மனிதர்களாகப் பிறந்த அனைவரும் நிச்சயம் சந்திக்க வேண்டிய ஒரு பருவம் முதுமை. பெரும்பாலானோர் அதைக் கண்டு பயமும் வருத்தமும் கொள்வதுண்டு. முதுமையைக் கண்டு வருத்தப்பட வேண்டாம். அதை சுவாரஸ்யமாக அனுபவிக்கப் பழகிக் கொள்வோம் என்பதை உணர்த்தும் 50 கட்டுரைகளின் தொகுப்பே, ‘முதுமை ஒரு வரம்’ நூல் ஆகும்.
இந்நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் முதியோர்கள் அவசியம் படிக்க வேண்டியவைகளாக இருந்தாலும், எதிர்காலத்தில் முதுமையை சந்திக்கக் காத்திருக்க அனைவரும் கூட இந்நூலைப் படிக்கத் தொடங்கினால், முழுவதும் படித்து முடித்தே இதை கீழே வைப்பார்கள். அவ்வளவு சுவாரசியம் நிறைந்ததாக உள்ளது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கலைந்து போனதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள்தான். சுயமாகச் சம்பாதிக்கும் பருவத்தைக் கடந்துவிட்ட அவர்களில் பலர் தங்களைத் தாங்களே தாங்கிப்பிடித்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வலுவற்று உள்ளனர். பெற்ற பிள்ளைகளின் ஆதரவு இல்லாததால் மன ரீதியான, உடல் ரீதியான துயரங்களை அனுபவித்து வருபவர்கள்.
இறப்பு என்பது தமக்கு அதிக தொலைவில் இல்லை என்ற பருவத்தை அடைந்து விட்டிருந்தாலும், இவர்கள் தங்கள் மன அமைதியை காப்பது எப்படி? எந்த ஓர் இடத்திலும் பிறர் மீது கசப்பும் கோபமும் வெளிப்படாத அருமையான சிந்தனையை தூண்டுவதாக உள்ளது இப்புத்தகம். இந்நூலை வாசிக்கையில் எந்த இடத்திலும் அயர்ச்சியும் அலுப்பும் சலிப்பும் தராத எளிய நடையில் நயமாக முதுமை குறித்த தமது எண்ணங்களை நயமாகச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் முனைவர் என்.பத்ரி.
'கூட்டுக் குடும்பம் சிதைந்து போக நாம் காரணமாக இருக்கக் கூடாது; உங்களை யாராவது வார்த்தைகளாலோ, செயல்களாலோ புண்படுத்தி இருந்தால் அவர்களை மன்னிக்கப் பழகுங்கள். அதேபோல், நீங்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். வெறுப்புகளை உங்களுக்குள்ளேயே சுமந்து கொண்டிருக்காதீர்கள். யார் சரி, யார் தவறு என்பதை யோசிக்க வேண்டிய தருணமில்லை இது.
மனதுக்குள் பழி வாங்கும் உணர்ச்சியை மறந்துவிட வேண்டிய பருவம் இது' போன்ற அற்புதமான கருத்துக்கள் நூலின் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பது மிகவும் அருமை. ஒவ்வொருவரும் தங்கள் முதுமை பருவத்துக்கேற்ப உடலை தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்; அதேபோல், மனதையும் தயார்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம் என்பதை இந்த நூல் அனைவருக்கும் உணர்த்துகிறது. முதியவர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு வயதினரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான நூல், ‘முதுமை ஒரு வரம்.’
நூலாசிரியர்: முனைவர் என்.பத்ரி, பக்கங்கள்: 160, விலை: ரூபாய் 250, வெளியீடு: முக்கடல், சென்னை – 91; ✆94443 65642.