

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுவை கண்டிருக்கிறார்கள் அந்நாட்டு சுகாதரத் துறையினர்! இது எப்படி சாத்தியப் பட்டிருக்கும். கொசுவை விட வேகமாக பறந்த நம் கற்பனை குதிரை பயணித்த பாதையை படியுங்கள்!
நம் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொசுவென்ற அரக்கனுக்கு இதுவெல்லாம் ஒரு கொசு மேட்டர்! அரக்கன் என்றால், பத்து தலையுடன் இராவணன் வருவான், கதையுடன் பீமன் வருவான், பானை பானையாய் உணவுகளை விழுங்கும் கடோத்கஜன் வருவான் என்ற நினைப்பெல்லாம் நமக்கு போன யுகத்தின் காப்பிய மிச்சம்!
கண்ணுக்கே தெரியாமல் உலகையே முடக்கச் செய்த கொரோனா கிருமியின் தாக்கத்தை உணர்ந்தபிறகும், எந்த கொசுவும் என்னை எதுவும் செய்யமுடியாது என்று மீசையை முறுக்க வேண்டாம். உங்கள் கையை மீசையிலிருந்து எடுக்கச் செய்துவிடும் ஒரு கொசுவின் கடி!
வரலாறுகளிலிருந்து பாடம் கற்பீர்கள் என்றால் இதோ ஒரு வரலாற்று உண்மை. உலகம் அனைத்தையும் தன் ஒற்றைக் குடையின், கீழ் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று படையெடுத்து வந்தானே மாவீரன் அலெக்சாண்டர். அவனுக்கு நேர்ந்தது என்ன?
ஒரு கொசு கடித்து மலேரியா வந்தே இறந்துப்போனான். ‘எனது சவப்பெட்டியில் எனது கைகளை வெளியில் விரித்த படி வையுங்கள், இவ்வளவு சாம்ராஜ்யங்களை ஜெயித்த நானே, எதையும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்பதை உலகம் உணரட்டும்’ என்று அவன் சொன்னாதாகத் தகவல்.
‘நான் இறந்த பிறகு கொசு என்னை கடிக்காது ஏனெனில் என் இரத்தம் உறைந்ததால், என்னிடம் வராமல் பறந்து போகும், வாழும் வரை தான் கொசுகூட உன்னை மதிக்கும் என்று சொல்லாமல் சொல்லிப் போனான்’ அந்த மாவீரன் என்றும் புரிந்துகொள்ளலாம் அல்லவா!
பாண்டிச்சேரியில் வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இருக்கிறது. அதன் பணியே இதைப் போன்ற நுண்கிருமிகளை எப்படி ஒழிப்பது என்பதை அராய்ச்சி செய்வது தான். அதில் கொசு தன்னை அழிக்கும் மருந்தையே உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் என்பதை கண்டு பிடித்தனர். கொசுவை விரட்ட நீங்கள் வைக்கும் கொசுச் சுருள், பிளாஷ் பாக் செய்யும் நாயகர்களுக்கு உதவுமேயன்றி உங்களை கொசுவிடமிருந்து காப்பற்றாது.
கொசுவுக்கு மாற்றாக மற்றொரு நுண் கிருமியை உண்டாக்கி அதை கொசு வாழும் இடங்களான நீர் தேக்கங்களில் விட்டு கொசுவின் முட்டைகளை சாப்பிட்டு கொசுவின் இனப்பெருக்கத்தை தடுத்து வருகின்றனர்.
இவர்கள் இவ்வளவு தீவிரமாக வேலை செய்வதை அந்த விஞ்ஞானிகளின் இரத்தத்தை குடித்து தெரிந்து கொண்ட கொசு உங்களுடன் எந்த இரத்த சம்பந்தமும் வேண்டாம் என்று முடிவு செய்து ஐஸ்லாந்து சென்று விட்டது!
பாடித்திரிந்த பறவைகளே என்று நீங்கள் கல்லூரியின் கடைசி நாட்களில் பாடியதை கொசு அந்த அறையில் இருந்து கேட்டிருக்கும். நமக்கும் தான் பறக்கத் தெரியுமே! எதற்கு இப்படி நசுக்கப்பட்டும், பேட்டால் அடிபட்டும், கண்ட கண்றாவி கொசு வர்த்தி சுருள்களை சுவாசித்து ஆஸ்துமா வந்தும் சாக வேண்டும் என்று நினைத்திருக்கும். எங்கேயும் பறக்கவும், பிறக்கவும் தெரியும் நமக்கு திரை கடல் ஓடி திரவத்தை குடிக்கவும் தெரியும் என்று திட்டமிட்டு கிளம்பிவிட்டது.
கல்லுக்குள் ஈரம் இருப்பதை போல பனிக்கட்டியின் இடையேயும் இருக்கும் தண்ணீரே நமக்கு போதும் என்று நினைத்து விட்டார் இந்த இரத்த சேமிப்பாளர்! ஆமாம் சார்! எதுக்கு வம்பு. நோயாளியை மருத்துவ பயனாளர், குடிகாரரை மதுப்பிரியர் என்று விளிக்கும் காலம் இது! இப்படிச் சொல்லவில்லையென்றால் ராஜதுரோக குற்றத்திற்கு உள்ளாகி குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறைக்கு அனுப்பிவிட்டால்? அங்கேயுள்ள கொசு கடியை யார் தாங்குவது!
தமிழில் பல்வேறு துறைகளுக்கு ஏற்ப புதிய கலைசொற்களை கண்டுபிடித்து சொல்லகராதி ஏற்படுத்தச் சொன்னால், எதற்கு நாம் தமிழில் புதுச் சொற்களை கண்டுபிடிக்கிறோம் பாருங்கள்?!
வச வச வென்று பெற்று போட்டுக்கொண்டே இருக்கும் கூட்டம் இந்தியாவை போல ஐஸ்லாந்தில் இருக்காது என்று விளங்க சிறிது காலம் பிடிக்கும் அந்த கொசுக்களுக்கு. இருக்கும் சில ஆயிரம் பேர்களை நம்பித்தான் அது வாழவேண்டி வரும். உற்பத்தியை குறைத்து சந்தையை பாதுகாக்கும் மேலாண்மையை அது ஐஐம் பேராசிரியர்களின் இரத்ததை உறிஞ்சும்போது பெற்றிருக்கும்.
மேலும் நம்மவர்களை போல மேல் சட்டை போடாமலும், பல பாகங்கள் வெளியில் தெரியும் உடைகளை அவர்கள் அணிவதில்லை. அந்த குளிர் அனுமதிப்பதில்லை என்பதை உணரவும் காலம் எடுக்கும். உடைகள் போடும் போதே உட்புகுந்து விடும் சாமர்த்தியத்தை கற்பதற்கு அதற்கு வெகு காலம் பிடிக்காது. அதன் உறிஞ்சு குழாய்களையும் திடப்படுத்தி கெட்டியாக்க வலுவானதாய் ஆக்கவும்கூடும்.
இந்தியாவிலிருந்து போகும் கொசுக்கள் என்றால் தியானமும் மூச்சுப் பயிற்சியும் சாமியார்களை கடிக்கும் போது அவைகளுக்குள் உட்புகுந்து இருக்கும் தானே? எனவே கெட்டி கம்பளி ஆடைகளின் உள்ளே மூச்சை இறுக்கி உயிர் வாழக்கற்றுக் கொண்டிருக்கும்.
நமக்கு வந்த உளவுத்துறை தகவல்.... சமீபத்தில் சைதப்பேட்டையிலுருந்து சென்ற பயணியிடத்தில் துணிகளின் ஊடேயோ, பாஸ்போர்ட்டின் உள்ளட்டையில் ஒளிந்து இருந்தோ கொசு ஐஸ்லாந்து வந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள், ஸ்காட்லான்ட் யார்ட் போலீசார்!