

மருத்துவர் மன்னார்குடி ராஜகோபால்... அவரை யாரால் மறக்கமுடியும்?
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது /எழுபதுகளில் சென்னை மேற்கு மாம்பலம் ஒரு சிறிய கிராமம் போல இருக்கும். அதில் வசித்து வந்த சுமார் ஐம்பது அறுபது குடும்பங்களுக்கு (முக்கால் வாசி பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள்) ஒரே ஒரு டாக்டர். அவர் தான் திருவாளர் மன்னார்குடி கேப்டன் ராஜகோபால் அவர்கள். இப்போது இருந்திருந்தால் அவருக்கு 120 வயது ஆகியிருக்கும்.
நெற்றியில் பளிச்சென்ற ஸ்ரீ சுர்ணம் அணிந்து சற்று மஞ்சள் தட்டிய வெட்டியும் அயர்ன் செய்யப்படாத அரைக்கை சட்டையும் அணிந்திருப்பார். கைகளில் கரடி மாதிரி ரோமம் வளர்ந்திருக்கும். மணிக்கட்டில் தாமஸ் மன்றோ காலத்து கேட்ராக்ட் விழுந்த கை கடிகாரம்.
சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ராணுவத்தில் மெடிக்கல் பிரிவில் பணியாற்றியவர். இரண்டாம் உலக போரில் புகுந்து விளையாடியவர். ஒரு முறை அவரிடம் நான் அசட்டு தனமாக "நீங்கள் ஒரு டாக்டர் தானே? துப்பாக்கியால் சுட தெரியுமா?" என்று கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். "நான் இருந்தது பிரிட்டிஷ் காரன் பட்டாளம் என்னை பார்த்தா எக்காளம் செய்கிறீரே? எனக்கு பட்டக்ஸில் ஊசியும் போட தெரியும்; பாரக்சில் குறித் தவராம சுடவும் தெரியும். காயங்களுக்கு கட்டு போடுவேன்; அதே சமயம் எதிரிகளை சுட்டும் தள்ளுவேன்" என்று முறைத்தபடி சொன்னார். நான் வாலை சுருட்டி கொண்டேன்.
"உங்கள் கைகளில் என்ன மாய மந்திரம் இருக்குன்னு தெரியலையே? நீங்கள் தொட்டால் பட்டுன்னு ஆறிவிடுகிறதே காயம். என்ன அந்த ரகசியம்..?" கேட்டான் ஒரு வாண்டு.
"புண்களை நன்றாக ரத்தம் வரும் வரை சுத்தம் செய்ய வேண்டும். பஞ்சை வைத்து துருவி துருவி துடைக்கவேண்டும்" சொன்னார் புண் ஸ்பெஷலிஸ்ட் ராஜகோபாலன்..
"உப்பு காகிதத்தை வைத்து தேய்ப்பது போல இருக்கே டாக்டர்..." என்று சொல்லி பெரியவர்களும் ஊளை இடுவார்கள். ஒரு நாள் நானே மாடி படியில் விழுந்து தலையில் காயத்துடன் போய் நின்றேன். டாக்டர் டிஞ்சரையும் பஞ்சையும் எடுத்து தொடங்கினார் தன் வேலையை.
கண்ணில் தண்ணீர் வந்து விட்ட நிலையிலும் அவரிடம், "டாக்டர் என்னோட மூளை தெரிகிறதா?" என்று கேட்டேன். "அது இருந்தால்தானே தெரிவதற்கு.." என்று போட்டார் ஒரு போடு!
தன்னுடைய கன்சல்டிங் அறையில் ஒரு பெரிய மேஜையில் ஏணிப்படி போன்ற அடுக்கில் பல வண்ண திரவங்கள் அடங்கிய ஜார்கள் வைத்திருப்பார். இருமலுக்கு நீலம். வயிற்றுப் பொருமலுக்கு பச்சை. தலை சுற்றலுக்கு மஞ்சள். உறக்கம் வரவில்லையா ஊதா. மாத்திரைகளை அவரே வைத்திருப்பார். அவற்றை ஒரு பளிங்கு கல்லில் வைத்து தானே அரைத்து பகுதிகளாக பிரித்து பேப்பரில் மடித்து தருவார்.
நோயாளிகளின் இதய துடிப்பை உன்னிப்பாக கேட்பார். ஒரு நாள் தாடியும் மீசையும்மாய் ஒரு பையன் வந்தான். அவன் மார்பில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து பார்த்தவர், "ஒரு ஓசையும் வரலையடா. என்னடா ஆச்சு உன் ஹார்டுக்கு? யார்கிட்ட பணயம் வெச்சு ஏமாந்து நிக்கற தேவதாசாட்டம்?" என்று சொல்லி சிரிக்க வைத்து விட்டார்.
கேப்டனோட பேஷண்டுகள் எல்லோரும் மிடில் கிளாஸ். மாதம் முதல் மூன்று நாட்கள் தான் கைகளில் இருக்கும் பசை. மற்ற நாட்களெல்லாம் கடன் தான்.
மருத்துவம் முதல் மளிகை ஏன் பார்பர் வரையும் கூட கடன் கடன் கடன்.
தன்னிடம் வைத்திருக்கும் ஒரு 200 பக்க நோட்டில் தரவேண்டியதை எழுதிக் கொள்வார். அவரிடம் இருந்த ஒரு உழக்கு போன்ற மனிதன்தான் மாதா மாதம் வசூல் செய்ய போவார்.. ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து முறை காவடி எடுத்தால் தான் கால் பங்காவது அடையும். கேப்டன் அலட்டிக்கொள்ள மாட்டார். வரும்போது வரட்டும் என்று பாக்கி வைத்துள்ள நோயாளிகள் வந்தாலும் திருப்பி அனுப்ப மாட்டார்.
இவரை பற்றி இன்னொரு செய்தி. இவரிடம் இருந்தது ஒரு பழைய FORD மோட்டார் சுந்தரம் பிள்ளை கார். அது ஷெட்டிலேயே கோமாவில் இருக்கும். எப்போதாவது தட்டி எழுப்பி பிறகு போர்வை போர்த்தி தூங்க வைத்து விடுவார்.
ரவுண்ட்ஸ் போக அவர் வைத்திருந்தது ஒரு பழைய BSA சைக்கிள். அதன் உயரமான சீட்டில் சோளிங்கர் குரங்கு போல அமர்ந்த படி பவனி வருவார். வீடுகளுக்கு விசிட் செய்ய அவர் வாங்கின பீஸ் ரூபாய் 5.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது நூறு. இப்போதும் அவரை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். அப்படி நினைக்கையில் அவருக்கு ஒரு மிலிட்டரி சல்யூட்டு அடிக்க தவறியதில்லை.