
பாலம் கல்யாண சுந்தரம் என்பவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள மேல கருவேலங்குளம் ஊரை சேர்ந்தவர். பால்வண்ணநாதன்- தாயம்மாள் தம்பதியருக்கு கடந்த 1940-ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தமிழில் மேற்கொண்டும் படிக்க வேண்டும் என நினைத்தார். கருமுத்து தியாகராஜ செட்டியார் உதவியால் 1963-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சீனா போரின்போது நேருவின் பேச்சை கேட்டு தன்னிடம் இருந்த எட்டரை பவுன் செயினை காமராஜர் மூலம் பாதுகாப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தன் படிப்பு முடிந்த உடன் ஶ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராக பணியில் சேர்ந்தார். 35 ஆண்டுகள் பணி புரிந்து 1998-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர், தான் பெற்ற ஓய்வு ஊதியம், பணப்பலன் என அனைத்தையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
இவர் இந்திய அளவில் சிறந்த நூலகர் விருதை பெற்றார். இவர் பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை பற்றிய ஆவண படம் நார்வே நாட்டில் 2012 சிறந்த படமாக தேர்வு ஆனது. இவர் பணி காலத்திலும், ஓய்வு பெற்ற பின்னரும் ஏழை எளிய மக்கள், அநாதை குழந்தைகள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
இவரது தன்னலம் கருதாத ஏழை மக்களுக்கு செய்த உதவியை பாராட்டி வெளி நாட்டு அமைப்பு ‘Man of millenium’ விருது வழங்கி 30 கோடி பரிசு வழங்கியது. இந்த 30 கோடியையும் குழந்தைகள் நலனுக்காக செலவிட்டார். தன் குடும்பத்தில் கிடைத்த 50 லட்சத்தை ஏழை மக்களுக்கு செலவிட்டார்.
இவரின் சேவையை பாராட்டி ரஜினி இவரை தன் தந்தையாக ஏற்று கொண்டார். ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள சுமார் ஏழு ஆண்டுகள் நடை பாதை வாசியாக இருந்தார். தன் இறப்புக்கு பின்னர் தன் உடல் உறுப்புகளை மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்தார்.
ஒருமுறை பில் கிளிண்டன் இந்தியா வந்த போது இருவரை மட்டும் சந்திக்க எண்ணினார். ஒருவர் அப்துல்கலாம். மற்றவர் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது சேவையை பாராட்டி ‘A most notable intellectual in the world’ என்ற பட்டத்தை வழங்கியது. நூலகத்துக்கு என்று நோபல் பரிசு இருந்தால் அதை இவருக்கு வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது.
அரிமா லியோ முத்து இவருக்கு ஒரு கோடி மதிப்பு உள்ள வீட்டை பரிசாக அளித்தார். அதனை ஏற்க மறுத்து விட்டார். ஐநா இருபது சாதனையாளர்களை தேர்வு செய்தது. அதில் இவரும் ஒருவர். இவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருந்த போது மருத்துவ செலவுக்கு மக்களிடம் ஒரு ரூபாய் அனுப்ப கோரிக்கை வைத்தார்.
பொது மக்கள், சபாநாயகர், கவர்னர், முதல்வர், மேயர், ஏன் அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் என எல்லோரும் ஒரு ரூபாய் அனுப்பி வைத்தனர். பின்னர் குணமடைந்து மீதமுள்ள தொகையை ஏழை மக்களுக்கு செலவிட்டார்.
கல்லூரி நூலகத்தில் இருந்து ஓய்வு பெற்று தன் முழு பணத்தையும் ஏழை மக்கள், அனாதை இல்லங்களுக்கு வழங்கி விட்டு தன் சொந்த செலவுக்கு உணவகத்தில் வேலை பார்த்தார்.
பத்மஶ்ரீ விருது இவரை தேடி வந்தது. அந்த காலத்திலேயே 36 டிகிரி முடித்தவர். இவரது தந்தை பால்வண்ணநாதன் ஊரிலுள்ள கோவிலுக்கு அறங்காவலராக இருந்தார். கோவிலில் உள்ள பலா மரத்தில் விளைந்த பலாப்பழத்தை காவலாளி இவரது வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தார். இது பெரும் குற்றம் என சொல்லி அதற்கு பிராய சித்தமாக கோவிலுக்கு ஒரு வயலை எழுதி வைத்தார். இன்று அதன் மதிப்பு கோடி பெரும். இவரது தாய் தாயம்மாள் இவரிடம், 'எதற்கும் ஆசை படாதே; எது கிடைத்தாலும் ஒரு பகுதியை தானம் செய். தினமும் ஒரு உயிருக்கு நல்லது செய்' என்றார். அதை இன்று தன் 83 வயதிலும் கடைபிடித்து வருகிறார்.
இவர் தற்போது சைதாப்பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் இருந்து கொண்டு பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் எத்தனையோ சர்வதேச விருதுகள் இந்திய விருதுகளுக்கு சொந்தக்காரர். தன்னலம் கருதாத மாமனிதர்.