தண்ணீருக்குள் பாய்ந்து பிடித்த பாம்பு... சில நொடிகள் உறைந்து போன இதயம்! - Zai Whitaker பசுமை நினைவுகள்!

wildlife-memories
wildlife-memories
Updated on
Kalki Strip
Kalki Strip

- Article written in English by Zai Whitaker

- Tamil Translation by Priyanka R

கொரோனா ஊரடங்கின்போது, பயணங்களுக்கு முற்றிலும் வாய்ப்பின்றி போகவே, நினைவலைகளின் வழியே பல அற்புதமான, சோர்வில்லாத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அடுக்கி வைக்கப்படாமல் கிடந்த பழைய புகைப்பட ஆல்பங்களைச் சீர் செய்யத் தொடங்கியபோது, அவை என்னை நினைவலைகளின் பாதையில் மெல்ல மெல்ல அழைத்துச்சென்றன.

அது 1970-களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்டது. ரோமுலஸ் விட்டேக்கரின் குழுவோடு அமராவதி அணைக்கட்டில் முதலைகளின் முட்டைகளைச் சேகரிக்கும் பயணத்தின்போது, ஆற்றங்கரையில் ஏதோ ஒரு சாதனைப் புரிந்த பெருமிதத்துடன் நான் அமர்ந்திருக்கும் புகைப்படம் அது.

romulus-whitaker-zai whitaker
romulus whitaker-zai whitaker

நல்லவேளை, அது தண்ணீர் பாம்புதான்! 

ரோம் உட்பட அனைவரும் அணைக்கு மேலிருந்த வரப்பில் நடக்க, நான் கரையோரமாக நடந்து கொண்டிருந்தேன். தண்ணீரின் ஓரத்தில் பாம்பொன்று ஊர்ந்து செல்வதைக் கண்டதும் நான் மிகுந்த உற்சாகத்துடன் கூக்குரலிட்டேன். "அதை சீக்கிரம் பிடி! பிடி!" என்பதே ரோமின் உடனடி பதிலாக இருந்தது. அவராலும் பாம்பை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனக்கும் அது என்ன பாம்பென்று தெரியவில்லை.

எங்களுக்குத் திருமணமான புதிது என்பதால், எப்படியாவது 'என் பாம்பு பிடிக்கும் திறமையால்' ரோமை வியக்க வைக்க, சட்டென்று நீருக்குள் பாய்ந்து கப்பென்று பாம்பைப் பிடித்தேன். நல்லவேளையாக அது நஞ்சற்ற பச்சை தண்ணீர் பாம்பு (Green Keelback). ஆனால், அதைப்பிடித்த அந்தச் சில நொடிகள்... 'இது விஷமுள்ளதா இல்லையா?' என்று என் மனதிற்குள் எழுந்த அந்தத் தவிப்பு இப்போதும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. புகைப்படத்தில் இருந்த என் பெருமிதத்திற்கு இந்நிகழ்வே காரணமாகும்.

wildlife-memories
zai whitaker with the green keelback snake and the baby ghariyal

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!

இதைப்போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். ஒருமுறை அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தபோது, குழி விரியன் (Pit viper) பாம்பொன்றை, பூனைக்கண் பாம்பு (Cat snake) என நினைத்து பிடித்ததும், பப்புவா நியூ கினியாவில் இராட்சத அளவிலான உப்புநீர் முதலைகளைக் கொண்ட சகதி மிகுந்த காயல்வெளிகளில் (Marine swamps) அலைந்து திரிந்ததும், ஆனைமலைக் காடுகளில் புதர் மறைவில் நின்று காட்டுமாடு ஒன்றை புகைப்படம் எடுக்க முயன்றதும் என வீர தீர சாகசக் கதைகள் ஏராளம். முதலைப்பண்ணையில் இனப்பெருக்க காலங்களில் முட்டையிடும் பெண் முதலைகளின் பண்புகளை  ஆய்வு செய்யும்போது மறைவாக நின்று, தற்காப்பிற்காக கையில் வெறும் குச்சியுடன் நின்ற சம்பவங்களும் உண்டு.

பின்னர் நாட்கள் செல்ல செல்ல காலம் ஒரு முக்கியமான பாடத்தை சொல்லித்தந்தது. ஓர் இயற்கை ஆர்வலராகவும் வனவிலங்குகளை நேசிப்பவராகவும் இருப்பதற்கு அவற்றைக் கையாள தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அது. உயிர்கள் மீதான பரிவும் நேசமும் இருந்தாலே போதுமானது.

சலீம் மாமா கற்றுத் தந்த பாடம்

நானும் எனது அண்ணன் மற்றும் தங்கைமார்களும் சிறுவர்களாக இருந்த நாட்களில், மாமா சலீம் அலியுடன் அடிக்கடி பறவை அவதானிப்புக்காக செல்வதுண்டு. மரக்கிளைகளில் இருந்து ஒவ்வொருமுறை ஏதேனும் சத்தம் கேட்கும்போதும், அதனை சுட்டிக்காட்டி “இது என்ன பறவை?’ என்று கேட்பார். “மணிப்புறா!”, “தவிட்டுக் குருவி!” என்று ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிக் கொண்டிருப்போம். சிறு புன்னைகையுடன் “அது அணில்!” என்பார் அவர். 

சலீம் மாமாவின் மூலம் காலம் சொல்லித்தந்த மற்றுமொரு பாடம், இயற்கை ஆர்வலராகவும் வனவிலங்குகளை நேசிப்பவராகவும் இருப்பதற்கு அவற்றின் பெயர்களையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது. 

the bird man of india book
the bird man of india book

என் மனதில் நிற்கும் தருணங்கள்

ஒருமுறை தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது அங்குள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில் சிங்கம், காண்டாமிருகம் மற்றும் சிவிங்கிப் புலிகள் என பல்வேறுவிதமான வன உயிரினங்களைக் காணமுடிந்தது. டான்சனியா மற்றும் பப்புவா நியூ கினியா சென்றிருக்கையில், கண்ணைக் கவரும் வண்ணமிகு பறவைகள் பலவற்றை மணிக்கணக்கில் கண்டு ரசித்துள்ளோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும்விட, வீட்டிற்கு மிக அருகிலேயே, முதலைப் பண்ணையில் ஓணான் (Garden lizard) முட்டையிடும் தருணமும்,  பாம்புப்பண்ணையில் இருந்தபோது குரங்குகள் சிறுவர்களைப் போல  கிளைகளிலிருந்து குளத்திற்குள் தாவிக் குதித்து விளையாடி மகிழ்வதைக் கண்டு நெகிழ்ந்த தருணங்களும்தான் மனதிற்கு மிக நெருக்கமான என் வாழ்வில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகளாகும். 

ஓணானின் ஓட்டமும் குரங்குகளின் களியாட்டமும் 

ஓணான்கள் தமது முட்டைகளை நிலத்தில் குழிதோண்டி, அதில் முட்டையிட்டு, பின்னர் தன் கால்களாலும் தலையாலும் குழியில்  மண்ணை இட்டு நிரப்பும். முட்டையிடும் சமயங்களில், மனிதர்கள் மிக அருகில் இருந்தாலும் அவை சிறிதும் பொருட்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட ஓர் அருமையான தருணத்தை வெறும் மூன்று அடி தூரத்தில் அமர்ந்து காண்பதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்ததை எண்ணி மகிழ்ந்த வேளையில், ஓணானுக்கே உரிய பாணியில், அது குடுகுடுவென்று ஓடி மறைந்தது.

ஒரு சமயம், மழைக்குப் பிறகு கிண்டி பாம்புப் பண்ணைக்கு அருகிலிருந்த குளமொன்று மழைநீரால் நிரம்பியது. குளத்தை ஒட்டி சுமார் 10 அடி உயரத்தில் வளைந்திருந்த மரக்கிளைகளில், அடுத்தடுத்து குரங்குகள் வரிசையாய் விளையாடிக் கொண்டிருந்தன. வரிசையில் முதலாவதாக நிற்கும் குரங்கு, கிளையிலிருந்து குதித்து கரைக்கு நீந்திச் சென்று, மீண்டும் வரிசையில் சேர்வதற்கு வேகமாகத் திரும்பி வரும். இதற்கிடையில், வரிசையில் உள்ள மற்ற குரங்குகள் பொறுமையிழந்து, முன்னால் இருப்பவற்றை நீருக்குள் தள்ளிவிடுவதும் சண்டையிடுவதும் என வேடிக்கையான, நகைப்பூட்டும் தருணங்கள்.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு

இயற்கை மற்றும் காட்டுயிர் பாதுகாப்புத்துறையில் இருக்கும் நாம், ஊரடங்கு போன்ற காலத்தை பயனுள்ளவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். காலம் நமக்கு கற்றுக்கொடுக்க முயன்றதை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டும். நமது காடுகளையும் அதன் உயிரினங்களையும் பாதுகாக்க நமக்கு கிடைத்த எத்தனை எத்தனை மகத்தான வாய்ப்புகள் ஏன், எப்படி நழுவிப் போயின? என்பதை ஆராயவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கம்யூனிசம் எப்படி இருக்கும்?
wildlife-memories

காலம் ஒரு சிறந்த ஆசான். “கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு” என்பதுபோல யாரும் அதன் பாடங்களை முழுமையாக படிக்க முடியாது. ஆனால் நாம் கற்ற கைம்மண் அளவை வைத்து வாழும் காலத்தில் இயற்கையை பாதுகாக்க நம்மாலானதை தொடர்ந்து செய்யவேண்டும். அதற்கு தினந்தோறும் பிறக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவது, நமது எண்ணங்களிலும் செயல்களிலும்தான் அடங்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com