மாரி செல்வராஜின் 'வாழை' - எனது விமர்சனம்!

Vaazhai Movie Review
Vaazhai Movie Review
Published on

சமீப காலங்களில் இந்தப் படத்திற்கு கிடைத்த ப்ரீ பப்ளிசிட்டி வேறு எந்தப் படத்திற்கும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. இயக்குனர்கள் அனைவரும் அழைக்கப்பட்டதும் அவர்கள் நள்ளிரவு தாண்டிப் படத்தைப் புகழ்ந்து பேசியதும் அது வைரலானதும் இதுவரை நடந்திராத ஒரு விஷயம். அதுவும் பாலாவும், அழகம் பெருமாளும், மிஷ்கினும் பேசியதெல்லாம் வேறு ரகம். சாதாரணமாக இந்த மாதிரி பேச்சுக்களால் பெரிதும் பாதிக்கப்படாது என நினைத்த சமூக ஊடகங்களும், விமர்சகர்ளும் போட்டி போட்டுக் கொண்டு வாராது வந்த மாமணியாய் புகழ்ந்து தள்ளத் துவங்கினர். அப்படியொரு படம் தான் வாழை. மன்னிக்கவும் மாரி செல்வராஜின் வாழை.

வறுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு  குடும்பம். தாய் (ஜானகி) அக்கா (திவ்யா) இருவரும் வெகுதூரம் பயணப்பட்டு வாழைத்தார் சுமந்து தான் ஜீவனம். பள்ளி விடுமுறை நாட்களும் அந்தச் சிறுவனும் (சிவனைந்தன் என்கிற பொன்வேல்) காய் சுமக்கச் செல்வது வழக்கம்; அவனுக்குப் பிடித்தமில்லை என்றாலும் கூட. கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் அவனின் உற்ற தோழன் சேகர். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையை சிவனைந்தனுக்கு பிடித்திருக்கிறது. அவரும் அவன்மேல் அன்பாக இருக்கிறார். ஒரு மிக முக்கியமான தருணத்தில் அந்தக் காய் சுமக்கும் பயணத்திற்கு செல்லாமல் பள்ளிக்குச் சென்று விடுகிறான். அந்தப் பயணத்தில் நடந்தது என்ன. அது எப்படி அவன் வாழ்வையே திசை மாற்றுகிறது என்பது தான் வாழை. 

தொடக்கத்தில் இருந்தே ஒரு இறுக்கமான முடிவிற்குத் தயார்படுத்தித் தான் கதைக்குள் செல்கிறார். படத்தின் துவக்கத்தில் கருப்பு வெள்ளையில் பா என்று கத்தியவாறு ஓடுகிறான் சிவனைந்தன். அது படத்தில் வரும்போது முதலில் தந்த ஒரு பதற்றத்தை தரவில்லை. படத்தின் ஆரம்பத்திலேயே அந்தக் குறிச்சொல்லி வீட்டிற்கு முன் துர்சகுனமாய் சொல்லிச் செல்கிறான். பின் வருவதற்கு முதல் ஐந்து நிமிடங்களிலேயே நம்மைத் தயார் படுத்தி விடுகிறார் இயக்குனர். 

தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் மிகப் பெரிய பலம். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நாம் அந்தக் கதையோடு ஒன்றி விடுவதால் நடித்தவர்களில் கலையரசனையும், நிகிலா விமலையும்  தவிர ஒருவரையும் நமக்குத் தெரியாது என்ற எண்ணமே நமக்கு வருவதில்லை.

இயல்பான ஒரு கிராமச் சூழலில் நகர்கிறது படம். என்ன பிரச்சினை என்றால் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவ்வப்போது குறிப்பால் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அது நடக்கும்போது நடந்ததை பின்னாலும் விளைவுகளை முன்னாலும் காட்டியது தான் என்னைப் பொறுத்த வரை ஒரு பின்னடைவாகப் பார்க்கிறேன். அவ்வளவு விஸ்தாரமாக ஒரு விபத்தின் விளைவைக் காண்பித்து விட்டுப் பதினைந்து நிமிடங்கள் கழிந்து அதைக் கருப்பு வெள்ளையில் திரும்பக் காட்டும்போது அது கொடுக்க வேண்டிய விளைவைக் கொடுக்கவில்லை. காதலா என்றே தெரியாமல் இருக்கும் கலையரசன் எடுக்கும் முடிவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பார்க்க வரும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அனுப்ப வேண்டும் என்றால் அதில் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். சேது, நந்தா, பிதாமகன் உள்பட அனைத்து பாலா படங்களும் அதில் வந்திருக்கின்றன. பார்ப்பவர்களின் அனுதாபம் வேண்டுமா, அதிர்ச்சி வேண்டுமா என்ற குழப்பமே இதில் இருப்பதாக உணர்கிறேன்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வாழை - மாரி செல்வராஜின் கிளாசிக்!
Vaazhai Movie Review

முகத்தைப் பாதி மறைத்தும் மறைக்காமல் சிவனைந்தன் டீச்சரைப் பார்க்கும் காட்சி, கடைசியில் பசியில் கண்கள் இருட்ட பார்த்த எதுவும் மனதில் ஒட்டாமல் சாப்பாடு மட்டுமே நினைவில் இருக்க ஓடும் காட்சி, தனது மகனைப் பட்டினியாக அனுப்பிவிட்டேன் என்று சோற்றுத் தட்டால் முகத்தில் அறைந்து அந்தத் தாய் அழுகும் காட்சியென இவை கொடுக்கும் அனுபவங்கள் அந்தக் கிளைமாக்சில் இல்லை என்றே நினைக்கிறேன். அந்தப் பையனின் வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றும் டீச்சர் கதாபாத்திரத்தை ஏன் கதையோடு இணைக்க முயலவில்லை. அவ்வளவு நல்ல ஒரு கதாபாத்திரம் ஒரு கௌரவ வேடமாகவே கடந்து போகிறது. இதுவும் எனக்கு ஒரு ஏமாற்றம்.

இருப்பினும் ஒரு படத்தின் முடிவு சோகமாகத் தான் இருக்கும் என்று தெரிந்தும் அதற்கான திரைக்கதையில் ஒரு சிறுவனின் வாழ்வனுபவங்களை (இது மாரி செல்வராஜின் உண்மைக் கதை) ரசிக்கும் படி அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ் வென்றிருக்கிறார். காலத்தை வென்ற காவியம் போன்று அளிக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை என்பது தான் நிதர்சனம். அந்த விதத்தில் கொண்டாடப்பட வேண்டிய படமாக இல்லாவிட்டாலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி தான் வாழை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com