த மாபெறும் நாவல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஜனவரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் விற்பனை அளவில் முதல் இடம் பெறுகிறது. தன் எழுத்துகள் அனைத்திலும் ‘கல்கி’ என்ற தன் முத்திரையை ஆழமாகப் பதித்து, அனைத்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றவர்.

சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், பல பெரிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் என்று மிகப் பெரும்பான்மையோர் கல்கி அவர்கள் மீது வைத்திருந்த அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை என்ற பல நிலைப் பாடுகள், அனைத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவருக்கு மருமகனாகப் பிறந்தது எனது பாக்கியம் என்று, இன்றுவரை (என் 94வது வயதில்) நினைக்கிறேன்.

அவருடன் இருந்த அவரது கடைசி 4 ஆண்டுகள் இன்றும் என் மனதில் துல்லியமாக இருக்கிறது. அவற்றிலிருந்து 4 நிகழ்ச்சிகளை மட்டும், 2 அவர் வாழ்ந்த காலத்தில், 2 அவர் இறைவனடி சேர்ந்த பிறகு, அதன் விபரங்களை ‘கல்கி’ அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
கட்டுரை ஆசிரியர் வி.கோபாலன்kalki gallery

நிகழ்ச்சி 1:

1952 – ஏப்ரல், சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் பெற்றேன். பல விதங்களில் எனக்கு உதவி செய்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன் அவருக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டு, அவரைப் பார்க்க விரும்பினேன்.

உடனே என் நினைவுக்கு வந்தது அவருக்குப் பிடித்த இனிப்பு ஜாங்கிரி. அதுவும் அந்த நாட்களில் திருவல்லிக்கேணியில் பிரசித்த பெற்ற கோயம்புத்தூர் கிருஷ்ண அய்யரின் ஹோட்டலில் தயாரிக்கப்படும் ஜாங்கிரி. கோயம்புத்தூர் கிருஷ்ண அய்யர் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தயாரிக்கும் இந்த இனிப்பு. ஒவ்வொரு ஞாயிறு மதியம் அவர் ஹோட்டலில் அந்த ஜாங்கிரியை ருசித்து சாப்பிட கூட்டம் அலை மோதும்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
கல்கிக்கு பிடித்த ஜாங்கிரி -

ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவர் ஹோட்டல் கதவுகளைத் திறக்கும் மதியம் 3 மணிக்கு முன்னதாகவே அவர் ஹோட்டலுக்குச் சென்று அவரிடம் “25 ஜாங்கிரி பார்சல் வேண்டும்” என்றேன்.

என்னை முறைத்துப் பார்த்த அவர், உடனே “இன்று என் கடை ஜாங்கிரியை சாப்பிட விரும்பி பலர் வருவார்கள். யாருக்கும் ஜாங்கிரி தீர்ந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன். அதனால் 25 ஜாங்கிரி பார்சல் தரமுடியாது. 5 ஜாங்கிரி மட்டும் பார்சல் தருகிறேன்” என்றார்.

நான் உடனே அவரிடம் “உங்கள் ஓட்டல் ஜாங்கிரி கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இன்று நான் அவரைப் பார்க்கச் செல்கிறேன். அவர் உங்கள் ஓட்டல் ஜாங்கிரியை 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிடட்டும் என்பதற்காகத்தான் 25 ஜாங்கிரி பார்சல் கேட்டேன்” என்றேன்.

அவர் “அப்படியா... கல்கி அவர்களுக்காக எங்கள் ஓட்டல் ஜாங்கிரி வாங்கிக்கொண்டு போகிறாயா? கொஞ்சம் இரு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று சிறிது நேரத்தில் ஒரு பெரிய பார்சலுடன் வெளியே வந்தார். அந்தப் பார்சலை என்னிடம் கொடுத்து, “இந்தப் பார்சலில் நீ கேட்ட 25 ஜாங்கிரி இருக்கிறது. இதில் 20 ஜாங்கிரிக்கு மட்டும் நீ பணம் கொடு. 5 ஜாங்கிரியை நான் கல்கிக்கு அவர் விரும்பி சாப்பிட அன்புடன் கொடுத்தேன் என்று அவரிடம் சொல்லு” என்றார். கல்கி அவர்கள்மீது கிருஷ்ண அய்யர் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் அப்போது பூரணமாக வெளியாகின.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
பேத்தி கெளரியுடன் கல்கிkalki gallery

1953 டிசம்பர் அடுத்த நிகழ்ச்சி - 2

கல்கியின் பேத்தி கெளரிக்கு (மகள் ஆனந்தியின் பெண்) கல்கியின் குடும்ப தெய்வமான வைத்தீஸ்வரன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த, கல்கி, தன் குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு ரயிலில் ஏறி அடுத்த நாள் ஞாயிறு காலையில் வைத்தீஸ்வரன் கோயில் சென்றடைந்தார்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி கோயில் குருக்கள் ஒருவர் வீட்டில் தங்கி கெளரியின் முடி காணிக்கைக்குப் பிறகு இறைவனை, இறைவியை வணங்கிவிட்டு குருக்கள் வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு அவர் பிறந்த அங்கிருந்து 10 மைல் தொலைவில் உள்ள புத்தமங்கலம் கிராமத்திற்குக் காரில் சென்றார்.

அப்போது புத்தமங்கலத்தில் கல்கியின் தாயார் தனது மற்ற இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கார் மதியம் சுமார் 2 மணி அளவில் புத்தமங்கலம் அக்ரஹாரத்திற்குள் நுழைந்தது. தெருவில் ஈ, காக்கா இல்லை. பூரண அமைதி. மதிய நேரம் என்பதால் அக்ரஹாரவாசிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள் போலும்.

கார் கல்கியின் மூத்த சகோதரர் வெங்கட்ட ராம அய்யரின் வீட்டு வாசலில் வந்து நின்றது. கார் சப்தம் கேட்டவுடன் எதிர்வீட்டில் இருந்த ஒருவர் வெளியே வந்து பார்த்தார். காரிலிருந்து கல்கி இறங்குவதைப் பார்த்து, அவசர அவசரமாக அடுத்த வீட்டிற்குச் சென்றார்.

கல்கி அவர்களும் அவரது மனைவி மற்றும் பெண், பேத்தி அனைவரும் உள்ளே சென்று கல்கியின் தாயாரை வணங்கினர். கல்கி தனது சகோதரர்கள், அவர்களின் குடும்பத்தினரிடமும் அவர்களின் நலனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வெளியில் சத்தம். அக்ரஹார ஆண்கள் அனைவரும் வந்து வெங்கட்ட ராம அய்யரின் திண்ணையில் உட்கார்ந்துகொண்டனர். கல்கி அவர்களும் வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்து, அவர்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த சில நிமிஷங்களில் அக்ரஹார பெண்கள் அனைவரும் வெங்கட்டராம அய்யரின் வீட்டின் உள்ளே சென்று கல்கியின் மனைவி, மகள் இருவரிடமும் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தனர். இப்படி சுமார் 1 மணி நேரம் கழிந்திருக்கும்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
புத்தமங்கலத்தில் கல்கி..kalki gallery

அக்ரஹார தெருவில் பெரிய கூச்சல். பல பேர் வருவதுபோல் தெரிந்தது. அடுத்த சில நிமிஷங்களில் புத்தமங்கலம் குடியானத் தெருவில் உள்ள அனைத்து பேரும் ஆண்கள், பெண்கள் உட்பட வந்தனர்.

வந்தவர்களில் முதியவராக இருந்த ஒருவர் கல்கியை பார்த்து, “ஐயா, பட்டணத்திலிருந்து நடு ஐயா வந்திருக்கிறார் என்று சொன்னாங்க. உடனே நடு ஐயாவைப் பார்க்க வேண்டுமென்று கிளம்பி வந்தோம்.

உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம் அய்யா. உங்களைக் கும்பிடுகிறோம்” என்று சொல்லி அனைவரும் ஆண்களும் பெண்களும் கல்கி அவர்கள் “வேண்டாம்” என்று தடுத்தும் தரையில் விழுந்து வணங்கினார்கள். (புத்தமங்கல கிராமவாசிகள் அனைவரும் முத்தவர் வெங்கட்ட ராம அய்யரை, ‘பெரிய அய்யா’ என்றும் கல்கி அவர்களை ‘நடு அய்யா’ என்றும் இளையவர் ஜகதீச அய்யரை ‘சின்ன அய்யா’ என்றும் அழைப்பார்கள்.)

பிறகு முதலில் பேசிய முதியவர் கல்கியைப் பார்த்து “அய்யா, இந்தக் கிராமத்தில் பிறந்த அய்யா, நீங்க பட்டணத்தில் பெரிய பெயராக இருப்பது எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம் அய்யா. உங்களை நாங்க அடிக்கடி பார்க்கணும். நாங்க எல்லாம் பட்டணத்திற்கு வரமுடியாது. அதனால் அய்யா அவர்கள் அடிக்கடி இந்தக் கிராமத்திற்கு வரணும் அய்யா” என்றார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
அமரர் கல்கியின் வீடு தற்போது... kalki gallery

கல்கி “நிச்சயம் வருகிறேன்” என்று சொல்லி, அவர்களிடம் அவர்களது குடும்ப க்ஷேமங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. மாலை புத்தமங்கலத்தில் இருந்து புறப்படத் தயாரானார். உள்ளே போய் தாயாரிடம் விடைபெற்று வெளியே வந்து அனைவரையும் கைகூப்பி வணங்கி விடைபெற்றார்.

அந்த நேரத்தில் அக்ரஹாரவாசிகள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் ஒரு வரிசையில் நின்றனர். எதிர்வரிசையில் குடியானத்தெருவாசிகள் அவர்கள் வீட்டுப் பெண்களுடன் அனைவரும் கைகூப்பி நின்ற காட்சி, ராணுவத் தலைவர் ஒருவர் ராணுவ வீரர்களிடையே விடைபெறும்போது அனைத்து ராணுவ வீரர்களும் வரிசையாக நின்று அவருக்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சிபோல் இருந்தது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
ராஜாஜி - கல்கிkalki gallery

1954 - அடுத்த நிகழ்ச்சி - 3

கல்கி அவர்கள் 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 5 மணிக்கு இறைவனடி சேர்ந்துவிட்டார். அடுத்த அரைமணி நேரத்திற்குள் அங்கு வந்த ராஜாஜி, கல்கியின் மனைவியைப் பார்த்து, “ருக்மணி அம்மா... பூரண சந்திரன் வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மறைந்த மாதிரி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பூரண சந்திரனாக மறைந்துவிட்டார். மனதை தேற்றிக்கொள்ளுங்கள்” என்றார்.

ராஜாஜியை தொடர்ந்து இன்னும் பல பிரமுகர்கள் ஜெமினி வாஸன், சுதேசமித்திரன் ஆசிரியர் C.R.சீனிவாசன், ம.பொ.சி.... இப்படி பலர். அன்று காலை 7.15 மணிக்கு டில்லியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியில் கல்கியின் மறைவு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட பலரும் தங்கள் அஞ்சலியைச் செலுத்த கல்கி வீட்டிற்கு வரத்தொடங்கினர்.

அப்போது அந்தத் தெருவில் கல்கியின் வீட்டை நோக்கி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்த அங்கிருந்த பலர் வியப்புடன் அவரை நோக்கினார்கள். வந்தவர் கல்கியின் வீட்டிற்கு உள்ளே வந்து கல்கியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கல்கியின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தனது கைகளை கூப்பியபடி நின்றுவிட்டு பிறகு கல்கியின் உடலை 3 முறை வலம் வந்து, வெளியே வந்து அந்த வீட்டு காம்பவுண்டில் இருந்த out – home சுவரில் சாய்ந்து நின்று, தனது இரு கைகளையும் தனது மார்பின் மீது கோர்த்து வைத்துக்கொண்டு கல்கியின் உடல் இருந்த திசையிலே தனது பார்வையை செலுத்திக்கொண்டிருந்தார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
எம்.கே. தியாகராஜ பாகவதர்

அவர் யாரிடமும் பேசவில்லை. அவர் வாயிலில் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. அங்கு இருந்த பலர் அவரிடம் பேச முயன்றும் அவரிடம் எந்தவிதமான அசைவும் இன்றி நின்ற கோலத்திலயே இருந்தார். அவர் நிற்பதைப் பார்த்த கல்கி குடும்பத்தினர் ஒருவர் ஒரு நாற்காலியை அவர் அருகில் போட்டு அதில் அவரை உட்காரச் சொன்னார். ஆனால், தன் கைகளின் செய்கையாலேயே அதை மறுத்து, நாற்காலியை அங்கிருந்து எடுத்துப் போகச்சொன்னார்.

இந்த நிலையில் அவர் கல்கியின் உடல் தகனத்திற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அப்படியே நின்றார். சுமார் 3 மணி நேரம். கல்கியின் உடல் காலை சுமார் 11 மணிக்கு தகனத்திற்காக வெளியே எடுத்து வந்தபின் மீண்டும் அவர் கல்கியன் முகத்தைப் பார்த்து வணங்கிவிட்டு வெளி வந்து தனது வீட்டிற்கு கால்நடையாகச் சென்றார்.

அவரது வீடு கல்கி இருந்த அதே தெருவில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்தது. அவர் அன்று திரைஉலகில் மிகப் பெரிய நட்சத்திரமாக பிரகாசித்த எம்.கே. தியாகராஜ பாகவதர். 3 மணி நேரம் சுவரில் சாய்ந்துகொண்டு நின்று அவர் கல்கிக்கு அஞ்சலி செலுத்தியது கல்கியின் மீது அவர் வைத்திருந்த மதிப்பின் அடையாளம்.

அடுத்த நிகழ்ச்சி - 4

கல்கி காலமானபோது அப்போதைய தமிழ்நாடு முதல் மந்திரி காமராஜ் அவர்கள். அன்று அவர் டில்லியில் இருந்தார். கல்கி காலமானதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துவிட்டு, ‘கல்கியின் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே ஒரு பெரிய இழப்பு’ என்று தனது அறிக்கையில் சொல்லியிருந்தார். காமராஜரின் இந்த அறிக்கையைப் படித்த அனைவரும் அத்துடன் தனது கடமையை காமராஜ் முடித்துவிட்டார் என்று நினைத்தனர்.

ஆனால், அதற்குபின் நடந்த நிகழ்ச்சி அதற்கு நேர் எதிர்மறை. கல்கி காலமான 3-வது நாள் காலை சுமார் 9 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் கல்கியின் வீட்டு வாசலில் வந்துநின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டின் முகப்பில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். வெளியே வந்த கல்கியின் பெண் ஆனந்தியிடம், அவர் யார் என்று தெரிந்துகொண்டு அவரிடம் சொன்னார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
கல்கி மறைந்த போது, கல்கி இல்லம் வந்த காமராஜர்kalki gallery

“சி.எம். காமராஜ் அவர்கள் டில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறார். சி.எம். அவர்கள் விமான நிலையத்திலிருந்து நேராக இங்கு கல்கி வீட்டிற்கு வந்து கல்கியின் துணைவியாரிடம் தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் சொல்ல இருக்கிறார்கள். இதை உடனே கல்கியின் துணைவியாரிடம் சொல்லும்படி எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு. சி.எம். இன்னும் அரை மணியில் இங்கு வந்துவிடுவார்” என்றார்.

இதைக்கேட்ட ஆனந்தி, “அப்படியா! நாங்கள் ஐயாவை வரவேற்க ரெடியாக இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு தனது தாயாரிடம் இதை உடனே சொன்னார். உடனே கீழ்ப்பாக்கத்தில் உள்ள சதாசிவம் அவர்களுக்கும் போன் செய்து தெரிவித்தார். இதைக் கேட்ட சதாசிவம், தானும் குஞ்சம்மாவும் (M.S) அங்கு உடனே புறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
நீங்க நினைச்சது அப்படியே நடக்கும்! வேதாத்திரி மகரிஷி கொடுத்த 10 சீக்ரெட் மந்திரங்கள்!
கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history

அடுத்த அரைமணி நேரத்தில் காமராஜ் வந்துவிட்டார். “கல்கி ஏன் திடீரென்று காலமாகிவிட்டார். என்ன ஆயிற்று?” என்று விசாரித்தார். கல்கியின் பெண் ஆனந்தி, கல்கியின் கடைசி நேர நிகழ்ச்சிகளை கண்களில் கண்ணீர் வழிய தெரிவித்தார். இதற்குள் சதாசிவம், M.S. தம்பதிகள் அங்கு வந்துவிட்டார்கள். சதாசிவத்தைப் பார்த்து காமராஜ், “கல்கி பல தமிழ் அறிஞர்களுக்கு ஞாபகச்சின்னங்களை எழுப்பி இருக்கிறார். அவர் தனக்கு என்று ஒரு ஞாபகச்சின்னத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது அவரது பெயரில் வெளிவரும் ‘கல்கி’ பத்திரிகை. கல்கி காலமாகிவிட்டார் என்பதற்காக கல்கி பத்திரிகைகளை நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து வெளியிடுங்கள்” என்றார் சதாசிவம் அவர்களை நோக்கி.

“நிச்சயமாக தொடர்ந்து வெளியிடுவேன்” என்றார் சதாசிவம்.

பிறகு காமராஜ் அவர்கள் கல்கியின் எழுத்துத் திறமையைப் பாராட்டிவிட்டு அவரது அரசியல் தலையங்கத்தை கல்கியில் ஒவ்வொரு வாரமும் படிப்பேன் என்று கூறிவிட்டு, புறப்பட எழுந்தார். அனைவரும் எழுந்து நின்றார்கள்.

காமராஜ் கல்கியின் மனனவியை பார்த்து கைகூப்பியபடி, “தைரியமாக இருங்கள் அம்மா. கல்கியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று சொல்லி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார்.

காமராஜ் அவர்களின் இந்த உயர்ந்த பண்பு, விமான நிலையத்தில் இருந்து நேராக கல்கியின் வீட்டிற்கு வந்து, அங்கு சுமார் 1 மணி நேரம் தங்கி, கல்கி அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியது, கல்கியின் குடும்பத்தினர் அனைவரையும் மனம் நெகிழவைத்தது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஒரு வட்டம்: வீட்டிற்கு மெருகூட்டும் வளைந்த வடிவங்கள்!
கல்கி கிருஷ்ணமூர்த்தி - Tamil literature history
logo
Kalki Online
kalkionline.com