

ரத்தம் தோய்ந்த நிலவொளியில் காட்டேரித் தாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றிக் குட்டிக் காட்டேரிகள் கதை கேட்கும் ஆவலோடு அமர்ந்திருந்தன.
"செல்லக் குட்டிகளே… இன்று நான் உங்களுக்கு மனிதர்களைப் பற்றிச் சொல்லப்போகிறேன்....” என்றதுமே அவற்றுக்குக் குஷியாகிவிட்டது.
“மனிதர்கள் நம்மைக் கண்டால் அஞ்சி நடுங்குகிற கதைதானே, மம்மீ…? ஹைய்யா…! ஜாலியாக இருக்கும். சொல்லு, சொல்லு…!” பெட்டைக் குட்டிக் காட்டேரி குதியாட்டம் போட்டது.
“இல்லை. அதெல்லாம் கதைகள். இன்றைக்கு நான் நிஜத்தைச் சொல்லப்போகிறேன். மனிதர்களின் கடந்த காலக் குருதி வரலாற்றையும், இன்றைய கொடூர நடப்புகளையும்…”
“அது சுவையாக இருக்குமா, மாம்?” மூத்தவனான கடுவன் குட்டிக் காட்டேரி, நாவால் உதடுகளை ஈரப்படுத்தியபடி கேட்டது.
“ம்ம்ம்…??? சுவையானது என்று சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.”
“சரி, சொல்!”
“மனிதர்களில் நம்மைக் 'கண்டு' பயப்படுகிறவர்கள் சிலர். 'காணாமலே' பயப்படுகிறவர்கள்தான் நிறைய. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போவது, பிசாசுகளான நம்மையே நடுங்க வைக்கிற மனிதர்களைப் பற்றி...”
“பேய் ஓட்டும் மந்திரவாதிகள்தானே..?”
“இல்லை. நான் சொல்வது இதயமற்ற மனிதர்களை. அவர்களின் கொடூரங்கள் நரகத்தை மிஞ்சும்."
குட்டிக் காட்டேரிகளின் கண்கள், நிலவின் கிரணங்கள் பட்டு, இருளுக்குள் நெருப்புக் கங்குகள் போல் ஜொலித்தன.
"பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் தங்கள் பேராசைக்காகவும், அதிகாரத்துக்காகவும் உலகையே ரத்தக் களறியாக்கினார்கள். பேரரசுகள் எழுந்தன, விழுந்தன. ரத்தம் ஆறாக ஓடியது.
செங்கிஸ்கான் என்றொரு கொடுங்கோலன் இருந்தான். அவனது குதிரைப் படைகள் நகரங்களை அழித்தன. நான்கு கோடி உயிர்களைக் குடித்தன. இது அக்கால உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதி.
பிறகு, ஹிட்லர் என்றொரு குள்ள அரக்கன் வந்தான். 6 மில்லியன் யூதர்களை வதைமுகாம்களில் அடைத்து, சித்ரவதை செய்து கொன்றான். இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்கள் உட்பட, ஹிட்லரின் ஆட்சியின் விளைவாக சுமார் 50 முதல் 80 மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம்.”
“இவ்வளவு பெரும் தொகையா…? அரக்கர்கள், பூதங்கள், பிசாசுகள் கூட இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் படுகொலைகள் செய்திருக்க மாட்டார்களே..?!”
“நாம் நமது பசிக்காகவும், ரத்த தாகத்துக்காகவும், தேவையான அளவு மட்டுமே மனிதர்களை வேட்டையாடுகிறோம். மனிதர்களோ இன வெறி, மத வெறி, ஜாதி வெறி, நாடாளும் ஆசை, ஆதிக்க போதை, அரசியல் பயங்கரவாதம், மதத் தீவிரவாதம் ஆகியவற்றுக்காகக் கூட்டப் படுகொலைகள் நிகழ்த்துகின்றனர்.”
உலக வரலாற்றில் நிகழ்ந்த பெரிய மதப் படுகொலைகளான அல்பிகென்சியன் சிலுவைப் போர், யூதர்கள் மீதான கூட்டப் படுகொலைகள், ஆர்மீனிய இனப் படுகொலை ஆகியவற்றைக் காட்டேரித் தாய் விளக்கியது. பிறகு சமீப காலங்களில் உலகை உலுக்கிய கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா, டார்பூர், ரோஹிங்கியா இனப் படுகொலைகளை விவரித்தது.
பெட்டைக் குட்டி, கடுவன் குட்டி இரண்டும் அரண்டுவிட்டன.
“காட்டேரிகளாகிய நாமே சில மனிதர்களின் செயல்களைக் கண்டு அஞ்ச வேண்டியதாகத்தான் இருக்கிறது," என்றது பெட்டைக் குட்டி.
“ஆனால், இத்தகைய வெறி பிடித்த மனிதர்கள் சொற்பம்தானே?” கடுவன் குட்டி சொல்லியது.
“கொலை வெறி பிடித்த மனிதர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், பண வெறி, பதவி வெறி, அதிகார வெறி, இன – மத – ஜாதி வெறி, காம வெறி ஆகியவை கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை அதிகம்.
அதுவும் சமீப காலங்களில் காமவெறி பிடித்த மனித மிருகங்கள் பெருத்துவிட்டன. மிருகங்கள் கூட செய்யாத கொடுஞ்செயல் அது. சிறுமிகளையும், பெண் குழந்தைகளையும் மாபாதகம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் இந்தக் கொடூரம் அதிகபட்சமாக உள்ளது.”
தாய்க் காட்டேரி அதில் சில கொடூரங்களை விவரிக்க, குட்டிக் காட்டேரிகள் வெலவெலத்து நடுங்கின.
அதை கவனித்த தாய்க் காட்டேரி, “மனிதர்களின் கொடூரங்கள் பிசாசுகளின் கொடூரங்களைக் காட்டிலும் பயங்கரமானவை,” என்றுவிட்டு, “நாம் மனிதர்களிடமிருந்து எப்போதும் தூரத்திலேயே இருப்பது நல்லது. அவர்களின் நிழல்கூட நம் மீது படக்கூடாது" என எச்சரித்தது.
மனிதர்கள் பற்றிய பயம் துர்க்கனவுகளாகித் துரத்திக் கொண்டே இருந்ததால், அன்றிலிருந்து குட்டிக் காட்டேரிகளால் நிம்மதியாக உறங்கவே முடியவில்லை.