

மங்கையர் மலர், ஆகஸ்ட் 01, 2019 இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்கள் பதில் அளித்த 'இவரைக் கேளுங்கள்' கேள்வி பதில் பகுதி ஆரம்பமானது. பல்வேறு தலைப்புகளில் வெளியான இந்த கேள்வி பதில் பகுதியிலிருந்து 'க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ்குமார் பதில்கள் இதோ:
தங்கள் முதல் கதையின் முதல் ரசிகை யார்?
- நளினி ராமச்சந்திரன், கோவைப்புதூர்.
பெயர் கிருஷ்ணவேணி. வயது 40. 1969-ல் என்னுடைய கதை கோவை மாலை முரசு பதிப்பில் வெளியானபோது, கிருஷ்ணவேணி என்னும் அந்த வாசகி, 10 மாலை முரசு இதழ்களை வாங்கிப் பக்கத்து வீடு, அண்டை வீடுகளில் உள்ளவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார். அந்த கிருஷ்ணவேணி யார் என்று கேட்கிறீர்களா? என் தாயார்தான் அவர்!
ஸார், நீங்கள் பள்ளியில் சில காலம் பணியாற்றியதாகப் படித்தேன். பிறகு நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். என்றாவது ஆசிரியர் வேலையிலேயே இருந்து இருக்கலாம் என்று எண்ணியதுண்டா?
- அலமேலு, நாங்குநேரி.
ஒருபோதும் அப்படி நினைத்தது இல்லை. பவானிசாகர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. டிரான்ஸ்பரில் போகப் பிடிக்காததால் வேலையை ராஜினாமா செய்தேன். அப்போது என்னுடைய நண்பர்களும், உறவினர்களும் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், என்னுடைய அம்மாவும், அப்பாவும் உனக்குப் பிடித்ததைச் செய் என்று சொன்னார்கள். நான் அப்பா செய்து வந்த தொழிலுக்கு உதவியாய் இருந்துகொண்டே எழுத்துப் பணியையும் மேற்கொண்டேன். அடுத்த சில வருடங்களில் அப்பாவின் தொழில் நசிந்துபோக, நான் எழுத்துப் பணியில் தீவிரம் காட்டி படிப்படியாக உயர்ந்தேன்.
ஒருவேளை நான் அன்றைக்கு அந்த ஆசிரியர் வலைக்கு டிரான்ஸ்பரில் சென்றிருந்தால், இன்று ஒரு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்திருப்பேன். இப்படி ராஜேஷ்குமாராய் மாறி உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்.
ஒரு கதையை முழுவதும் முடிவு செய்தபின் எழுதுவீர்களா? கதைக்கருவை முடிவு செய்துவிட்டு எழுதும்போதே கதை தானாக முடிவைக் கண்டுபிடிக்குமா?
- மல்லிகா குரு, மேற்கு மாம்பலம்.
ஒரு மசால் தோசையை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். தோசையின் ஓரத்தில் இருந்து சாப்பிடுபவர்களும் உண்டு. நான் தோசையின் நடுவில் கையை வைத்து உருளைக்கிழங்கோடு எடுத்துச் சாப்பிடுவேன். கதையில் முதல் அத்தியாயத்தைப் படிக்கும்போதே,
'கதையின் கரு அழுத்தமாக இருக்கும் போலிருக்கிறதோ' என்கிற எண்ணத்தை வாசகர்களின் மனத்திலே உண்டாக்கிவிடுவேன். கதையின் முடிவையும் முன்பாக யோசித்து வைத்துக்கொள்வேன். ஆனால், அந்த முடிவை வாசகர்கள் யூகித்து விடக்கூடாது என்பதில் ரொம்பவும் ஜாக்கிரதையாய் இருப்பேன். அதில் இதுவரை வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
உங்கள் வாரிசுகள் யாராவது எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்களா?
- வி.கணேஷ், மதுரை.
என்னுடைய இரண்டு மகன்களும் எழுத ஆரம்பித்துள்ளார்கள். ஒருவர் கார்த்திக்குமார் (வங்கி அதிகாரி), இன்னொருவர் ராம்பிரகாஷ் (ஐ.டி. கம்பெனியில் அதிகாரி). இருவருமே சிறுகதைகளை எழுத ஆரம்பித்து விட்டார்கள். எனது பேரன் ஸ்ரீவத்ஸன் (14 வயது) ஆங்கிலத்தில் கதை, கவிதை எழுதி வருகிறான்.
'ஙே' என்று விழித்தான் என்று உங்கள் கதைகளில் எழுதி வந்தீர்கள். இப்போதும் அந்த சுவாரஸ்யமான எழுத்தை எழுதுகிறீர்களா?
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.
அப்படி எழுதியது நானில்லை. எனக்கும் மூத்த எழுத்தாளர் ராஜேந்திரகுமார்தான் அப்படி எழுதுவார். அவர் மறைந்து 20 வருடங்களாகி விட்டன. அற்புதமான எழுத்தாளர்.
சிறுகதை எழுதுவது எளிதா...? நாவல் எழுதுவது எளிதா...?
- ஆர்.பூமாதேவி, புதுச்சேரி,
குழந்தை சிறியதோ, பெரியதோ. ஆனால், பிரசவ வலி ஒன்றுதான்.
உங்கள் முதல் கதை பத்திரிகையில் பிரசுரமானபோது எப்படி உணர்ந்தீர்கள்?
- ஹேமலதா சீனிவாசன், பம்மல்.
முதல் கதையைப் பார்த்த அந்த நிமிஷமே அடுத்த விநாடியே எனது இரு கைகளும் இரண்டு இறக்கைகளாக மாறி இருப்பதை உணர்ந்தேன். வானத்தில் ஒருமுறை பறந்துவிட்டு வந்தேன்.
விவேக் - ரூபலா குடும்பம் பற்றி...?
- என்.சாந்தினி, மதுரை.
தமிழ்நாட்டுக்கே தெரிந்த ஒரு விஷயம். உங்களுக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?
1500 கதைகள் எழுதி சாதனை செய்திருக்கிறீர்கள். என் கேள்வி... புது கதைகளில் பழைய கதைகள் ரிபீட்டாகாதிருக்க என்ன செய்வீர்கள்? அவற்றின் கதைச்சுருக்கங்களை ரெஃபர் செய்வீர்களா?
- கே.குருமூர்த்தி, மேற்கு மாம்பலம்.
நல்ல கேள்வி. முதலில் ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும்முன் அந்தக் கதையின் கரு எனக்கே புதியதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இருந்தாலும், அந்தக் கதையின் கருவை என் மனைவியிடம், 'ஒன் லைனில்' சொல்லி இது மாதிரியான கதையை நான் இதற்கு முன்பு எழுதி இருக்கிறேனா என்று கேட்டு நோ அப்ஜெக்ஷன் சர்ஃடிபிகேட் வாங்கிக்கொண்டு நாவலை எழுத ஆரம்பித்து விடுவேன். ஒரு நாவல்போல் இன்னொரு நாவல் இன்று வரை இல்லை என்பதுதான் பலதரப்பட்ட வாசகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
உங்களுக்கு மிகவும் பிடித்த க்ரைம் எழுத்தாளர் யார்?
- கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி,
மஹாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை எழுதிய வியாசர். அந்த இதிகாசத்தில்தான் எவ்வளவு வில்லன்கள்? எவ்வளவு சூழ்ச்சிகள்? கெளரவர் சபையில் திரௌபதி துகில் உறியப்பட்ட சம்பவம்தான் உலகின் முதல் பாலியல் பலாத்காரம். போரில் பாண்டவர்களை வெல்ல கிருஷ்ணர் போட்ட திட்டங்கள் எல்லாமே எவ்வளவு கூர்மையானவை... துல்லியமானவை...! மஹாபாரதத்தை மறுபடியும் ஒருமுறை படியுங்கள். வியாசரை உங்களுக்கும் பிடித்துப்போகும்.
நான் இதுவரை பல கதைகள் எழுதி அனுப்பியும் எந்தப் பத்திரிகையும் (மங்கையர் மலர் உட்பட) என் கதையைத் தேர்வு செய்து பிரசுரிக்கவில்லை. கதை என்பது உண்மைச் சம்பவமாக இருக்க வேண்டுமா? கற்பனையாக இருக்க வேண்டுமா?
- ப்ரீதா ரங்கசாமி, மயிலாப்பூர்.
கதை கற்பனையாக இருந்தாலும் சரி, உண்மைச் சம்பவமாக இருந்தாலும் சரி, சொல்லப்படும் விதம், அதாவது நடை, மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். படிக்கும் வாசகர்களை தன்வசப்படுத்தப் புதுப்புது வார்த்தைகளை யோசித்துப் போடவேண்டும். கதையின் முடிவு எதிர்பாராதவிதமாகவும், ஒரு பயனுள்ள செய்தியை சொல்லக்கூடியதாகவும் இருக்கவேண்டும். (இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுடைய கதையை மங்கையர் மலரில் நான் எதிர்பார்க்கிறேன்).
சொந்த ஊரில் பெற்றோர்களை வைத்துவிட்டு வெளிநாடுகளில் செட்டிலாகி வேலை செய்யும் பிள்ளைகள் பற்றி...?
- சி.கார்த்திகேயன், சாத்தூர்
டாலர்களின் மழையில் நனைவதற்காக உண்மையான சொர்க்கத்தை விட்டுவிட்டு இரவல் சொர்க்கத்தில் வாழ விரும்புபவர்கள். வயதான காலத்தில்தான் பெற்றோர்களுடன் இருக்கவேண்டும் என்று எந்த மகன் நினைக்கிறானோ அவனே தங்க மகன். அம்மா - அப்பாவை விட்டு விலகுபவன் உண்மையான இந்தியனாய் இருக்கமுடியாது; அவன் அந்நியன்.
பத்திரிகை, பாக்கெட் நாவல், சின்னத்திரை, வெள்ளித்திரை இவற்றின் படைப்புகள் கற்பனை, எழுத்து, நடை, நேரம் எல்லாம் எப்படி மாறுபடும்?
- சுவர்ணா, பொள்ளாச்சி
எந்த வேளைக்கு எது முக்கியம் என்பதைப் பொறுத்தும், கேட்பவரின் நம்பகத்தன்மையைப் பொறுத்தும், அது மக்களால் விரும்பப்படுமா என்பதைப் பொறுத்தும் நீங்கள் சொன்ன நான்கும் மாறுபடும்.
தங்களால் மறக்க முடியாத வாசக விசிறி அனுபவம்?
- சாந்தி, திருவாரூர்.
சிகாக்கோ நகரில் தன் மகனோடு இருக்கும் ஜெயகாந்தி அம்மாள் என்கிற 88 வயது வாசகி என்னைப் பார்த்துப் பேசுவதற்காக 27 மணி நேரம் விமானப் பயணம் செய்து என் வீட்டுக்கு வந்து 3 மணி நேரம் பேசியதும், எனக்கு வாட்ச்சையும் பேனாவையும் பரிசளித்ததும் அவ்வளவு சுலபத்தில் மறக்கக்கூடிய ஒன்றா என்ன?
கேன்சர் சர்வைவரான எனக்கு ஒரு எனர்ஜி மொழி சொல்லுங்களேன்...?
- மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
நீங்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இறைவனின் கருணை மழை எப்போதும் உங்கள்மீது பொழிந்துகொண்டே இருக்கிறது: உப்பை, நீர் கரைப்பதுபோல் உங்கள் நோயை அது மருந்தாய் மாறி கரைத்துவிடும். நலம் பெறுவீர்கள். இது உறுதி.
ரஜினி, கமல் இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால் ஆட்சியைப் பிடிப்பார்களா?
- அயன்புரம் சத்தியநாராயணன், பட்டாபிராம்.
நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் திருவண்ணாமலையில் இருக்கும் 'முக்கால ஞானி' என்கிற ஜோஸியருக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன். பதில் எப்படியும் 2021 மே மாசம் முடிவதற்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து எனக்கு பதில் வந்ததும் உடனே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
என் போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?
- செல்லம் ஜெரினா, பெரும்பாக்கம்.
எந்தத் துறையில் யார் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று விரும்பப்படுகிறார்களோ அவர்கள் அந்தத் துறையைச் சேர்ந்த நிபுணரிடம் போய் பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் ஒரு எழுத்தாளரை அப்படி பயிற்சியின் மூலம் உருவாக்கிவிட முடியாது. ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள் சுயமாக உருவாக வேண்டும். அவனே குருவாகவும், சிஷ்யனாகவும் இருந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எழுதிய கதை பிரசுரமாகாவிட்டால் சோர்ந்து விடக்கூடாது. தோல்வியை ஒப்புக் கொள்ளக்கூடாது. தொடர்ந்து எழுத வேண்டும். உங்களுக்கு கதை - எழுத வருகிறது என்றால் அது ஒரு வரம். அந்த வரத்தை சோம்பலுக்குப் பலி கொடுத்துவிட வேண்டாம். உங்கள் எழுத்தை காதலித்து எழுதுங்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை வித்தியாசமாக யோசித்து புதுமையான முடிவைக் கொடுங்கள். எந்த ஒரு கதை எழுதினாலும் அதில் ஒரு நேர்மறையான தாக்கம், ஒரு நீதி, பொயடிக் ஜஸ்டீஸ் இருக்கும்படியாய் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து எழுத எழுத எழுத்து உங்களுக்கு வசமாகிவிடும்.
தங்களுடைய எழுத்தே தங்களுக்குச் சவாலாக அமைந்தது எப்போது?
- ரெ.கயல்விழி, வடுகப்பட்டி.
அது சிறுகதையோ, நாவலோ எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு எழுத்தும் சவால்தான். ஒரு சவாலை வெற்றிகரமாய் முடித்ததும் இன்னொரு சவால் தயாராக இருக்கும். அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி.
க்ரைம் கதை எழுத பெண் எழுத்தாளர்கள் இல்லாமல் போனது ஏன்?
- ரம்யா ராமகிருஷ்ணன், அறந்தாங்கி.
ஆண், பெண் ஹார்மோன்கள் வித்தியாசப்படுவதால் அது ஹார்மோன்களின் பிழை என்கிறது ஒரு உயிரியல் விஞ்ஞான ஆய்வு. அரிதாக எனக்குத் தெரிந்து தமிழில் க்ரைம் நாவலாசிரியை வை. மு. கோதைநாயகி அம்மாள் 1900களில் 115 நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டி (1890-1976) ஆண்டுகளில் ஒட்டுமொத்த வாசகர்களையும் க்ரைம் நாவல்களால் கட்டிப்போட்டவர்.
மக்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதை எண்ணி வருத்தப்பட்டதுண்டா?
- வசந்தி மதிவாணன், அரூர்.
குறைந்துவிட்டது என்று யார் சொன்னார்கள்? இளைய தலைமுறை இணையதளங்களில் படிக்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் புத்தக வாசிப்பைத் தொடர்கிறார்கள். வருடாவருடம் சென்னையில் மிகப் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்து வருவது உங்களுக்குத் தெரியாதா?
கதை எழுதுவதற்கு தனித் திறமை வேண்டுமா? கற்பனை வேண்டுமா?
- சூடாமணி, ஸ்ரீரங்கம்.
முதலில் முயற்சி வேண்டும். பிறகு எழுதி எழுதி பயிற்சி பெற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து எழுதப் பொறுமை வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப கால எழுத்தாளர்க்கும் இந்த மூன்று 'வேண்டும்' அவசியம் வேண்டும்.
1500 நாவல்கள், 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் எழுதியுள்ள தாங்கள் தங்களின் சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?
- வித்யா, லால்குடி.
இவை எல்லாவற்றைக் காட்டிலும் (1969லிருந்து 2019வரையுள்ள) இந்த 50 ஆண்டுகால எழுத்துப் பணியைத்தான் சாதனையாக நினைக்கிறேன்.
'பாக்கெட் நாவல்'தான் உங்களை அதிக வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்த்ததாக நினைக்கிறீர்களா?
- பாலகிருஷ்ணன், மதுரை.
பாக்கெட் நாவல்தான் பாமர வாசகர்களை ஈர்த்தது. அதற்குப் பிறகு எல்லா வயதினரும் அதைப் படிக்க ஆரம்பித்தார்கள். நான் எழுதிய பாக்கெட் நாவல்கள் பொழுதுபோக்குவதற்காக எழுதப்பட்டவை அல்ல என்பதை காலப்போக்கில் எல்லோரும் புரிந்துகொண்டார்கள். வார இதழ்களில் வந்த தொடர்களையும் படித்தார்கள்.
எழுத்தாளர் என்பவர் மக்களின் பொழுதுபோக்குக்காக எழுத வேண்டுமா? அல்லது சமூக மாற்றத்துக்காக எழுத வேண்டுமா?
- யாழினி பர்வதம், சென்னை.
ரயில் பாதுகாப்பாக குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென்றால் இரண்டு தண்டவாளங்கள் தேவை.
தாங்கள் எழுதிய காலத்திற்குப்பின் புதிதாக பிரபல எழுத்தாளர்கள் உருவாகாமல் போனதுக்குக் காரணம் என்ன?
- சதாசிவம், திருநெல்வேலி.
24 கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். இந்த 25வது கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
(மங்கையர் மலர் டிசம்பர் 16 – 31, 2019 இதழிலிருந்து)
குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை.