
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர காடுகளில் ஆட்கொல்லி புலிகளை ஐம்பதுகளிலும் அறுபதுகளில் இரவு பகலாக பின் தொடர்ந்து சுட்டுக் கொன்றவர் தான் கென்னத் ஆண்டர்சன். இவர் இந்தியாவில் தங்கிய பிரிட்டிஷ்காரர். இவர் வேட்டை ஆடிய ஆட்கொல்லி புலிகளில் ஒன்று தான் ஆந்திராவின் ரங்கம் பேட் என்ற ஊரை பீதியில் உறைய வைத்தது.
அதன் அட்டகாசத்தை செய்தித்தாளில் படித்த ஆண்டர்சன் தன் நண்பன் தேவன் என்பவருடன் கிளம்பி ராஜம்பேட் வந்து விட்டார். ஆனால் அவர் முயற்சி ஒரு வாரம் கழிந்தும் பலனளிக்கவில்லை. ஒரு புறம் அவர் கட்டிவைத்த மாட்டையும் ஆட்டையும் இப்புலி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால், மறுபுறம் மனிதவேட்டையை தொடர்ந்து செய்தது. பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மனிதர்களை தாக்கி கொன்று தின்றது.
ஆண்டர்சன் குழம்பிப் போனார். அப்போது அவருடைய நண்பர் தேவ் திருப்பதி பக்கத்தில் தான் இருக்கிறது போய் வருவோமா என்றார். தரிசனம் முடித்த கையோடு ரயில் நிலையம் வந்து அங்குள்ள கேன்டீனில் தேனீர் அருந்தியவாறு ரங்கம் பேட் புலியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பக்கத்திலிருந்து கேட்ட ஓட்டல் மேனேஜர் குறுக்கிட்டு மாதங்கள் முன்னே ஒரு டூரிங் சர்க்கஸ் திருப்பதி வந்தபோது ஒரு புலி தப்பிவிட்டது பற்றி சொன்னார். இந்த விஷயம் ஆண்டர்சனுக்கு உற்சாகம் அளித்தது. தப்பிய புலியை பற்றி விவரிக்கையில் அதற்கு தினமும் பகல் 2 மணிக்கு உணவு அளிக்கப்பட்டதையும் அதன் பெயர் ராணி என்றும் மேனேஜர் தெரிவித்தார். புலி ஏன் பகலில் ஆட்களை தாக்கி கொல்கிறது என்று ஆண்டர்சனுக்கு புரிந்தது. மேலும் சர்கஸில் கூண்டில் வாழ்ந்ததால் இப்போது ஏதேனும் ஒரு குகையில் தான் தங்கி இருக்க வேண்டும் என்பதையும் ஊகித்துவிட்டார்.
ரங்கம் பேட் திரும்பி, ஒரு காட்டு வாசியின் துணையோடு ஒவ்வொரு குகையாக தூர நின்று கல்லெரிந்து சோதனை செய்தார். அப்படி செய்கையில் ஒரு குகையில் இருந்து புலி ஒன்று உறுமியவாறு வெளியே வந்தது. ஆண்டர்சன் தன் துப்பாக்கியால் குறி வைப்பதற்குள் திரும்பி குகைக்குள் போக முயன்றது. அப்போது சமயோஜிதமாக ஆண்டர்சன் "ராணி.. ராணி.." என்று அழைத்தார். புலி ஒரு கணம் நின்று திரும்பி பார்த்தது. அது போதும் துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து ஆட்கொல்லி விழுந்து இறந்து போனது.
இந்த உண்மை சம்பவத்தின் சாராம்சம் என்ன? திருப்பதி சென்றால் ஒரு திருப்பம் நேரும் என்ற நம்பிக்கை உண்மைதான் என்பதே!