சிறுகதை: காடு

கதைப் பொங்கல் 2026
kaadu tamil short story
ministers team and bank officers teamAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

நாட்டின் நிதி நிலைமை பற்றி, நிதியமைச்சர் கேட்க, “ஸார், நம்ம நாட்டோட நிதி நிலைமை அதலபாதாளத்தில் இருக்கு” கவலையாக தெரிவித்தார் நிதித்துறை செயலாளர்'

"அப்படியா…? நான் சி.எம்-கிட்ட சொல்லிடறேன், மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க,” என்றார்.

கூட்டம் நடைபெற்றது… ஆலோசனைகள் வழங்கினார்கள். ஒன்றும் உருப்படியாய் இல்லை.

ஒருத்தர், "ஸார் , நாம ஏற்கனவே உலக வங்கில ஏகப்பட்ட கடன் வாங்கிட்டோம். அவங்க தரமாட்டாங்க.. அதனால, சில நாடுகள் சேர்ந்து புதுசா ஒரு 'பேங்க்' திறந்திருக்காங்க… அதுல வாங்கலாமே” என்று சொல்ல, அதையே ஆமோதித்தனர்

முதலமைச்சர் நிதியமைச்சரைப் பார்க்க… நிதியமைச்சர் பி.ஏ-வை பார்க்க, பி.ஏ. தொடர்புடைய துறையின் செயலாளரைப் பார்த்தார்.

துறைச் செயலாளர், வேகமாக போய், பிரிவின் அலுவலரிடம் விவரம் சொல்லி கோப்பு தயார் செய்ய சொன்னார்.

“புதிய வங்கியில், கடன் பெற தேவையான ஆவணங்கள் தயார் செய்து, கோப்புடன் இணைக்கப்பட்டு… நிதியமைச்சர் மூலம் முதலமைச்சருக்கு போய்... அங்கிருந்து மைய அரசின் வாயிலாக 'கடன் கேட்பு கடிதமாக' வங்கிக்கு அனுப்பப்பட்டது.

கடிதம் அனுப்பி… ஆறு மாதங்களுக்கு பின்…. மத்திய அரசிடமிருந்து பேக்ஸ் மூலம் சில தகவல்கள் கேட்கப்பட்டன.

வங்கியின் கடிதம், முதலமைச்சரின் பார்வைக்கு பின் முறையாக தொடர்புடைய பிரிவுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி, பதில் அனுப்பப்பட்டது.

வங்கியில் இருந்து கடிதம் வந்தது.

அக்கடிதத்தில், வங்கியின் அலுவலர் குழு, நேரில் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே அலுவலர் குழு வந்துசேர…கடன் கேட்பதற்கான ஆவணங்கள், ஆய்வுக்கு வைக்கப்பட்டன.

ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்… அதில் ஒரு ஆவணத்தை ஒரு ஆய்வு அலுவலர் பார்த்துக் கொண்டிருக்க…. ஓரிடத்தில் அவரின் பார்வை நிலைக்குத்தியது. உடனே அவர் “வாட் அபவுட் பாரஸ்ட் அன்டு சோசியல் பாரஸ்ட் ஏரியா?” என்றார்.

அதிகாரிகளுக்கு ஷாக். 'என்ன இது, நாட்டுக்கு கடன் கேட்டா… இவர் காட்டைப் பத்தி கேட்கிறாரே?' ஒருவாறு சமாளித்து விவரங்கள் தந்து விடுகிறோம் என்றனர். நம்பாமல், நான் பார்க்க வேண்டுமே என்று தேர்வு செய்த இடங்களில் ஆய்விட்டதில், காடுகள் அழிந்து…. கட்டாந்தரையாகி விட்டிருந்தன. அவருக்கு அதிருப்தி.

அவர்களை அனுப்பி விட்டு, தத்தம் அறைகளில், ஒருவருக்கொருவர் தொலைபேசியில்…. "என்ன ஸார் இது, கடனுக்கும் காட்டுக்கும் என்ன சம்மந்தம்? ஒருவேளை, ஆசாமி, ஒருமாதிரியோ?” என கிசுகிசுத்தனர்.

ஒரு வழியாக…. மாவட்டவாரியாக பாரஸ்ட் ஏரியா கணக்கெடுத்து விவரங்கள் அனுப்பப்பட்டன.

வங்கியின் செயலாளரிடமிருந்து கடிதத்தில், "உங்க நாட்டுல, பாரஸ்ட் ஏரியா சராசரிக்கும் குறைச்சலா இருக்கே, என்ன நடவடிக்கை”? கேள்வியாக வந்தது.

திரும்பவும், அந்தக் கடிதம், ஒவ்வொருவரிடமாக போய்.... கடைசியில் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு போன போது… பிரிவின் புது அலுவலர், புதிய பணியாளர்கள் மிரண்டர்கள். மிரட்சிக்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அறிக்கை தயார் செய்து.. நிதியமைச்சருக்கு அறிக்கை அனுப்பவதற்குள்…..

'மினிஸ்டர்கள் போர்ட்போலியோ' மாறிவிட்டது. செகரட்டரி, புதிய நிதியமைச்சரிடம் விளக்கி கையெழுத்து வாங்குவதற்குள்… போதும்.. போதுமென்றாகி விட்டது!

மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்தனர்.

“வங்கி செயலர் வந்தால், காடுகளின் விவரம் கேட்டு, காடுகளைத் தேடிப் போவார் போலிருக்கே! முன்பு வந்த ஆய்வு அலுவலர், ஒரு மாதிரியாத்தான் இருந்தார்ன்னா.. இவருமா..." கிசுகிசுத்துக் கொண்டனர்.

அவர் வருவதற்குள் ஏதாவது செய்யவேண்டுமே! அப்பொழுதுதானே கேட்ட கடன் கிடைக்கும், ஆலோசித்து… முடிவில் ஒவ்வொரு ஊராட்சியும், புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, அதன் முன்னேற்றம் குறித்து அறிக்கையாக அனுப்ப, மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: Judge அம்மா தீர்ப்பு!
kaadu tamil short story

ஆணை வெளியிடப்பட்டவுடன்…. ஊராட்சி தலைவர்கள் பம்பரமாய் சுற்றினார்கள். இப்படி ஆரம்பித்த பணி முடிவதற்குள் …. அடுத்த தேர்தல் வர இருந்தது. தேர்தலுக்குள் கடன் வாங்கி நிலைமையை சரி செய்தாக வேண்டும் என பதைப்பு ஏற்பட்டது.

மீண்டும்...மீண்டும் ... வங்கிக்கு கடிதம் அனுப்பி கடன் கேட்க… ஒரு நாள், வங்கியின் செயலாளார் நேரில் வந்து விட்டார். மறுபடியும் ஆலோசனைக் கூட்டம் முடித்து மாவட்டத்தில் சில இடங்களை தேர்விட்டு ஆய்விட்டனர்.

சென்ற இடங்களில் எல்லாம் இப்பொழுது, பசுமைக் கண்ணைப் பறித்தது. வங்கியின் செயலருக்கு திருப்தி என்பதை முகமே காட்டிற்று.

“வெல்டன்...வெல்டன்…” என பாராட்டினர்.

மறுநாள் கூட்டத்தில், வங்கி செயலர், தனது உரையை ஆரம்பித்து….. “முன்னர் ஆய்வுக்குழு வந்தபோது உள்ள நிலைக்கு… இப்போதுள்ள நிலை திருப்தியாக உள்ளது என பாராட்டி….. சற்று நிறுத்தி...

“என்ன வளம் இல்ல இந்த திருநாட்டில்,

ஏன் கைய ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?”

"இது, உங்க லீடர்ஸ்ல ஒருத்தர் பாடினது தானே?" என்று தட்டுத்தடுமாறி அவருடைய பாணியில் கேட்டர்.

வெளிநாட்டுக்காரர்…. தமிழ்ல… பாட்டை.. பாட... இன்ப அதிர்ச்சியில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கொடி!
kaadu tamil short story

“இப்ப கேளுங்கோ... உங்களுக்கு எவ்ளோ பணம் கடனா வேணும்?”-ன்னு கேட்டர்.

என்ன முடிவு எடுப்பது என்பது புரியாமல், "மீட்டிங் போட்டு முடிவு செய்து கடிதமா அனுப்புறோம், நன்றி..." என முடித்துக் கொண்டனர்.

கூட்டத்தின் மினிட்ஸ், மறுபடியும் ஒவ்வொருவரிடமாக போய், கடைசியில் தொடர்புடைய பிரிவுக்கு போனது. அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதற்குள் ….. பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிந்து விளைச்சல் அமோகமானது …. நிதிநிலைமை பரவாயில்லை என்ற நிலைமையை எட்டியது.

மறுபடியும், கூட்டம் நடத்தி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

வங்கி செயலருக்கு எழுதிய கடிதத்தில்,

"எங்கள் நாட்டிற்கு கடன் வழங்க ஒத்துழைப்பு வழங்கிய தங்களுக்கு நன்றி …... சமயத்தில் நீங்கள் பாடலை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க...மிக்க நன்றி… அந்தப் பாடலில் உள்ள 'இரண்டாவது வரியே' எங்களின் தற்போதைய கொள்கையாகும்” என முடிக்கப்பட்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com