
வெள்ளித்திரையை விரும்பும் ரசிகர்கள் மனதில் அன்றும், இன்றும், என்றும் இருக்கும் எவர்கிரீன் திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தந்த இயக்குனர்களில் நிரந்தர இடத்தைப் பெறுபவர் பழம்பெரும் இயக்குனரான கே சங்கர். காலத்தால் அழியாத திரைக்காவியங்களை கலைஞர்களின் நடிப்பில் வழங்கி தத்ரூப இயக்குனரான இவரது நினைவு நாளான இன்று (மார்ச் 5) இவரைப்பற்றிய நினைவுத்துளிகள் சில இங்கு.
கேரள மண்ணில் பிறந்தாலும், கே. சங்கர் அவர்களை தமிழ்த்துறை உலகம் சுவீகரித்துக் கொண்டது. ஆம். தந்தை கண்ணனின் இனிஷியலோடு திரைத்துறைக்கு அறிமுகமான கே. சங்கர், ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் படத்தொகுப்பாளராக தனது சினிமா உலக பயணத்தை துவங்க, தனது முயற்சியாலும் உழைப்பாலும் இயக்குனரானார்.
கேரளத்திலிருந்து கோவைக்கு குடிபெயர்ந்த இவரது தந்தை ஆங்கிலேயரின் பஞ்சுமில்லில் பணி செய்த நிலையில் சங்கரின் கல்வி தடைபட்டது. வீட்டில் இருந்த போது பார்த்த ஆங்கிலேய திரைப்படங்கள் இவரது சினிமா ஆர்வத்தை வளர்த்து இவரது திறமையை முடக்கி விடாமல் திரையில் சாதிக்கும் வேகத்தை தந்தது.
திரை வாய்ப்பு தேடியபோது வந்தது ஏவிஎம் நிறுவனத்தின் படத்தொகுப்பு பணி. ஆனாலும் அவர் இலக்கு இயக்குனர் ஆவதே. கலைக்கு மொழி அவசியமில்லை என்பது போல் அவர் இயக்கிய முதல் திரைப்படமாக வந்தது 'டாக்டர்' எனும் சிங்கள மொழிப் படம். இயக்குனர் கனவு நிஜமாகி, கடும் உழைப்புடன் அவரின் திரைப்பயணம், இயக்கம் நோக்கி வெற்றிகரமாக நகர்ந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றுடன் ஹிந்தி மூலம் வட நாட்டிலும் தனது திறமையை நிரூபித்தவர். 80 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற முதல்வர்களாகத் திகழ்ந்த திரையுலகம் தந்த மாபெரும் கலைஞர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, என் டி ராமராவ் ஆகியோரை தனது படங்கள் மூலம் இயக்கிய பெருமை பெற்றவர்.
இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள் மட்டுமல்ல, அப்படங்களின் பாடல்கள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்து போனது. உதாரணமாக 1962ல் வந்த ஆலயமணியின் பாடல்கள்... சட்டி சுட்டதடா, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, பொன்னை விரும்பும் பூமியிலே, தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என அத்தனை பாடல்களும் கிளாசிக் ரகம்.
'ஆலயமணி' , 'ஆண்டவன் கட்டளை' , 'அன்புக்கரங்கள்' போன்ற படங்களில் சிவாஜியின் உணர்வு பூர்வமான நடிப்பைத் தந்த சங்கர் 'பணத்தோட்டம்' 'அடிமைப்பெண்' போன்ற படங்களில் எம்ஜிஆரை காதல் உணர்வில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றி கண்டார்.
என். டி. ராமராவிற்கு 'பூகைலாஷ்' ஜெயலலிதாவிற்கு 'கௌரி கல்யாணம்' என மைல்கல் படங்களைத் தந்தவர் கே சங்கர்.
அபிநயசரஸ்வதி சரோஜாதேவி முதல் தேவிகா வரை அன்றைய முன்னணி நாயகிகளின் திறமையை சரியாக புரிந்து வெளிக்கொண்டு வந்த இயக்குனர். ஜெமினி - சரோஜாதேவி நடிப்பில் வந்த கைராசி, ஆடிப்பெருக்கு போன்ற கண்ணீர் காவியங்களை தந்து அவற்றை மெகா ஹிட்டாகவும் ஆக்கியவர். ஆண்டவன் கட்டளையில் நடித்த தேவிகாவின் அசத்தல் முக பாவனைகள் அன்று பேசுபொருளானது.
அவ்வளவு ஏன்? பாலிவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த ஹேமமாலினியை ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வைத்து அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். 1963-ல் வெளிவந்த 'இது சத்தியம்' படத்தில்தான் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி திரையில் தனது முகம் காட்டினார் ஹேமமாலினி.
தான் நினைத்தது போல் காட்சிகள் அமைய வேண்டும் என நினைத்து அதற்கான கடும் உழைப்பைத் தானும் தந்து தன்னுடன் பணி செய்தவர்களையும் ஊக்குவித்தார்.
சமூகப் படங்களிலும், குடும்பப் படங்களிலும் தடம் பதித்த சங்கர் பின்னாளில் பக்திப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவர் இயக்கத்தில் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டு வெளிவந்த 'வருவான் வடிவேலன்' திரைப்படம் காண திரையரங்குகளில் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்த நிகழ்வு சங்கரின் பக்திப் பட வெற்றிக்கு சான்று.
இளையராஜாவின் புகழ் வெளிப்பட காரணமாக அமைந்த பக்திப் பாடல்களில் ஒன்றான 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற பாடலை 'தாய் முகாம்பிகை' படத்தில் உருப்பெறச்செய்தவர் இறையருட்செல்வர் பட்டம் பெற்ற கே. சங்கர்தான்!