சிறுகதை: அங்கீகாரம்!

பணம், பதவியை விட உயர்ந்தது ஆசிரியர் பணி என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி!
The MLA falls at the feet of retired teacher to receive his blessings.
tamil short story Img credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

அந்தத் திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. புற நகர்ப் பகுதியின் புதிய மண்டபம் அது. குருநாதன் மனைவியை வாசலில் இறக்கி விட்டார். சற்றே தள்ளி, சாலையின் ஓரத்தில் ஸ்கூட்டரை நிறுத்தினார். காத்திருந்த மனைவியுடன் படியேறினார். மேலே ஹால், கீழே டைனிங், மணமக்கள் ஒளி வெள்ளத்தில் நின்றார்கள். பரிசளிப்போர் க்யூ நீண்டிருந்தது. வரிசையில் நின்ற சிலர் வணக்கம் சொன்னார்கள். மணமகள் இல்லத்தினரே அழைத்திருந்தனர். அவர்கள் யாரும் அங்கு இல்லை. மனைவி பின் தொடர மெல்ல முன்னேறினார். மேடையில் ஏறும்போதுதான் மணமகளின் தந்தை வந்து வரவேற்றார்!

ஒரு நிமிடம் அவர் மனம் பின்னோக்கிப் போனது. அப்பொழுது அவர் தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிச்சயமான அவருக்கு, ஊரில் ஏகப்பட்ட மரியாதை. அதற்குக் காரணமும் உண்டு. அப்பொழுதெல்லாம் வேலையில் சேர, வங்கியில் கடன் வாங்க, பள்ளி, கல்லூரிகளில் சேர என்று எதற்கெடுத்தாலும் சான்றிதழ் நகல்களில் அட்டஸ்டேஷன் வாங்க வேண்டும்.

அட்டஸ்டேஷன் என்பது அசல் சான்றிதழின் உண்மையான நகல்தான் என்பதை உறுதிப்படுத்த, உயர் அதிகாரி கையொப்பம் இட்டு, அலுவலக அதிகார சீல் வைத்துக் கொடுப்பது. குருநாதன், தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக் கூடாது என்பதற்காக, வீட்டிலும் அந்தப் பணியைச் செய்வார். அட்டஸ்டேஷன் போடும் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொள்வதும் உண்டு.

பைசா செலவில்லாமல் வேலை நடைபெற வேண்டுமென்றால், "குருநாதன் சார் வீடே கதி!" என்று அப்பகுதியினர் பேசும் அளவுக்கு அவர் பிரபலம். 'அட்டஸ்டேஷன் ஆசிரியர்' என்றே அவருக்கு ஒரு பெயரும் உண்டு. வெளியில் சொல்லாமலே ஏழை மாணவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வார். எளிமை, பணிவு, இதய சுத்தியுடன் பணி என்பதிலேயே குறியாக இருந்தார். அதனால் நல்லாசிரியர் விருதும் பெற்றார்!

இதையும் படியுங்கள்:
இரவுப் பயணமும் இளையராஜாவின் இதமான இசையும்: ஆழ்மன அமைதி தரும் ஆன்மீக அனுபவம்!
The MLA falls at the feet of retired teacher to receive his blessings.

அப்பொழுதெல்லாம் திருமண மண்டபத்திற்கு வந்தாலே, பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் போட்டி போட்டுக் கொண்டு அவரை வரவேற்பார்கள். பந்தா விரும்பாத அவர், பலமுறை கூச்சத்தில் நெளிந்திருக்கிறார். பணி ஓய்வு பெற்றபின் அதிகம் வெளியில் செல்வதில்லை. அதையெல்லாம் நினைத்துப் பார்த்த அவருக்கு, சிரிப்புதான் வந்தது. உலக இயல்பு என்னவென்பதை அறிந்தவர்தான் அவர். ஆனாலும் அவரும் சராசரி மனிதர்தானே!

’ம்! காலம் ரொம்பவும் மாறிப் போய்க் கொண்டுதான் இருக்கிறது!’ என்று எண்ணியவராக, கவரை மணப்பெண்ணின் கையில் கொடுத்து வாழ்த்தி விட்டு, மனைவியுடன் மேடையை விட்டு இறங்கினார். டைனிங் ஹால் ஃபுல்லாகி இருக்க, ஓரத்தில் சிறிது நேரம் நின்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு வெளியே வர எத்தணிக்க, திருமண வீட்டு உபசரிப்பாளர் கூடவே வாசல்வரை வழியனுப்ப வந்தார்.

அந்த நேரம் பார்த்து எம்.எல்.ஏ.வின் கார் வர, திருமண இரு வீட்டார், கட்சிக்காரர்கள், அதிகாரிகள் என்று கூட்டம் அலைமோத, குருநாதனை வழியனுப்ப வந்தவரும், எம்.எல்.ஏ. வை வரவேற்க விரைய, சிரித்தபடி குருநாதன் தன் ஸ்கூட்டரை அணுகினார்.

ஸ்டாண்டைத் தட்டி அதனைத் தள்ளியவர், அசந்து நின்று விட்டார்! எம்.எல்.ஏ. நேராக அவரை நோக்கி வர, சால்வைகள், மாலைகளுடன் நின்றவர்கள் விக்கித்து நின்றனர். எம்.எல்.ஏ.வைப் பின் தொடர்ந்தனர். பவ்வியமாகக் குருநாதனை அணுகிய எம்.எல்.ஏ. பாலாஜி, குனிந்து கால்களைத் தொட்டு வணங்கியபடி “சார் உங்க பாலாஜி சார்! என்னை ஆசிர்வதிங்க!” என்க, அவர் “என்ன பாலாஜி நீங்க… பொது எடத்ல” என்று குழறினார். மொத்தக் கூட்டமும் குருநாதன் வாத்தியாரை மரியாதையுடன் பார்க்க, அவர் முகத்தில் சங்கோஜம் முகாமிட்டது!

நல்ல ஆசிரியர்களை நானிலம் என்றும் வாழ்த்தும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com