

நவீன மே தின சூளுரை..!
சிக்காகோவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில்தான் வெண்கொடி செங்கொடியாக உருவானது; ஆம், கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியானது. அமெரிக்க முதலாளித்துவ அரசு, போராடும் தொழிலாளிகளுக்குக் கொடுத்த பரிசுதான் துப்பாக்கிச் சூடு! அன்று அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
8 மணி நேரம் உழைப்பு
8 மணி நேரம் ஓய்வு
8 மணி நேரம் தூக்கம்
இன்று நிலைமை மாறிவிட்டது, நாடுகள் முன்னேறி வருகின்றன. இருந்தாலும், தொழிலாளர் நிலைமை முற்றிலும் மாறுபடவில்லை. உலகம் முழுவதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எல்லா நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நகரங்களில் உதிரித் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இன்று அதிகம். சென்னையில் மட்டுமே அமைப்பு சாரா பெண்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்கின்றனர்; இது சுரண்டலோ சுரண்டல்!
எத்தனை மே தினங்களைப் பார்த்துவிட்டோம்? சூளுரை என்பது வெறும் சடங்காக மாறி வருகிறது. உண்மையில் தொழிற்சங்கங்கள் பலமாக இருந்தாலும், அவர்களுக்கு வர்க்க அரசியல் அதிகம் தெரிவதில்லை. உற்பத்தி அதிகம் ஆனாலும் தனிநபர் வருமானம் உயரவில்லை. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக மாறி வருகிறான்; ஆனால், தொழிலாளியோ மேன்மேலும் ஏழையாகி வருகிறான்.
எனவே, எப்போதும் செய்யும் சூளுரை இப்போது உதவாது. நவீன காலத்தில், தொழிலாளர் தேவைக்கு ஏற்ப நமது கோரிக்கைகள் அமைய வேண்டும்:
8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் தூக்கம்.
வருடா வருடம் சம்பளம் உயர வேண்டும்.
வாரத்தில் 2 நாள் விடுமுறை அவசியம்.
தொழிலாளர் விரோத சட்டங்கள் ஒழிய வேண்டும்.
எல்லா தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் தர வேண்டும்.
பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் 8 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தர வேண்டும்.
அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அமைக்க வேண்டும்.
உறுதியாக இருப்போம்! அர்ப்பணிப்புடன் போராடுவோம்! வெல்வோம், வெல்வோம்!
ஆம், தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி நிச்சயம். மே தினம் சடங்காக இல்லாமல், உயிராக இருக்க வேண்டும். மே தின (may 1 labour day) நவீன சூளுரை செய்வோம். தொழிலாளர் ஒன்றுபட்டு பலம் பெற, இந்த மே தினம் முதல் அடியாக இருக்கட்டும்!
மே தினம் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!