மனித உயிர் மீட்கும் மனிதாபிமானமிக்க மாற்றுத்திறனாளி!

இரத்த தானம் செய்யும் சிவபாலன் மற்றும் மமதி
இரத்த தானம் செய்யும் சிவபாலன் மற்றும் மமதி
kalki vinayagar
kalki vinayagar

தானங்கள் பல இருந்தாலும், சக உயிரைக் காக்கும் இரத்த தானம் என்பது உலகின் உயரிய தானமாக கருதப்படுகிறது. நம் உடலில் எப்போதும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் உயிர் நீரான இரத்தத்தை, உயிருக்குப் போராடுபவருக்கு தானமாக தரும் மனம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் பலவும் ஜூன் மாதத்தில், ‘உலக இரத்த தானத்தை’ (WBDD) வலியுறுத்திக் கொண்டாடுகின்றன. பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தன்னார்வ, பணம் பெறாமல் இரத்த தானம் செய்து உயிர்களைக் காப்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அந்த வகையில், இரத்த தானம் செய்து பல உயிர்களைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் ஆகிறார் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த, பார்வை திறன் இழந்த சிவபாலன். இது குறித்து, அவரைச் சந்தித்து பேசியபோது…

"எனது பெயர் சிவபாலன். வயசு 45 ஆகிறது. எனக்குப் பள்ளியில் படிக்கும்போது இருந்து பிறருக்கு சேவைகள் செய்வதில் அதிகம் நாட்டம் உண்டு. நான் எனது கல்லூரி காலம் முதல் ரத்த தானம் செய்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான பிறகு தவறான மருத்துவத்தால் எனது இரண்டு கண் பார்வையும் பறிபோனது.

பிறருக்கு உதவி செய்வதில் எப்போதுமே எனது அலாதி பிரியம் உண்டு. ஆனால், எனது பார்வைக் குறைபாடு அதற்கு பெரும் தடையாக உள்ளது. இருந்தாலும், என்னால் முடிந்த இந்த இரத்த தானத்தை மற்றவர்க்கு தொடர்ந்து செய்து வருகிறேன். நான் அதிகமாக இரத்த தானம் செய்வது அரசாங்க மருத்துவமனைகளில்தான். இரத்தம் இன்றி ஒரு உயிர் மடிவது என்பது சக மனிதர்களாகிய நமக்குத்தான் அவமானம். ஏனெனில், நமது உடம்பில் சுரக்கும் இரத்தம் சக உயிரைக் காக்கவும்தான் என்பதை அனைவரும் அறிய வேண்டும். நான் கணக்கற்ற முறை இரத்த தானம் செய்திருக்கிறேன். முக்கியமாக, இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தட்டணுக்கள் வழங்கி வருகிறேன். ஒருசிலர் நான்தான் இரத்தம் தந்தேன் என அறிந்து எனது கரங்களைப் பிடித்து நன்றி சொல்லும்போது எனது மனம் நெகிழும்.

இரத்த தானம் என்பதை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நமது உடலில் ஓடும் இரத்தத்தை தானமாகக் கொடுத்து விட்டால், அதனால் நம் உடல் நலம் பாதிக்கப்படுமோ என்று அச்சம் கொள்கின்றனர். இது தவறான கருத்து. மருத்துவமனையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே உங்கள் இரத்தத்தை தானமாகப் பெறுவார்கள். இரத்த தானத்தில் சில விதிமுறை உண்டு.  தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் போன்றவற்றின் எண்ணிக்கையை பரிசோதனை செய்த பின்பு அவற்றை நாம் தானம் செய்ய முடியும். மேலும், நமது உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நீங்கள் இரத்த தானம் செய்து 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மீண்டும் உங்கள் உடலில் பழையபடி இரத்தம் உற்பத்தி ஆகிவிடும். புது இரத்தம் பாய்வதால் நீங்கள் மேலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் மற்றவர்க்கு இரத்தம் தர தயங்குவதுண்டு. எனக்கு பார்வை இல்லை எனும் குறை நிச்சயம் என்னிடம் இல்லை. என்னால் பல உயிர்களை காப்பாற்ற இறைவன் எனக்குத் தந்த ஒரு பணியாகவே இதை நான் நினைக்கிறேன். தற்போது கல்லூரியில் பயிலும் எனது மகளும் என்னைப் போலவே, இரத்த தானம் செய்யத் துவங்கி விட்டார்.

சுமார் 15 வருடங்களாக நான் இரத்த தானம் செய்து வருகிறேன். தானம் செய்வது என்பது பணத்தினால் மட்டுமல்ல, இரத்தம் தருவதனாலும் கடவுள் மகிழ்வார். பல உயிர்களைக் காப்பாற்றும் பணியில் நான் மனநிறையுடன் வாழ்கிறேன். கடவுளிடம் நான் வேண்டுவது எனது ஆரோக்கியத்தை மட்டுமே. காரணம் இன்னும் நிறைய பேரின் உயிர்களைக் காப்பதற்காகத்தான்" என்று கூறுகிறார் சிவபாலன். அவரது உயர்ந்த எண்ணம் அவரை என்றும் நலமுடனே வாழவைக்கும்.

விக்னேஷ்
Vignesh

சிவபாலனை அறிமுகம் செய்து வைத்த 27 வயதான விக்னேஷ் என்னும் இளைஞர் துபாயில் பணியில் இருக்கிறார். கடந்த 4 வருடங்களாக துபாயில் இருந்தபடியே கடுமையான பணிக்கிடையே கிடைக்கும் சொற்ப நேரத்தில் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கான ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைத்து அதன் மூலம் இரத்த தானத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!
இரத்த தானம் செய்யும் சிவபாலன் மற்றும் மமதி

சிவபாலன் போன்ற  மனித நேயம் மிக்கவர்களும், நாடு கடந்தும் பல உயிர்களை காப்பாற்றத் துடிக்கும் விக்னேஷ் போன்ற இளைஞர்களும், தனது தந்தையைப் போலவே தானும் இரத்த தானம் செய்து வரும் 22 வயது மமதி போன்ற இளைஞிகளும் வருங்கால இந்தியாவின் சேவை தூண்கள் என்றே கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com