

அந்த ராப் அப் மீட்டிங்கில் (wrap up meeting) அப்போதைய முதல்வரும் கலந்து கொள்வதாக ஏற்பாடு. மூன்று நாட்கள் முன்னர் வந்த மத்தியக் குழுவினர் அமைச்சர் வெங்கட்ராமனுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு, மத்திய அரசு ஆரம்பிக்க இருக்கும் அந்தத் தொழிற்சாலைக்குத் தகுந்த இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர். போவதற்கு முன்னால், மரபுப்படி முதல்வரைச் சந்தித்து விட்டுக் கிளம்பத் தயாராகி விட்டனர்.
உள்ளே வந்த முதல்வரின் முகம் இறுகிக் கிடந்தது. குழுவின் தலைவர் எழுந்து, தாங்கள் மூன்று நாட்களாகப் பார்த்த இடங்களை விளக்க முற்பட, அவரைச் சைகையால் அமர்த்திய சி.எம்., தனக்காக மேலும் இரண்டு நாட்கள் ஒதுக்க வேண்டினார். உடனடியாக ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவதாகவும், அது நிச்சயமாக ஏற்ற இடமாக அமையும் என்றும் உறுதி அளித்து விட்டு, மிஸ்டர் வெங்கட்ராமனிடம் அந்த இடம் பற்றிக் கூறி, உடனடியாகக் கிளம்பச் சொன்னார்.
அடுத்த நாள், திருச்சி திருவெறும்பூருக்கும் துவாக்குடிக்கும் இடைப்பட்ட தஞ்சாவூர் சாலையில் நிலத்தைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர், முழுத்திருப்தியுடன் பி.எச்.இ.எல்-லை (BHEL) தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப் பரிந்துரை செய்வதாகக் கூறிச் சென்று, அவ்வாறே செய்தனர். பெல் தொழிற்சாலை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தப் பூகோளமறிந்த புனிதத் தலைவர் கர்மவீரர் காமராஜர்! மிகுந்த திறமை வாய்ந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், ஜனாதிபதி ஆகிய பின்னாலுங்கூட ‘எப்படி குழுவுக்குத் தான் இடங்களைக் காட்டியபோது அந்த இடம் தெரியாமல் போனது!’ என்ற வருத்தத்திலேயே கடைசி வரை இருந்தாராம்!
'படிக்காத மேதை’ என்ற வாசகத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் காமராஜரே!
திரு ராஜாஜியின் கட்சியை ஆதரித்த நடிகர் ராமசாமி (சோ) ஒரு சிறந்த வழக்கறிஞர்; எழுத்தாளர்; பத்திரிகையாளர் என்று ஏகப்பட்ட முகங்கள் அவருக்குண்டு. அவரின் நடிகர் முகம் அவரை மேலும் பிரபலமாக்கியது.
சாணக்கியத் தனமும், மிகுந்த துணிச்சலும் கொண்ட அவர் திரையில் ஏற்றதோ, காமெடிப் பாத்திரங்களைத்தான்! மாற்றுக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் நேரங்கிடைக்கும் போதெல்லாம் சோ அவர்கள் முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்து மக்கள் நலன் குறித்து விவாதிப்பாராம்.
அவரைப்போலவே திரு.க. ராசாராம் போன்றவர்களும் பெருந்தலைவர் வீட்டில் கூடி, விவாதிப்பார்களாம். எல்லோரிடமும் நட்புடனும், பாசத்துடனும் பழகுவதை இயல்பாகவே கொண்டிருந்தாராம் கறுப்புத் தலைவர். அங்கு கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு கருத்துக்களே முக்கிய ஸ்தானம் வகிக்குமாம்!
பல சமயங்களில் காமராஜர் உணவருந்தும்போது சோ வந்து பேசிக்கொண்டிருப்பாராம். வைரவன் உணவு பரிமாற, தலைவர் சாப்பிட்டபடியே சோவிடம் பேசுவாராம்! இப்படியே பல நாட்கள் நடக்க, ஒரு நாள் சோவிடம் தலைவர் சொன்னாராம்:
”ஒரு நாள்கூட என்னோட சாப்பிடுன்னு ஒன்னைக் கூப்பிட்டதில்ல. காரணம் வேற ஒண்ணுமில்ல. பர்சனலா தினம் ஒரு விருந்தினருக்கு உணவளிக்கற வசதி இல்லாதவன் நான்! என் விருந்தினருக்கு அரசாங்கச் செலவுல சாப்பாடு போடவும் மனசு இடந்தரல! அதோடு இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. நாங்க சாப்பிடறது ரேஷன் அரிசிச் சோறு! அது ஒனக்கு ஒத்து வராதுப்பா! ஒண்ணும் தப்பா நெனச்சுக்கிடாதே!” என்றாராம்! அவர் பேசியதைக் கேட்டு சோ வியந்து நின்றாராம்!
இந்தத் தமிழ் மண் எவ்வளவு நல்லவர்களைப் பெற்று வளர்த்துப் பேணிக் காத்திருக்கிறது. எவ்வளவு புனிதர்களை இந்தப் பூமிக்கு வழங்கியிருக்கிறது.
மக்கள் பணியே மகேசன் பணி என்று வாழ்ந்த இவர்கள் போன்ற தலைவர்களின் வழியைப் பின்பற்ற, நம் இளைஞர்கள் முயல வேண்டும். நாளைய இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக ஆக்க அதுவே சிறந்த வழி!