

1956 அரியலூர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான துயரச் சம்பவம், அதிகாரத்தில் இருந்த லால்பகதூர் சாஸ்திரியை ஆழமாக உலுக்கியது. நேரடி காரணம் இல்லாவிட்டாலும், தார்மீகப் பொறுப்பை உணர்ந்து அவர் பதவியைத் துறந்தார். இத்தகைய உயர்ந்த பண்பும், பொது நலனுக்காக பதவியை துச்சமாக மதிக்கும் அரசியல் கலாச்சாரமும் இன்று அரிதாகிவிட்டதென எழுத்தாளர் வரலாற்றை நினைவூட்டுகிறார்.
மறக்க மனம் கூடுதில்லையே! - 1
அது 1956 ஆம் ஆண்டு.
நவம்பர் 23 அதிகாலை.
காலை ஐந்தரை மணி வரை அரியலூர் மருதையாற்றுப் பாலம் அமைதியாகத்தான் இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு பேரவலம் நிகழப்போவதை அப்போது அது உணர்த்தவில்லை.
முந்தைய நாள் இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட தூத்துக்குடி விரைவு வண்டி தனது 13 பெட்டிகளில் சுமார் 800 பயணிகளுடன் ஐந்தரை மணிக்குப் பாலத்தைக் கடந்த போதுதான், அந்தப் பெருவிபத்து நிகழ்ந்தது. எஞ்சினும் 7 பெட்டிகளும் தடம் புரண்டதில் ஏறக்குறைய 200 பேர் நீர்ச்சுழலில் சிக்கிக் கொள்ள, பெருஞ்சப்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துக் கிராம மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பலரைக் காப்பாற்றினர்.
இருப்பினும், அந்த அதிகாலை வேளையில் இரக்கம் சிறிதுமில்லாத யமன் 150 உயிர்களைத் தன் வசமாக்கிக் கொண்டான். உதிரங்கலந்த ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்க, விபத்தைக் கண்டவர்கள் கலங்கி, மயங்கி நிற்க, வரலாறு தன் வருத்தமான பக்கங்களைப் பதிவு செய்து கொண்டது.
அழுது கொண்டே பிறப்பவன் இறுதியிலாவது அமைதியாகச் சாக வேண்டும். உற்றார், உறவினர் ஒரு புறமிருக்க, மனதுக்குப் பிடித்தோர் மனம் வாடி அருகிருக்க, அந்த அமைதியிலேயே ஆழ்ந்து விட உயிர் பிரிந்தால், அதுவே நல் சாவு! அனாதையாய்ச் செத்தால் ஆன்மாவும் பரிதவிக்கும்.
“கூழான உடல்களும், குறைபட்டுச் சிதறிக்கிடந்த உறுப்புகளும், கண்முன்னால் தோன்றிக் கலங்கடிக்குது வாழ்க்கையினை” என்று விபத்தை நேரில் கண்ட ஒருவரின் கூற்று, அவ்வளவு எளிதாக மறக்கக் கூடியதன்று!
காட்டாற்று வெள்ளம் தன் கைவரிசையைக் காட்ட, அப்பாவி உயிர்கள் 150 ஆற்றோடு போயிற்று!
செய்வதறியாது திகைத்து நின்றது ரயில்வே துறை!
உச்சக் கட்டப் பொறுப்பில் இருந்தவர் உயரங்குறைவான லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்! - மத்திய ரயில்வே துறை அமைச்சர்.
பார்த்தார் நிலைமையை! உள்ளம் வருந்தினார். என்ன செய்து இந்தப் பாவத்தைப் போக்குவதென்று பதைபதைத்தார்.
உடனடியாக விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுத் தன் பதவியை ராஜினாமா செய்தார்! இந்தப் புனித மண் புத்தர்களையும், காந்திகளையும் மட்டும் ப்ரடியூஸ் செய்யவில்லை. புனித எண்ணம் கொண்டோரையும், நடக்கின்ற தவறுக்குத் தாங்கள் நேரடிக் காரணம் இல்லையென்றாலுங்கூட, பதவியைத் துச்சமாக மதித்து நடக்கும் பண்பினையும் கொண்ட பண்பாளர்களையும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டுதான் இருந்திருக்கிறது.
அது போன்ற பண்பாளர்களை இனியும் நாம் காண்பதெப்போ?!
******
மறக்க மனம் கூடுதில்லையே! - 2
அது 1963 அக்டோபர்!
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் பதவியேற்று, புகழின் உச்சக் கட்டத்தில், அகில இந்திய அளவில் அதிகாரப்புகழ் பெருகியிருந்த நேரம், கர்ம வீரர் காமராஜருக்கு! ஒன்பதே ஆண்டுகள் ஆண்ட அவருக்கு, கட்சியைக் காப்பாற்ற வேண்டும், இளைஞர்களுக்கு வழி விட்டு உயர்த்த வேண்டுமென்ற உன்னத ஆசை உள்ளத்தில் தீபமாய் எரிய ஆரம்பிக்கிறது. தமிழக அரசியல் மட்டுமன்றி அகில இந்திய அரசியலுமே அவரைத் தூக்கிக் கொண்டாடிய நேரமது! இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவர் கருத்தே அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.
யோசித்தார்!
தானே அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்தார்.
தன் முதல்வர் பதவியை மனமுவந்து ராஜினாமா செய்தார்!
மூத்தவர்கள் வழிகாட்டியாய் நின்று வருங்காலத்தினர் தழைக்க உறுதுணை புரிய வேண்டுமென்று அவர் எடுத்த முடிவுகள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றன. அதற்குக் காமராஜர் திட்டம் (Kamaraj Plan) என்றே பெயரும் வந்தது.
முதல்வர் பதவி, அகில இந்தியப் புகழ், பதவி தரும் அதிகாரம் இவை எதைப்பற்றியும் கொஞ்சமும் அவர் கவலைப்படவில்லை.
இளைஞர்களும், அவர்களின் வளர்ச்சியும் எழுச்சியும் மட்டுமே அவர் இதயத்தை நிறைத்திருக்க வேண்டும்.
மக்கள் நலன் குறித்தும், இந்தியாவின் எதிர்காலமும் குறித்தே அவர் எப்பொழுதும் எண்ணியிருந்தால் அல்லவோ அம்முடிவை எடுத்திருப்பார்!
அக்காலத் தலைவர்களின் எண்ணமெல்லாம் சுய நலம் சார்ந்ததல்ல. பொது நலன் பெருக தங்களால் ஆன அனைத்தையும் செய்வதையே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
அந்தப் புனிதர்கள் வாழ்ந்த மண்ணில் பிறக்கவும், வாழவும் நமக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்று எண்ணும்போதே இதயம் துள்ளுகிறது!
அவர்கள்வழி நடந்தால் நம் வாழ்வு எவ்வளவு சிறக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ!
தலைவர்களின் சுயநலமற்ற தியாக வரலாறுகளைப் படிப்பதன் மூலம், உண்மையான தலைமைப் பண்பு மற்றும் சமூக நலன் சார்ந்த சிந்தனைகளை உங்கள் வாழ்வில் உத்வேகமாகப் பெற்றுச் செல்லலாம்.