

'விசில்' என்ற ஒற்றைச் சத்தம் இன்று தமிழக அரசியலில் ஓர் அடையாளம். ஆனால், இந்த விசில் வெறும் அரசியல் சின்னம் மட்டுமல்ல! ஆதி மனிதன் முதல் ஒலிம்பிக் மைதானம் வரை, ஆபத்து காலங்களில் உயிரைக் காக்கும் ஒரு கருவியாகவும், தொலைதொடர்பு சாதனமாகவும், ஏன் ஒரு மொழியாகவும் கூட மனித வரலாற்றில் ஒலித்திருக்கிறது. வாருங்கள்! தளபதி விஜய்-ன் விசில் சின்னத்தில் உள்ள ஆழமான வரலாற்றையும், சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகளையும் அறிந்துகொள்வோம்!
விசிலின் வரலாறு:
ஆதி மனிதன் முதல் ஒலிம்பிக் வரை விசில் என்ற கருவியின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆதி மனிதர்கள் மரக்கிளைகளின் துவாரங்கள், பறவைகளின் எலும்புகள் அல்லது கடலில் கிடைக்கும் சங்குகளை ஊதி ஒலியை எழுப்பினர். பண்டைய எகிப்தியர்கள் சிறிய களிமண் மற்றும் எலும்புகளால் ஆன விசில் போன்ற கருவிகளை சடங்குகளுக்காகப் பயன்படுத்தினர். இன்றைய இஸ்ரேல் பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு விசில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை வேட்டைக்கும், எதிரிகளை எச்சரிக்கவும் பயன்படுத்தப்பட்டனவாம்.
1878-க்கு முன்பு வரை, கால்பந்து போட்டிகளில் நடுவர்கள் கைக்குட்டைகளை அசைத்தே சைகை காட்டினர். ஜோசப் ஹட்சன் என்ற ஆங்கிலேயர் முதன்முதலில் விளையாட்டுக்கான விசிலை உருவாக்கினார்.
விசிலின் வகைகள்:
பயன்பாட்டிற்கு ஏற்ப விசில்கள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
பீ விசில் (Pea Whistle):
இந்த வகை விசிலின் உள்ளே ஒரு சிறிய உருண்டை அதாவது பட்டாணி (Pea) இருக்கும். காற்றை ஊதும்போது இந்த உருண்டை அதிர்ந்து, ஒருவித நடுக்கத்துடன் கூடிய ஒலியை எழுப்பும். இது காவல்துறை மற்றும் விளையாட்டு நடுவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பீ-லெஸ் விசில் (Pea-less Whistle):
இதில் உருண்டை இருக்காது. இதற்குப் பதிலாகக் காற்றின் அழுத்தத்தை வைத்தே அதிக சத்தத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கடலில் அல்லது மழையில் நனையும் இடங்களில் இவை சிறப்பாகச் செயல்படும்.
தகர விசில் (Tin Whistle):
இது பெரும்பாலும் இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. அயர்லாந்து போன்ற நாடுகளில் பாரம்பரிய இசையில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்லைடு விசில் (Slide Whistle):
இதில் உள்ள ஒரு கம்பியை முன்னும் பின்னும் நகர்த்துவதன் மூலம் ஒலியின் சுருதியை மாற்ற முடியும்.
சைலண்ட் விசில் (Dog Whistle):
இது மனிதர்களின் செவிக்குக் கேட்காத, மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்பும். நாய்களுக்கு மட்டுமே இது கேட்கும் என்பதால் அவற்றைப் பழக்கப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
விசில் எவ்வாறு ஒலியை உருவாக்குகிறது?
இது ஒரு சுவாரசியமான இயற்பியல் நிகழ்வு. இது திரவ இயக்கவியல் மற்றும் ஒலியியல் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. விசிலை ஊதும்போது, காற்று ஒரு குறுகிய துவாரத்தின் வழியாக அதிவேகமாகச் செல்கிறது. விசிலின் நுனியில் உள்ள ஒரு கூர்மையான விளிம்பில் இந்த காற்று மோதி இரண்டாகப் பிரிகிறது. பிரிக்கப்பட்ட காற்றின் ஒரு பகுதி விசிலின் உள்ளே இருக்கும் அறைக்குள் நுழைகிறது. அங்கு காற்று வட்டமாகச் சுழலத் தொடங்கி ஒரு சுழலை உருவாக்குகிறது. இந்தச் சுழல் விசிலுக்குள் இருக்கும் அழுத்தத்தை மாற்றி, காற்றை அதிர்வடையச் செய்கிறது. விசிலின் நீளம் அல்லது அதன் அறையின் அளவு சிறியதாக இருந்தால், காற்று வேகமாக அதிர்வடைந்து அதிக 'சுருதி' (High Pitch) கொண்ட ஒலியைத் தரும். பெரிய விசில்கள் மெதுவான அதிர்வையும் குறைந்த சுருதியையும் உருவாக்கும்.
டைட்டானிக் விபத்தின் போது, பயணிகள் விசிலைப் பயன்படுத்தி உதவி கேட்டது பல உயிர்களைக் காக்க உதவியது. இன்றும் மீட்புப் படையினருக்கு விசில் ஒரு முக்கியமான பாதுகாப்பு உபகரணமாகும். கேனரி தீவுகளில் 'சில்போ கோமெரோ' என்ற மொழி உள்ளது. இது முழுக்க முழுக்க விசில் ஒலிகளை வைத்தே பேசப்படுகிறது.
தளபதியின் கையில், தளபதியின் ரசிகர்கள் கையில் உள்ள விசிலாக இருந்தாலும் சரி, உங்கள் கையில் பாதுகாப்புக் கருவியாக இருந்தாலும் சரி, இனி ஒரு விசிலைக் கேட்கும்போது, அதன் பின்னால் உள்ள வரலாற்றையும் அறிவியலையும் கொஞ்சம் நினைத்துப் பார்கலாமே!