டிஜிட்டல் உலகில் தொலைந்துபோகும் பிஞ்சு மனங்கள்: பெற்றோர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

அலைபேசி மோகத்தால் குழந்தைகளின் சிந்தனை ஆழம் குறைவது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகள் குறித்தும் விளக்கும் கட்டுரை.
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world
Updated on
Kalki Strip
Kalki Strip

அம்புலிமாமா, லயன் காமிக்ஸ் போன்ற இதழ்கள் சிறார்களின் கற்பனை, நற்பண்புகளை வளர்த்த காலத்திலிருந்து, அலைபேசி, ஆன்லைன் விளையாட்டுகள் ஆட்சி செய்யும் இன்றைய சூழலுக்கு வந்த மாற்றத்தை கட்டுரை சுட்டுகிறது. ‘இலுமினாட்டி’ போன்ற மர்ம, சதித்திட்ட உள்ளடக்கங்கள் பிஞ்சு மூளையில் பதற்றம் விதைக்கக் கூடும் என்பதால், திரை நேரக் கட்டுப்பாடு, குடும்ப வாசிப்பு சூழல், பள்ளி வாசிப்பு நேரம் போன்ற தீர்வுகளை முன்வைக்கிறது.

தற்சமயம் கோவையில் நடந்து, முடிந்த புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்திருந்த நண்பர் ஒருவர் கூறிய, சற்றே அதிர்ச்சிக்குரிய அனுபவம் தொடர்பான கட்டுரை இது. தலைப்பே அதைச் சுட்டிக் காட்டும். 

இது குறிப்பாக பெரியவர்கள் கவனம் கொள்ளவேண்டியது பற்றியது...

நாற்பதுகளைக் கடந்த வாசகர்களுக்கு, காகித வாசனை கமழும் பக்கங்களைத் திருப்பி, கதைகளின் வண்ண உலகத்தில் சிறகடித்துப் பறந்த பொற்காலம் இருக்கும். அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், சிறுவர் மணி, ரத்னபாலா போன்ற இதழ்கள் சிறார்களின் கற்பனைத் திறனுக்கு உரமிட்டன. அத்துடன் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற படக்கதைப் புத்தகங்கள் சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

சிறார் இதழ்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி, அவர்களின் சொல்லகராதியைப் பெருக்கி, நற்பண்புகளையும், சமூக விழுமியங்களையும் இயல்பாகக் கற்றுக்கொடுத்த உகந்த வாசிப்புத் தளமாக விளங்கின.

ஆனால், காலத்தின் சுழற்சியில் 90-களுக்குப் பிறகு தொலைக்காட்சிகள் வந்தபோது வாசிப்புப் பழக்கம் சற்றே குறையத் தொடங்கியது. குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்களில் கார்ட்டூன் கதைகளும், அனிமேஷன் தொடர்களும் ஒளிபரப்பப்பட்டன.

இதையும் படியுங்கள்:
நாசா மற்றும் இஸ்ரோ விண்கலங்களை வழிநடத்தும் 'அகத்தியர்' நட்சத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world

அதைத் தொடர்ந்து வந்த இணையம், கணினி விளையாட்டுகள், தற்காலத்தில் அலைபேசி எனத் தொழில்நுட்ப வளர்ச்சி சிறார்களின் உலகம் முழுவதையும் தொடுதிரைக்குள் சுருக்கிவிட்டது.

இன்றைய தலைமுறையினரிடையே வேகமாகக் குறைந்துவரும் வாசிப்புப் பழக்கம் ஏற்படுத்தும் தாக்கம்!

இன்றைய சிறுவர்கள் அலைபேசிகளில் காணொளிகள் பார்ப்பதிலும், யூடியூப் (YouTube) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளிலுமே தங்களின் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் சிறுவர்களுக்கான யூடியூப் சேனல்களும், அனிமேஷன் காணொளிகளும், இணைய விளையாட்டுகளும் அதிவேகமான காட்சி மாற்றங்களுடனும் (rapid visual cuts), அதிகளவிலான சத்தங்களுடனும் வடிவமைக்கப்படுகின்றன. இவை சிறார்களின் கவனத்தைக் கவரும் அதேவேளையில், அவர்களின் சிந்தனை ஆழத்தைக் குறைத்து, உடனடித் திருப்தியை எதிர்பார்க்கும் மனநிலைக்குத் தள்ளுகின்றன.

இச்சூழலிலும் அச்சு & இணைய இதழ்களாகப் பல சிறார் இதழ்களும், அச்சு நூல்களும் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்குக் குறிப்பிட்ட அளவிலான வாசகச் சிறார்கள் இருந்தாலும், அலைபேசியின் ஆதிக்கத்திற்கு முன் அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் மோசடி: இந்தியாவில் பெருகும் டிஜிட்டல் குற்றங்களும் மீட்பு வழிகளும்!
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world

இந்தச் சூழலில்தான், தற்போது கோவை புத்தகக் கண்காட்சி நடந்து, 26-07-26 அன்றுடன் முடிந்துள்ளது.

இலக்கிய வாசகரான எனது நெருங்கிய நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்திருந்தார். அவர் சீரிய சிந்தனையாளர், சமூக அக்கறை மிகுந்தவர், சர்வதேச சமூகம், அரசியல், வரலாறு, சுற்றுச்சூழல், மருத்துவம், கல்வி, ஆன்மிகம் எனப் பலவேறு துறைகளில் ஆழ்ந்த கவனம் கொண்டவர்.

கண்காட்சி முடிந்த மறுநாள் அவரிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னை மிகவும் பாதித்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கண்காட்சி நடந்துகொண்டிருந்த ஒரு நாளில், ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி அவரது கடைக்கு வந்து, “அங்கிள், இலுமினாட்டி (Illuminati) புத்தகம் இருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறாள்.

அந்தக் கேள்வியைக் கேட்டு என் நண்பர் அதிர்ந்துபோனார். அதைக் கேட்ட எனக்குள்ளும் பேரதிர்ச்சியே எஞ்சியது. ஒன்பது வயதுச் சிறுமி வாசிக்க வேண்டிய புத்தகமா இது…?!

நண்பர் இது தொடர்பாக தனது வருத்தங்களையும், கவலைகளையும் தெரிவித்து, வழக்கம்போலத் தனது சிந்தனாபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்தினார். குழந்தைகளை நேசிப்பவன், சமூக அக்கறை கொண்ட படைப்பாளி, சிறார் இலக்கியப் படைப்பாளியும்கூட என்ற வகையில் என்னுள்ளும் இந்த நிகழ்வு, சிறார் நலன் குறித்த கனத்த கவலைகளையே ஏற்படுத்துகிறது.

ஒரு சிறுமி இப்படிக் கேட்டுவிட்டதால், எல்லாச் சிறார்களும் இதையே தேடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், பிஞ்சு மனங்களிலும், பிஞ்சு மூளையிலும் எந்த மாதிரியான தகவல்கள் போய்ச் சேர்கின்றன என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

இதையும் படியுங்கள்:
ஹகாகுரே (HAGAKURE): மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வாழ வழி!
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world

தனக்கு என்ன வாசிப்பது என்று தெரியாமலோ அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமலோ, இணையத்தில் கண்டதும் கேட்டதுமான தேவையில்லாத தகவல்களின் ஈர்ப்பால் அந்தச் சிறுமி இப்படி ஒரு புத்தகத்தைக் கேட்டிருக்கிறாள். சதித்திட்டங்கள், மர்மங்கள் நிறைந்த இத்தகைய தேடல்கள் சிறார்களின் மனதில் தேவையில்லாத பதற்றங்களையும், தவறான உலகப் பார்வையையும் விதைத்துவிடும் அபாயம் கொண்டது.

அலைபேசிப் பயன்பாடு இன்று சிறார்களின் உடல்நிலை, மனநிலை, பழக்கவழக்கங்களில் பெரும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாகத் திரையைப் பார்ப்பதால் கண் பார்வைக் குறைபாடு, தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மனரீதியாகக் கவனச்சிதறல், பதற்றம், கோபம், பிறருடன் பேசிப் பழகுகிற சமூகத் திறன் குறைதல் போன்றவை அதிகமாவது தெளிவாகத் தெரிகிறது.

மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், சிந்தனைவாதிகளும் இது குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் இதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. “குழந்தையிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கும், நமக்குத் தொல்லை இருக்காது” என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது.

வாசிப்புப் பழக்கம் | children studying in home and school  library
வாசிப்புப் பழக்கம் | children studying in home and school library

சிறார்களை இந்தத் தவறான பழக்கங்களிலிருந்து மீட்டு, சரியான பாதைக்குக் கொண்டு வர வேண்டியது குடும்ப மற்றும் சமூகத் தேவையாகும். பெற்றோர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயம் என்றே சொல்லலாம்.

சிறார்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய வாசிப்புப் பழக்கம் ஊட்டுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.

பெற்றோர்களின் விழிப்புணர்வு: முதல் படியாக, பெற்றோர்கள் தங்களின் வசதிக்காகக் குழந்தைகளின் கைகளில் அலைபேசியைக் கொடுப்பதை / திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அலைபேசியிலும் யூடியூப்பிலும் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும், திரை நேரத்தைக் (screen time) கடுமையாகக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.

வீட்டுச் சூழலும் மாதிரிப் பழக்கமும்: வீட்டில் பெற்றோர்களும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் வாசித்தால் மட்டுமே குழந்தைகளும் அதைப் பின்பற்றுவார்கள். குழந்தைகளை வார இறுதிநாட்களில் நூலகங்களுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறந்த படைப்புகளை அறிமுகப்படுத்துதல்: குழந்தைகளின் மன நலனுக்கு உகந்த, பொது அறிவை வளர்க்கிற, மகிழ்ச்சி தருகிற நல்ல கதைகள், பாடல்கள், கட்டுரைகள் அடங்கிய சிறார் இதழ்களையும் நூல்களையும் அவர்களுக்கு வாங்கித் தர வேண்டும். அச்சிடப்பட்ட வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொடுக்கும்போது வாசிப்பு ஆர்வம் இயல்பாகவே உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
உலகை அதிர வைத்த சில உலகத் தலைவர்களின் படுகொலை சம்பவங்கள்...!
வாசிப்புப் பழக்கம் | A student with Books and in digital world

பள்ளிகளின் சமூகப் பொறுப்பு: பள்ளிகளில் பாடப் புத்தகங்களைத் தாண்டி தினமும் வாசிப்பிற்கெனத் தனி நேரம் ஒதுக்கி, மாணவர்களைக் கதைகள் சொல்ல வைப்பதும், சிறார் இதழ்களைப் படிக்கச் செய்வதும் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். இதற்கு மாணவ நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்களாவது முன்வர வேண்டும்.

சிறார்களின் உலகம் மீண்டும் வண்ணமயமான கதைகளாலும், பயனுள்ள புத்தகங்களாலும் நிரம்ப வேண்டும். அலைபேசித் திரைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தான உலகத்திலிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாத்து, ஆரோக்கியமான வாசிப்புச் சூழலுக்கு நல்வழிப்படுத்துவது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

குழந்தைகளின் திரைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, அவர்களின் பிஞ்சு மனங்களை நச்சுத் தகவல்களிலிருந்து பாதுகாத்து, பயனுள்ள புத்தகங்கள் மூலம் அவர்களின் கற்பனைத் திறனையும் எதிர்காலத்தையும் வளமாக்கிக் கொள்ளும் தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com