செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல்வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்.
பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமில்லாமல் விடுதலை பெற்ற பாரத நாட்டின் உயர்வுக்காகவும், அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராஜர், தலைநிமிர்ந்த தமிழகத்தை காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராஜர்.
இத்தகைய பெருமைக்குரிய காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
காமராஜர் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பெருந்தலைவரின் அடைமொழிகளில் முக்கியமானது, ‘கர்ம வீரர்’. செயலில் சிறந்தவர், செயல் வீரர் என்பது தான் கர்ம வீரரின் பொருள்.
அவரது தலைசிறந்த செயலால் தமிழகம் தலைநிமிர்ந்தது. இன்று கல்வி அறிவில் தமிழகம் முன்னேற்றம் அடைந்ததற்கு பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த வரலாற்று திட்டங்கள் தான் அடித்தளம். எந்தவொரு ஏழையும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதில் அவர் தனிக்கவனம் செலுத்தினார். அதிலும் அனைத்து மாணவர்களையும் எந்தவித வேறுபாடுமின்றி படிக்க வைக்க வேண்டும் என காமராஜர் நினைத்தார்.
அன்று அரசாங்க கஜானாவில் பணம் கிடையாது. ஆனால் கிராமங்கள் தோறும் அரசு பள்ளிக்கூடங்களை கட்டினார். பெற்றோர்களோடு சேர்ந்து பிள்ளைகளும் உழைத்தால் தான் 3 வேளை சாப்பாடு சாப்பிட முடியும் என்ற நிலை, ஒரு குடும்பத்தினருக்கு இருந்தது. இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கினார்.
பள்ளிக்கூடம் கட்டியாச்சு, ஆனால் அங்கு மாணவ, மாணவிகளை படிக்க வரவழைப்பது எப்படி? என்பதை படிக்காத மேதை காமராஜர் ஆராய்ந்தார். அதில் உதயமானது, மகத்தான மதிய உணவு திட்டம். இது சாத்தியமா? என கேட்டவர்களுக்கு, என் பிள்ளைங்க படிக்கனும்னா, பிச்சை எடுத்தாலும் படிக்க வைப்பேன் என சூளுரைத்தார். இதற்காக அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தான் பின்னாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தின் மகத்துவத்தை மத்திய அரசாங்கமும் புரிந்து கொண்டது. காமராஜரின் இந்த தொலைநோக்கு பார்வையை அறிந்து யாரும் வியக்காமல் இருக்க முடியாது. எனவே அவர் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார்.
பெருந்தலைவர் 1960-ம் ஆண்டு தமிழகத்தில் பள்ளி படிப்பை கட்டாயம் ஆக்கினார். அதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கொண்டு வந்தார். மேலும் இதனை 11-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தினார்.
1962-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் இதனை அமல்படுத்தினார். மதிய உணவு திட்டம், கட்டாய கல்வி என்பது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. பிறகு மக்களிடையே அது கல்வி புரட்சியாக மாறி வீடுகள் தோறும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே தோன்றியது. அந்த விதை இன்று பெரிய மரமாக விருட்சமாக கல்வி அறிவுமிக்க மாநிலங்களில் தமிழகமும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.
காமராஜரின் எளிமை, நேர்மையான நிர்வாகம், 9 ஆண்டுகள் முதல்-அமைச்சர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என உயர்ந்த பதவியில் இருந்த போதும் அவர் தனக்கென்று எந்தவொரு சொத்தும் சேர்க்கவில்லை. கட்சிக்காகவும், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தார். கொள்கை தலைவர் மட்டுமின்றி நேர்மையான தலைவராகவும் இருந்தவர். இவரை போல் வேறு ஒருவர் இனி இல்லை என்று வாழ்ந்து காட்டிய காமராஜரின் வழியில் நல்ல மனிதர்கள் உருவாக வேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அவசர தேவையாகும்.
காமராஜர் உயர்பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர். காட்சிக்கு எளியவர், சுருக்கமாய் பேசுபவர், செயலில் வீரர், தமக்கென வாழாது நாட்டுக்காக வாழ்ந்த தியாகி, வாழ்நாள் முழுவதும் செல்வ வாழ்க்கையில் நாட்டமின்றி வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மலாவார்.
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கினார். அவரது வாழ்க்கைநெறி இன்றைய அரசியல் வாதிகள் பின்பற்ற தக்கதாகும்.
தனக்கு மட்டும் நன்மை தரும்விதமாக குறுகிய நோக்கில் சிந்திக்காமல், சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் நன்மை தரும்விதமாக சிந்திக்கும்படியாக இன்றைய மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் அதிகாரத்துக்கு வந்த போது காமராஜரின் சிந்தனையில் முதன் முதலில் உதித்தது. அந்த பெருந்தலைவரின் சிந்தனையை நாமும் தொடர்ந்து பின்பற்றுவோம்.