லக்கி பாஸ்கர்: தீபாவளி ரேஸில் இந்தக் கறுப்புக் குதிரையும் வெற்றி பெற்றிருக்கிறது!

Lucky Baskhar
Lucky Baskhar
Published on

எதிர்மறை கதாநாயகர்கள் (ஆன்டி ஹீரோக்கள்) திரைப்படங்களுக்கு எப்பொழுதும் ஒரு வரவேற்பு உண்டு. அது ஜென்டில்மேன், சிவாஜி போன்ற படங்களாகட்டும், த்ரிஷ்யம் போன்றவையாகட்டும். மக்கள் இவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். தவறு செய்வது கதாநாயகனே என்றாலும் அவனில் அவர்களைப் பார்ப்பதால் நிகழும் எண்ணங்கள் இவை. வெப் சீரீஸ்களின் வருகைக்குப் பின் இது இன்னும் சற்று அதிகம் ஆகிவிட்டது. மிகப் பிரபலமான மணி ஹீஸ்ட் தொடரில் வங்கியைக் கொள்ளையடிக்கும் கும்பல் தப்பிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்பினார்கள். அதன் கதாநாயகனான ப்ரொபசர் வெற்றியைக் கொண்டாடினார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் படத்தின் ஹீரோ ஹீரோயின் இருவரும் பிராடுகளானாலும் கடைசியில் அவர்கள் தப்பிக்கும்போது கைத்தட்டல் எழுந்தது. இது இரண்டையும் கலந்து ஒரு திரைக்கதை அமைத்தால் எப்படி இருக்கும், அது தான் லக்கி பாஸ்கர்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்திரி, ராம்கி, உள்படப் பலர் நடித்து ஒரு தெலுங்கு டப்பிங் படமாக வந்திருக்கும் படம் இது. ஒரு சாதாரண மத்தியத் தர வர்க்கத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பாஸ்கர் (துல்கர்). மனைவி சுமதி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அப்பா (இவர் அப்படியொரு நோயால் பாதிக்கப்பட்டது போலத் தெரியவே இல்லை) இரண்டு தம்பி, ஒரு தங்கை என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். அனைவரிடமும் கடன் வாங்கி ஜீவனம் நடத்தி வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் குடும்பமாக அனைவர் முன்பும் அவமதிக்கப்படுகிறார். தனது மனைவி, மகன் மற்றும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ராம்கியின் துணையுடன் கடத்தல் பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரம். பணம் வங்கியுடையது என்று ஆரம்பிக்கிறார். இது எங்கே போய் முடிகிறது. சிறிதாக ஆரம்பித்த இந்தத் தவறு போதையாக மாறியபின் அவர் எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்குகிறார். காவல்துறை கையில் சிக்கினாரா என்பது தான் கதை.

வங்கியில் பணி புரிபவர் என்பதால் பைனான்சியல் பிராடு எனப்படும் நிதி மோசடிகள் எப்படி நடக்கின்றன. அதுவும் இந்தக் கதை நடக்கும் காலம் தொண்ணூறுகளில் என்பதால் வங்கிகளும், பங்கு மோசடி புகழ் ஹர்ஷத் மேத்தாவும் எப்படி இயங்கியிருக்கக்கூடும் என்பதை நன்றாகவே விளக்கியிருக்கிறார்கள். இது போன்ற குற்றங்கள் பொதுமக்களுக்குச் சரியாகப் புரியாது. சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அதை மேலோட்டமாக விளக்கி எப்படி கோடிகளில் மோசடி நடக்க நிதி நிறுவனங்களும் காரணமாக இருந்திருக்கின்றன என்பதைச் சொல்கிறார்கள். சிறிய தொகைக்காகச் செய்யத் துவங்கிய இந்த மோசடிகள். பெரிதாகும்போது அதிலிருந்து விடுபட முடியாமல் மேலும் தவறுகள் செய்யத் துவங்குகிறார். அவர் பிடிபட்டாரா இல்லை தப்பித்தாரா…வெள்ளித் திரையில் காண்க.

லக்கி பாஸ்கராகத் துல்கர். ஏற்கனவே சொன்னது போல் மணி ஹீஸ்ட் ப்ரொபசருக்கு கொஞ்சமும் சளைக்காத பாத்திரம். ஒவ்வொரு தப்பு செய்யும் போதும் தப்பிக்கும் போதும் காமிராவைப் பார்த்து அதாவது நம்மைப் பார்த்து அது எப்படி நடந்தது என்று சொல்லத் துவங்குகிறார். ஒவ்வொரு முறை மாட்டிக்கொள்ளும் போதும் அதிலிருந்து தப்பிக்க ஏதாவது முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார். என்ன நடக்கலாம். எப்படித் தப்பிக்கலாம். யாரை மாட்டி விடலாம் என்று மிகத் துல்லியமாகக் கணித்துச் செயல்படுகிறார். சிபிஐவிசாரணையின் போதுகூட அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்து வெளியே வருகிறார். சிபிஐ அதிகாரியாக வரும் சாய் குமார் கச்சிதமாக அவரை மடக்கினாலும் கடைசியில் அவருக்குக் கிடைப்பது ஏமாற்றமே. பங்குச் சந்தை, வங்கி ரசீதுகள், வங்கிகளுக்கிடையில் கடன், பங்கு வர்த்தகத்தில் முறைகேடு என்று ஒவ்வொன்றாக அவிழ்கிறது முடிச்சு. ஹர்ஷா என்று கடைசி வரை சொன்னாலும் அவரைக் காட்டாமல் தவிர்த்தது ஸ்மார்ட்.

துல்கரின் நண்பராக வருபவரும், இதையெல்லாம் ஆரம்பித்து வைக்கும் ராம்கியும் கச்சிதம். இடையில் காணாமல் போகும் ராம்கி கடைசியில் எப்படி மீண்டும் இவர் வாழ்க்கையில் வந்து அதை மாற்றுகிறார் என்று வைத்ததும் சிறப்பு. மனைவியாக வரும் மீனாட்சிக்கு நடிப்பதற்கு அவ்வளவாகக் காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாகப் படம் முழுதும் வந்து போகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை பாத்திரம் ஒரு முக்கிய கட்டத்தில் உதவும் விதம் புத்திசாலித்தனமான ரைட்டிங்குக்கு உதாரணம்.

மிகவும் பழக்கப்பட்ட ஒரு முடிச்சை வைத்துக் கொண்டு சுவாரசியமாகத் திரைக்கதை அமைப்பதில் இயக்குநர்வெங்கி அட்லூரி வென்றிருக்கிறார். கோவாவில் போலீசிடம் தப்பிப்பது, கடைசியில் சிபிஐயை ஏமாற்றுவது, தான் உபயோகப்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பாஸ்கர் செயல்படுவது, இப்படி நடக்குமோ என்று நினைக்கும்போது அப்படியும் இல்லை இப்படியும் இல்லை அது வேறு மாதிரி என்று காட்டுவது எனப் படத்தில் சுவாரசியத்திற்குக் கொஞ்சம் கூடப் பஞ்சமில்லை.

இதையும் படியுங்கள்:
2 In 1 விமர்சனம் - ப்ளடி பெக்கர் & பிரதர் - அடுத்தடுத்து இரண்டு படம்; இரண்டும் தீபாவளி புஸ்ஸ்ஸ்..!
Lucky Baskhar

இப்படியெல்லாம் நடக்குமா என்று லாஜிக் பார்க்காமல் நம்மை உற்சாகமாகப் பார்க்கவைப்பது தான் சினிமாவின் மேஜிக். அந்த மேஜிக்கை அநாயசமாகச் செய்திருக்கிறார்கள் இயக்குநரும் ஹீரோவும். இசை ஜி வி பிரகாஷ். இசையில் மட்டும் கவனம் செலுத்தினால் என்ன உயரம் தொடலாம் என்று இவர் புரிந்து கொண்டால் சரி. அமரனில் ஒரு மாதிரி என்றால் பீரியட் படமான இதில் வேறொரு தளத்தைத் தொட்டிருக்கிறார். காட்சிகள் வேகமாக நகர்வதற்கும் உயரத்தைத் தொடவும் இவரது பின்னணி இசை மிகப் பெரிய உதவி செய்திருக்கிறது. முழுவதும் செட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் பல இடங்களில் உண்மையைப் போலவே உணர வைப்பது தயாரிப்பு குழுவினருக்குக் கிடைத்த வெற்றி. என்ன அந்த வங்கி செட் மட்டும் துணிவு படத்தில் பார்த்ததைப் போலவே இருந்தது. மற்றபடி மாருதி கார், பஜாஜ் ஸ்கூட்டர், கால்குலேட்டர் வாட்ச், கோல்ட் ஸ்பாட் கூல்ட்ரிங் என அந்தக் காலத்தைத் திரும்பக் கொண்டு வரப் பாடுபட்டிருக்கிறார்கள்.

தனது நண்பனை பாட்னர் இன் க்ரைம் என்கிறார். ஆனால் முழுப் படமும் அவர் ரசிகர்களுடனேயே உரையாடிக் கொண்டிருப்பதால் நாமும் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் தான். இது போன்ற படங்களை நாம் ஆதரிக்கலாம். ஆனால் பாஸ்கர் ஊருக்காகத் தவறு செய்யவில்லை. தனது குடும்பத்துக்காகவே செய்கிறான். ஒரு மத்தியத் தரக் குடும்பஸ்தன் தனது குடும்பத்தைக் காக்க எந்த எல்லைக்கும் போவான் என்பதைக் காட்ட இவர்கள் எடுத்துக் கொண்ட கதை திரைக்கதை வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலை அவர் செய்யவில்லை என்பது தான் உண்மை.

முதன் முதலாகத் தமிழகம் முழுவதும் பெய்டு பிரீமியர் நடத்திய படம் என்ற பெயர் பெற்ற லக்கி பாஸ்கர் தீபாவளிப் படங்களில் கறுப்புக் குதிரையாக ஓடி ஒரு நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. மற்ற இரண்டு படங்களான பிரதர், மற்றும் ப்ளடி பெக்கர் முடிவுகளைப் பொறுத்து இந்தப் படத்திற்குத் திரையரங்குகள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com