

பத்து வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரான வேலூரில் நடைபெறும் என் தம்பியின் திருமணத்திற்காக நான்கு நாட்கள் முன்னதாகவே மும்பையிலிருந்து சென்னை வந்தடைந்தேன், என் மனைவி மற்றும் மகனுடன்.
நான் கேட்டுக் கொண்டதின் பேரில் மும்பையில் என்னுடன் பணிபரியும் தோழர், சென்னையில் உள்ள அவரது தம்பியிடம் கூறி, நான்கு நாட்களுக்கு கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரும்படி கூறியிருந்தார். அவரும் காருடன் சென்னை விமான நிலையத்தில் எனக்காக காத்திருந்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவருக்கு போன் செய்தேன். அவர் காருடன் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு காரை என்னிடம் ஒப்படைத்தார். நன்றி கூறி BMB காரை பெற்று கொண்டு, நான் அவருக்காக வாங்கி வந்த சின்ன பரிசு ஒன்றினை தந்தேன். அவரும் "நன்றி" என கூறி பெற்றுக் கொண்டார். மீனம்பாக்கத்தை விட்டு புறப்பட்டோம்.