

காலை ஆறு மணி இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊட்டியின் அருமையான குளிரில் காலை விடிந்ததுகூடத் தெரியவில்லை. வானம்கூடக் கண்ணை திறக்கவில்லை. எல்லோரும் உறங்கிகொண்டிருக்கும் நேரத்தில் இந்த மகேஷ் தெருவிலுள்ள எல்லோரையும் கத்தி எழுப்பினான்..
“அய்யோ.. ஐயா.. ஐயா.. அம்மா... போயிட்டங்களே.. அய்யோ” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினான்..
சோபாவில் உட்கார்ந்தபடியே வாயில் நுரை தள்ளி சதாசிவம் ஐயாவும் அவருடைய மனைவியும் இறந்துகிடந்தார்கள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு போன் செய்யவே அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
போலீஸார், டப் டப் என ஷு சத்தத்தோடு உள்ளே வந்தார்கள். தெருவே அங்கு கூடி இருந்தது. எல்லோரையும், “நகருங்கள்!!! நகருங்கள்!!” என்று கூச்சலிட்டு விலக்கினார்கள். பிறகு மகேஷை கூப்பிட்டு விசாரித்தார்கள்.
“என்ன ஆச்சு? நீ எப்ப கதவ தொறந்த?? என்ன விஷயம்?? கொஞ்சம் அழுகையை நிறுத்திட்டு ஒழுங்கா சொல்லு” என்றார் இன்ஸ்பெக்டர்..