

ஆர்த்தியும் நானும் ஸ்டுட்கார்ட் அடைந்தபொழுது மதியம் ஆகி இருந்தது. ஜெர்மனி, பொறியியல் விந்தை தேசம் என்றால், ஜெர்மனியின் தென்புறம் அமைந்துள்ள ஸ்டுட்கார்ட்டோ மோட்டார் கார்களின் விந்தை நகரம்.
உலகப்புகழ் பெற்ற மெர்சிடெஸ் பென்ஸ், போர்ஷே, டெய்ம்ளர் போன்ற மேட்டார் கார்கள் தயாரிக்கப்படும் ஆலைகள் நிறைந்த நகரம்.
ஆகஸ்ட் மாத வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வீட்டுத் தோட்டங்களில் வண்ண வண்ண ரோஜாக்கள் மலர்ந்திருந்தன.
மகள் அஷ்மிதா நிறைமாதக் கர்ப்பிணி. எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலை.
வயிற்றை தள்ளிக் கொண்டு வீட்டின் வெளியே வந்து வரவேற்றாள். கர்ப்பம் என்பது இயற்கை என்றாலும் அவள் வயிறு தள்ளிக்கொண்டு நடந்து வந்தது என் மனதை ஏதோ செய்தது.
எங்களைப் பார்த்ததின் சந்தோஷம் மகள் முகத்தில் தெரிந்தது.
“என்னம்மா, எல்லாம் நார்மல் தானே?” என்றாள் ஆர்த்தி அஷ்மியிடம். அஷ்மிதாவை நாங்கள் அஷ்மி என்று தான் அழைப்போம்.