
மனித வாழ்வை இசை, ஓவியம், நடனம், நாடகம் போன்ற நுண்கலைகள் செம்மைப்படுத்துகின்றன. சென்னை நாடக சபாக்களில் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு நல்ல சமூக கருத்துக்களையும், ஆன்மீக கருத்துகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் பிரபல நாடகக் கலைஞர் கலைமாமணி குடந்தை மாலி தனது 91ஆம் வயதிலும் நாடக உலகிற்கு ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியவை.
அன்னாரின் ’கண்ணன் வந்தான்’ என்னும் நாடகத்தை சமீபத்தில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தற்போதைய அரசியல் உலகதையும் ஆன்மீக உலகத்தையும் அலசும் விதமாக பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
நாடகம் முடிந்ததும் தன்னுடைய சுவாரஸ்யமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் குடந்தை மாலி. அப்போது அரசியல் விமர்சகர் திருசக்தி சுந்தர்ராமனும் உடனிருந்தார். மாலி அவர்களைக் குறித்தும் அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து ஒரு சில விஷயங்களும் இனி உங்களுக்காக...
N.மகாலிங்கம் என்கிற குடந்தை மாலி 1957ம் ஆண்டில் நாடகவுலகில் முதன்முதலில் அடியெடுத்து வைத்தவர். இன்றும் தமது நாடகங்கள் மூலம் கலைவுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்டு வருபவர். 2003 ஆம் ஆண்டு சமூக நீதியை மையப்படுத்தி அரங்கேற்றபட்ட அவரின் ஞானபீடம் நாடகம் 150 காட்சிகளை தாண்டி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
சிலம்புச் செல்வர் மா.பொ.சி அவர்களால் அவருக்கு 'குடந்தை மாலி' என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது. இவர் எழுதிய அனைத்து நாடகங்களும் சமுதாயத்தை மேம்படுத்துவதிலும், இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். இதுவரை 40 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அதில் இவர் எழுதிய நாடகங்கள் 23. மற்றவர்கள் எழுதியுள்ள நாடகங்களில் அரங்கேற்றியுள்ளது 17. பிரபல எழுத்தாளர்களான நா. பார்த்தசாரதியின் 'குறிஞ்சிமலர்', திருப்பூர் கிருஷ்ணனின் 'பொய் சொல்லும் தேவதைகள்', சூடாமணியின் 'ஆழ்கடல்', ஏ.கே.பட்டுசாமியின் 'கடவுள் எங்கே' ஷ்யாமளா ராவின் 'மன்னிக்க வேண்டுகிறேன்', கோவை அனுராதா போன்றவர்களின் இவர் அரங்கேற்றியுள்ள நாடகங்களில் இவற்றுள் அடங்கும்.
இவரது நாடகங்களை பாராட்டாதவர்களே கிடையாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஔவை T.K.சண்முகம், பாரதி கலைஞர் S.V.சகஸ்ர நாமம், V.S.ராகவன், கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி S.S.வாசன், நாடகக்காவலர் R.S.மனோகர் போன்ற ஜாம்பவான்கள் இவர் நாடகத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக R.S.மனோகர் அவர்களுக்கு 'அன்னை சாரதாதேவி' நாடகத்தை எழுதிக் கொடுத்துள்ளார். மாலியின் 'நம்மவர்கள்' மத நல்லிணக்க நாடகத்தை படித்துவிட்டு மேதகு அப்துல்கலாம் அவர்கள், அவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டியுள்ளார்.
இவரது நாடகங்களை பாராட்டாத பத்திரிகைகளே கிடையாது. ஒரு கூர்வாள் சாதிக்க முடியாததை ஒரு பேனாமுனை சாதிக்க முடியும் என்பதை மாலி தன் உயிரோட்டமான சமூக பிரச்சனையுடன் கூடிய நாடக வசனங்களின் மூலம் நிரூபித்து வருபவர்.
இதுவரை இவர் பெற்ற விருதுகள் மொதம் 30. மூன்று தலைமுறை நாடகக்காரர்களை சந்தித்த இவர், நிஜவாழ்வில் நாடகத்தை நேசித்தும் சுவாசித்தும் கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைநகரங்களிலும் நாடகங்களை அறங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை இவரது நாடகங்கள் 4000 காட்சிகளுக்கும் மேலாக அரங்கேறியுள்ளன.
தொடர்ந்து நாடக உலகில் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நாடகங்களை இயக்குவதும், நடிப்பதுவும்தான் தன் வாழ்நாள் இலட்சியமாக கொண்டுள்ள அவரின் கலை உலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்தி விட்டு அவரிடமிருந்து விடை பெற்றேன்.