கவிதை: கவிஞனே! என்றும் வாழ்வாய்!

கண்ணதாசன் கவிதை
கண்ணதாசன் கவிதைAI Image
Updated on
Kalki strip
Kalki strip

கண்ணனோ சிவனோ

கடாட்ச முருகனோ

கருணை இயேசுவோ

அகிலுலக அல்லாவோ

இவர்களை வணங்கும்

எவருக்கும் பொது

எங்கள் கண்ணதாசன்!

பிரசவ அறை அழுகை முதல்

பிணவறை கதறல்வரை…

அத்தனையையும் க்ளோசப்பில்

அப்பொழுதே படம் பிடித்த

வரலாற்று நாயகனவன்

வந்துதித்த நாளின்று!

அவனை(ளை) யெழுப்பாதீர்! அப்படியே தூங்கட்டும்!

என்றவனும் அன்று எழுதியதை இன்றைக்கும்

பார்த்துக் கேட்கின்றோம்! பதைபதைத்துச் சாகின்றோம்!

எழுப்பினாலுமவள் எழுந்து வரப்போவதில்லை!

உயிரெடுக்கும் உத்தமர்கள் உலவுகின்றார் நாட்டினுள்ளே!

தாலாட்டுப் பாடியவன் தம்பி தங்கைகளை

அமைதியில் உறங்க வைத்தான்! அல்லல்களை மறக்க வைத்தான்!

காதலிலே தோல்வியுற்ற கன்னியர்க்கும் காளையர்க்கும்

வைகுண்ட கோர்ட்டினிலே வகையாய் கேஸ்போட்டு

நீதியெழுதும் கடவுளையே நிலவுலகுக்கு அழைத்திட்டான்!

சங்க இலக்கியத்தைச் சாதாரண மனிதர்களும்

அறிந்தேயுணர்ந்திட அவனே வழிவகுத்தான்!

படிக்காத பாமரனும் பகுத்தறிவு மனிதருமே

அறிந்திடும் விதமாக அர்த்தமுள்ள இந்துமதத்தை

எழுதிட்டான் எல்லோரும் ஏற்றிடும் விதமாக!

வாழ்க்கை முழுமையையும் வளமாய் வாழ்ந்திடவே

பாடல்களால் அவனும் பாடம் எடுத்துவிட்டான்!

தத்துவமோ தனித்துவமோ தரணியில் எதுவானாலும்

அவன் பாடல் முன்நிற்கும்! அனைத்தையும் பின்தள்ளும்!

திறந்த புத்தமாகவே திரிந்தானவன் உலகினிலே!

இதயக்கூட்டினிலே இரத்தமன்றி வேறெதையும்

ஒளித்து வைக்காத உத்தமக் கவிஞனிவன்!

பாட்டால் பூவுலகைப் பரவசப்படுத்தியவன்!

அத்தனை சப்ஜக்டையும் அழகாய் டீல்செய்த

ஆன்மிகவாதியிவன்! ஆண்டவனைப் போற்றியவன்!

காலத்தால்அழியாத காவியங்கள்செய்தயிவன்

பேரைச் சொன்னாலே பெருமையங்கு குதிபோடும்!

இதையும் படியுங்கள்:
கண்ணதாசன் - எம்.எஸ்.வி: வாழ்க்கையை உணர வைக்கும் உணர்ச்சிகளின் காவியம்!
கண்ணதாசன் கவிதை

வள்ளுவனையும் வாத்சாயனரையும் ஒருசேரயிவன்

உலகுக்கு உணர்த்திட்டான்! ஒருவரையும் விடவில்லை!

அங்கலட்சணங்களால் அகில உலகினரை

எடைபோடும் வித்தையையும் எழுதியே வைத்துள்ளான்!

இவனெழுத்தைப் படித்தாலே இவ்வுலகம் தெளிவாகும்!

கண்ணதாசனே! உங்கள்பிறப்பால் உயர்ந்தது தமிழகம்!

எத்தனையோ ரசிகர்களின் இதயங்களில் அமைதியினை

இன்றைக்கும் இறக்குகிறாய்! இறவாமல் வாழுகிறாய்!

பிறந்தநாள் மட்டுமல்ல பிறபல நாட்களிலும்

என்றைக்கும் உன்னை இவ்வுலகம் நினைந்திடும்!

logo
Kalki Online
kalkionline.com