

காவல் துறையினரின் அட்டகாசம், லாக்கப் மரணங்கள் குறித்து கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இந்த கட்டுரை காவலர்களின் மனிதநேய பக்கத்தையும் வெளிச்சமிடுகிறது. 1452 காவல் நிலையங்கள், ஆயிரக்கணக்கான கிராமங்கள், அடிப்படை வசதிக்காக போராடும் மக்களை சமாளிக்கும் பொறுப்பு எல்லாம் அவர்கள்மேல். மேலதிகாரி உத்தரவு, விடுப்பு இல்லாமை, தூக்கக் குறைபாடு, குடும்பத்திலிருந்து விலகல் ஆகிய மன அழுத்தங்கள் அவர்களை கடுமையாக பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
காவல் துறையினரின் அட்டகாசம் அதிகமாகி விட்டதென்றும், லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனவென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அது உண்மையுங்கூட! தென் மாவட்டங்களிலிருந்து வரும் செய்திகள் நெஞ்சைப் பிழிவதாகவே உள்ளன. இரக்கமே இல்லாமல், இரவு, பகலென்றும் பாராமல் அடித்தே சிலரைக் கொன்று விடுவதாகப் போலீசார் மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது 1452 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மகளிர் (198-202), போக்குவரத்து (280+) மற்றும் ரயில்வே (47) காவல் நிலையங்களும் இதில் அடக்கமென்று அந்தச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் 12525 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் வருவாய்க் கிராமங்களின் எண்ணிக்கையோ தோராயமாக 16000 லிருந்து 17000 இருக்கலாமென்றும் கூறப்படுகிறது.
ஊராட்சி மன்றங்களையே கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சுமார் 9 கிராமங்களைக் (12525/1452=8.63) காக்க வேண்டியுள்ளது.
போலீஸ் வேலை யூனிஃபார்ம் டூட்டி என்பதால், அங்கு உயரதிகாரிகளின் ஆணைகளுக்கு அடி பணிவதே கீழுள்ளவர்களின் கடமை. தமக்கு மேலுள்ள ஆபீசர்கள் தவறான முடிவெடுத்தாலும், அதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ரோபோ போலச் செயல்பட்டாக வேண்டும். சார்ஜ் (Charge) என்று காதில் கேட்டு விட்டால், எதிரிலிருப்பவர் இளைஞரா? முதியவரா? ஆணா?பெண்ணா? குழந்தையா? என்று பார்க்க நேரமும் இருக்காது. பார்ப்பதும் இல்லை! நிர்பந்தச் செயல்பாடு. கையிலிருக்கும் லத்திதான் பேச வேண்டும். பேசும்!
நீண்ட தூரம் கால் நடையாகச் சென்று நீர் எடுத்து வந்து கொண்டிருந்த பெண்களுக்கு, அந்த சோர்சும் காய்ந்து போக, வேறு வழியில்லாமல் அரசிடம் நீர் கேட்டு அலுவலகப் படிகளை மிதிக்கிறார்கள். எதுவும் நிகழாத போது, குடத்துடன் சாலையில் அமர்கிறார்கள். போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தால்தானே இங்கு மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்! தண்ணீர் கேட்டுப் போராடுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் குடிநீர், வடிகால் வாரியத்தினர் அல்லவா? கிராமப்புறமென்றால் பஞ்சாயத்து அலுவலகத்தினர் வர வேண்டும்.
ஆனால் அங்கு வருவது யார்? காவல் துறையினர்! சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையதாம்! அடிக்கின்ற வெயிலில் ஏற்கெனவே சுருண்டு போயிருக்கின்ற அவர்கள், போராட்டக் காரர்களுடன் பேசி எப்படியாவது சமாளிக்க வேண்டுமாம்.
ஊருக்கு வந்து கொண்டிருந்த பேருந்தைத் திடீரென்று போக்குவரத்துத் துறையினர் நிறுத்திவிட, சாலையில் அமர்ந்து விட்ட ஊராரை அப்புறப்படுத்தும் பணி யாருடையது? அதுவும் காவல் துறையினருடையதுதான். சம்பந்தப் பட்டவர்கள் மக்களைச் சந்திக்கக் கூட வருவதில்லை.
இப்படி எந்தத் துறையில் என்ன குளறுபடியென்று மக்கள் வீதியில் வந்து போராட ஆரம்பித்தாலும் தீர்த்து வைக்கும் பொறுப்பு காவல் துறையினுடையது.
உண்மையில் அடிப்படை வசதிக்காகப் போராடும் அன்றாடங்காய்ச்சிகளை அடித்துத் துன்புறுத்துகிறோமே என்று தனிமையில் கண்ணீர் சிந்தும் காவலர்கள் எத்தனை பேரென்று எப்போதாவது நாம் சிந்தித்து இருக்கிறோமா? மனசாட்சியே இல்லாமல் சாதாரணமானவர்கள் தலையில் தடியை இறக்குகிறோமே என்று எண்ணி வருத்தப்படும் போலீசைப்பற்றி நாம் சிந்தித்தது உண்டா?
தன் வாழ்நாளில் போலீஸ் ஆவதொன்றே குறிக்கோள் என்று அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு, அல்லும் பகலும் அதற்காகவே உழைத்து, பல சிரமங்களுக்குப் பிறகு தேர்ச்சி பெற்று, கனவுகளோடு வந்த இளைஞருக்கு, துறை வழங்கிய வேலை என்ன தெரியுமா?
ஆடர்லி! அதாவது உயரதிகாரி வீட்டு வேலைகளைக் கவனிப்பது! அவரின் மனம் என்ன பாடுபடும்?என்பதை மனிதாபிமானம் உள்ளவர்களால்தான் உணர முடியும்.
காவல் துறையினர் அல்லும், பகலும் உழைக்கிறார்கள். உடற்பயிற்சிகளையும் பிட்னஸுக்காகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் பெருத்த தொந்தியுடன் வலம் வருவதேன்? என்று நாம் யோசிப்பது உண்டா?
அகாலச் சாப்பாடும், இரவுத் தூக்கக் குறைபாடுமே தொந்தி பெருக்கக் காரணம் என்கிறது நவீன விஞ்ஞானம். அது உண்மைதான் என்பதற்கு நமது காவல் துறையினரே சாட்சி!
வீட்டில் நல்லது, கெட்டது நடந்தால்கூட உடனடியாக விடுப்பு எடுக்க முடியாத சூழல்;
விருப்பத்திற்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மன உளைச்சல்;
இரவுத் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் பணிச் சூழல்;
கனவு கொண்டது ஒன்றாகவும், நடைமுறை வேறாகவும் இருப்பதால் ஏற்படும் வருத்தம்;
தவறு செய்வோர் வேறு துறையினராக இருக்க, சப்பைக் கட்டு கட்டும் வேலையைச் செய்ய வேண்டிய அவலம்;
இப்படி எத்தனையோ மனத்தில் பாரத்தையேற்படுத்த, சில வேளைகளில் அடம் பிடிக்கும் குற்றவாளிகளிடம் அவர்களையும் மீறி ஆத்திரத்தைக் காட்டி விடுகின்றனர்.
அவர்களும் சாதாரண மனிதர்கள்தானே! உணர்ச்சிகளுக்கும், கோப தாபங்களுக்கும் எல்லோருமே பலியாகிப் போவது இயற்கைதானே!
அவர்களுக்கு வேண்டியது அமைதியான இரவுத் தூக்கம்;
மற்றைய அரசுப் பணியாளர்களைப் போல், அவசர காலத்தில் விடுப்பு;
குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடப் போதுமான அவகாசம்;
அவர்களின் அறிவு பூர்வமான சிந்தனைகளை மதிக்கும் உயரதிகாரிகள்;
ஆண்டிற்கொருமுறையாவது நல்ல கவுன்சலிங்;
இப்படி இன்னும் பல....
‘பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே!’
என்பதைப் போல, உரிய விதத்தில் அவர்களை நடத்தி, உலக அமைதிக்கு வழிகாண உரியவர்கள் முயல வேண்டும்!
‘அவர்கள் விழித்திருப்பதால்தான் நாம் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறோம்’
என்பதை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.
காவல் துறையின் கடினமான பணிச்சுமை மற்றும் அவர்களின் உளவியல் அழுத்தங்களின் உண்மையான முகத்தை அறிந்துகொள்வதன் மூலம், சமூகத்தில் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தவும், ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் இந்தச் செய்தி உதவுகிறது.