

கதை 1: புதுமுகம்:
"எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல..." தலையை குனிந்தபடி சொன்னான் விக்னேஷ். சிறிது நேரம் அங்கே மெளனம் ஆக்கிரமிப்பு செய்தது.
"சரி உனக்காக நானே பேசறேன்...அதுக்கு சம்மதமா" - கேட்டார் முன்னாள் இயக்குநர் மகாதேவன்.
தலையாட்டி சம்மதம் சொன்னான்.
மறுநாள் அந்த பெரிய பங்களாவின் உரிமையாளர், பிரபல சினிமா தயாரிப்பாளர் சாமியப்பன் முன்னால் அமர்ந்திருந்த மகாதேவனிடம் "போட்டோல பையன் நல்லா இருக்கான்.. உங்க செலக்சன் நல்லாத் தான் இருக்கும்... மேற்கொண்டு என்னான்னு சொல்லுங்க" அவர் கேட்டதும்.. "நான் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுறேன்னு சொல்லிட்டாங்க... நீங்க தாராளமா அக்ரிமெண்ட் போடலாம்..."
"இது என்னோட 25 வது படம். புதுமுகத்தை வச்சு எடுக்கிற பெரிய பட்ஜெட் படம்.. பிரச்சனை எதுவும் வரக்கூடாது..."
"பையன் ஏழை குடும்பத்தை சேர்ந்தவனா இருக்கணும்... ஆனால், பாக்க ஹீரோ மாதிரி இருக்கணும்னு நீங்க சொன்னாதால நான் கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சேன்.. ஸார்.."
"நான் சொல்றபடி பையன நல்லா மாத்தி கொண்டு வாங்க... இண்டஸ்ரியை அவன வச்சு ஒரு கலக்கு கலக்கணும்னு நெனைக்கிறேன்..."
ஓட்டல் ஒன்றில் விக்னேஷுடன் அமர்ந்திருந்த மகாதேவன், "நான் சொல்றபடி கேட்டு நடந்தா ஒரே வருஷத்துல பெரிய ஹீரோ ஆகி கோடி கோடியா சம்பாதிக்கலாம்..."
"சரிங்க ஸார்..." - மெதுவாக சொன்னான்.
"ஸார் ஆ ?... நான் உனக்கு அப்பாடா... இங்கேயாவது அப்பானு சொல்லு. வெளியில யார்கிட்டேயும் சொல்லிடாத. உங்கம்மாவுக்கு நான் தாலிக்கட்டி மனைவியாக்காமல் போனதற்கு செய்யற பரிகாரம் இது..."- என்றார் மகாதேவன்.
கதை 2: தேவை:
"நல்லா விசாரிச்சிட்டேன்... மாப்பிள்ளை ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க..." கவிதா சொன்னதை கேட்டு அப்பா அமைதியாக இருந்தார்.
"என்னப்பா முடிவை சொல்லுங்க.."
"நான் சொல்றதுல என்ன இருக்கு நீயே முடிவு எடு..."
"சரிப்பா எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்.." டூவீலரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பினாள். வழியில் பூ விற்கும் பெண்ணை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பூ வாங்கியபடி, "என்ன ஆச்சு உன்னோட விஷயம்...?" என்றதும், "மாப்பிள்ளை வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க அக்கா.
கூலி வேலை பாக்குறார். வேலைக்கு போக வேண்டாம். தேவைப்பட்டா பின்னாடி பாத்துக்கலாம்னு சொல்றார். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. குடும்பம் நல்ல குடும்பம்ன்னு அம்மா சொன்னாங்க... சரின்னு சொல்லிட்டேன்..." வெட்கத்துடன் சொல்லி முடித்தாள்.
"பரவாயில்லையே... இந்த காலத்துல ஒரு சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியும் என நினைக்கிறாரா...?" சிரித்தபடி அந்த பெண் தலையாட்டி வாழ்த்துகள் கூறினாள்.
ஆபீஸ் வந்து சேர்ந்த கவிதாவிடம் "மேனேஜர் உங்கள கூப்பிடுறார் மேடம்..." பியூன் சேகர் சொல்ல, "அதுக்குள்ளேவா.." சிந்தித்தபடி சென்றவளிடம், "கங்கிராஜுலேஷன்... நீ மேனேஜரா ப்ரொமோட் ஆயிட்டம்மா.. எல்லோருக்கும் தாமதமாக கிடைக்கிறது உனக்கு சீக்கிரம் கிடைச்சிருச்சு. ஆல் த பெஸ்ட்," என்று சொல்லி ஆர்டரை கொடுத்தார்.
'தேங்க்ஸ்' சொல்லிவிட்டு தன் சீட்டுக்கு வந்து அமர்ந்த பிறகு, மேனேஜர் சொன்ன 'எல்லாருக்கும் தாமதமாக கிடைக்கிறது உனக்கு சீக்கிரம் கிடைச்சிருச்சு' அந்த வார்த்தையை நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். எதிரே மாட்டியிருந்த மதுரை மீனாட்சி படத்தை ஒரு முறை பார்த்தாள். ஒரு முடிவோடு அப்பாவிடம் சொல்ல நினைத்து மொபைலை எடுத்து...
"எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. மனசு நிறைவா இருக்குப்பா. நான் எதிர்பார்த்தது கிடைச்சிருச்சு. அது போதும். நீங்க எனக்கு கொடுக்கப்போற ப்ரோமோஷன் தான் இப்ப எனக்கு பெருசா தெரியுது. இந்த வயசுல எனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்திருக்கிறீங்க. அதனால், அவர் சொன்னபடி வேலையை விட்டுடுறேன். தேவைப்பட்டா பின்னாடி பாத்துக்கிறேன்."
40 வயதை கடந்த கவிதா மனதில் 'நம் வாழ்க்கைப் பாதையை மாற்றி நமக்கு புதிய வழியை காட்ட யாரவது ஒருத்தங்களை மீனாட்சி அனுப்பி நம் தேவைகளை நிறைவேற்றி வைப்பா..' யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் கண்ணில் அந்தப் பூக்கார பெண் வந்து போனாள்.