'சிட்டாப் பறந்திட்டான்!' என்று
சொல்லிய மனிதர்களைப் பார்த்து
பெருமைப் படுத்துவதாய் எண்ணி
பெருவானில் சிறகடித்து மகிழ்ந்ததெல்லாம்
வீணாய்ப் போனதை இன்று
விபரமாய் அறிந்து கொண்டோம்!
செய்தித் தொடர்புக்காய் அவர்கள்
கட்டிய கோபுரங்கள் எல்லாமே
எங்கள் வாழ்வுக்கு வைத்த உலையென்று
இப்பொழுது அறிந்து கொண்டோம்
இருந்தாலும் அதன் மூலம்
ஏதும் பயனில்லை எல்லாமே முடிந்திட்டே!
காட்டுக்குள் வீட்டுக்குள் கழனிகளின்
மரங்கள் எங்கும் நாங்கள்
வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தாலே
நெஞ்செல்லாம் இனிக்கிறதே நினைவிலுமே
மணக்கிறதே எங்கள் மகிழ்வான
அந்த இனிய நாட்கள்!
காலைகளில் மாலைகளில் கனிவான
எங்கள் குடும்பத்தார் அனைவருடன்
ஊர்கோலம் போய்த்தானே உங்களனைவரையும்
உற்சாகப் படுத்தி நாங்கள்
ஊக்கத்தை உங்கள் இதயங்களில்
ஒவ்வொரு நாளும் விதைத்துவந்தோம்!
சிந்திய சிறு தானியங்களே
சிறிதான எங்கள் வயிற்றுக்கு
பெரிய விருந்தாகும் பெருமையாய்
அவற்றை உண்டு விட்டே
அங்கும் இங்குமென்று பறந்து
உங்களன்பில் வலம் வந்தோம்!
இன்றோ எங்கள் எண்ணிக்கை
ஏகமாய்க் குறைந்து வருவதை
எல்லோரும் அறிவீர்! இருந்தும்
எங்களுக்குச் சாதகமாய் எந்தமுடிவினையும்
எடுப்பதாய்த் தெரியவில்லை ஆனாலும்
நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை!
ஒவ்வோர் ஆண்டின் மார்ச் 20ல்
சிட்டுக்குருவிகள் எங்கள் தினத்தை
சிறப்பாய்க் கொண்டாடி மகிழ்வதை
உலகெங்கும் உள்ள நாங்கள்
உள்ளத்தில் நன்றியுடன் நினைக்கின்றோம்
நம்முறவு தொடர்ந்து பெருகட்டும்!