கொசு 'O' குரூப் ரத்தம் கொண்டவர்களை மட்டுமே கடிக்குமா?

mosquito
mosquito
Published on
mangayar malar strip
mangayar malar strip

மழை வருது, கொசு பெருகுது… இந்தக் கொசு 'ஓ' குரூப் ரத்தம் கொண்டவர்களை மட்டுமே கடிக்குமா?

இதோ நீண்ட பதில்:

கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுக்கெல்லாம் காரணம் பெண் கொசுக்கள்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

கொசுக்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான ஊட்டச் சத்துகள் மனித ரத்தத்தில் இருக்கின்றன. இதைக் குடிக்க வரும் பெண் கொசுக்கள்தான் அந்த நோய்களையும் நமக்குள் செலுத்துகின்றன. இந்த அற்பக் கொசுக்கள் இதை எப்படித் தெரிந்து வைத்திருக்கின்றன என்ற ஆச்சரியம்தான், கொசுக்கடி வலியைவிட அதிகமாக இருக்கிறது. இல்லையா?

ஆனால், ஒரு சிலரை மட்டுமே குறிவைத்து, தன் மூக்கு ஈட்டியால் குத்தி ரத்தத்தை இவை உறிஞ்சுகின்றன என்ற ஆராய்ச்சி கருத்தும் வியப்பளிக்கிறது. இத்தகையவர்கள் பெரும்பாலும் ‘ஓ‘ குரூப் ரத்தம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதுக்காக பிற ரத்த குரூப்காரர்கள் சந்தோஷப்பட வேண்டாம்; கொசு பேட்டை எடுத்து பரண்மேலே போட வேண்டாம்.

ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா, பிற குரூப் ரத்தக்காரர்களை கொசு ஒரு முறை கடிச்சுதுன்னா, ‘ஓ‘ குரூப்காரர்களை இரண்டு முறை கடிக்கும், அவ்ளோதான். மற்றபடி கொசுவுக்கு வேண்டியது பாரபட்சமற்ற மனித ரத்தம்தான்!

அடுத்து கரியமிலவாயு என்ற கார்பன் டை ஆக்ஸைடு நிரவியுள்ள பகுதிகளில் கொசுக்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றன. மேலும், மனித வியர்வை, மனிதருக்கிடையே ஒருவருக்கொருவர் முகம் சுளிக்க வைத்தாலும், அதுதான் ரத்த விருந்துக்கு கொசுவை வரவேற்கும் பன்னீர்த் துளிகள்!

இதையும் படியுங்கள்:
ஓட்டுநர் உரிமம் பெற ஏன் '8' போட வேண்டும்? பலருக்கும் தெரியாத உண்மை காரணம்!
mosquito

சிலருக்கு சாதாரணமாக வியர்வை வரும்; உடற்பயிற்சி செய்வோருக்கும் அதிகம் வரும். ஏனென்றால் உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் இறுக்கமாகின்றன. இதைத் தளர்த்த, இயற்கையாக நம் உடலில் லாக்டஸ் அமிலமும், அம்மோனியாவும் உற்பத்தியாகின்றன. இந்த அமிலம்தான் கொசுக்களை தம் மணத்தால் ஈர்க்கிறது. 

இதேபோல உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் மீதும் கொசுக்களுக்கு ரத்தப் பாசம் அதிகம் உண்டு. ஏனென்றால், இந்த உடல் சூட்டால் ரத்தம் அடர்த்தியாக இருக்கும். இதை உறிஞ்சிக் கொள்வது கொசுக்களுக்கு சுலபமான விஷயம்.

இதையும் படியுங்கள்:
Dear Girls… உங்க தொப்பை தெரியாம இருக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!
mosquito

வியர்வை, உடல் வெப்பம் எல்லாம் தவிர நாம் உடுத்தும் உடைகளின் வண்ணங்களாலும் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றனவாம். அதாவது கொசுக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் அடர் வண்ண உடையுடுத்தியவர், வெளிர் நிற உடை அணிந்த தன் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்களில் அதிகம் கொசுக்கடி படுபவர் அடர் வண்ணத்துக்காரராகத்தான் இருப்பார்.

நாம் உண்ணும் உணவு, அருந்தும் பானம் ஆகியவையும் கொசுக்களுக்கு நல்வரவு சொல்லுகின்றன. ஆமாம், நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்துதான் நம் உடலிலிருந்து அமிலமும், வியர்வையும் சுரக்கின்றன; உடல் சூடும் அதிகரிக்கும். இதை கொசுக்கள் கவனிக்கின்றன. முக்கியமாக மது அருந்துபவர்களில் பீர் குடிப்பவர்களை கொசுக்கள் பறந்து, பறந்து கடிக்கும். 

இதையும் படியுங்கள்:
'சும்மா'... இந்த ஒரு சொல்லுக்கு இத்தனை அர்த்தமா?
mosquito

ஏங்க, எல்லாருக்கும்தான் கரியமில வாயு, வியர்வை வெளியாகுது; அமிலமும் சுரக்குது. அது என்னவோ பெரிய ஸ்பை மாதிரி குறிப்பிட்டவர்களை மட்டும் குறிவெச்சு அடிக்கடி கொசு கடிக்குதுன்னா, அது எப்படீங்க? அதுங்க எங்க ட்ரெயினிங் எடுத்துச்சு?

அங்கதான் விஷயமே இருக்கு. கொசுக்கள் இந்த சமாசாரங்களை எல்லாம் நம்மைச் சுற்றிச் சுற்றிப் பறந்து தம் கண்ணால் ஸ்கான் பண்ணுகின்றன. அப்புறம் ஒரு தீர்மானத்துக்கு வந்து சருமத்தின் மேல் வந்து உட்காருகின்றன. இப்போ தங்களோட கால்கள்ல இருக்கற சுவை உணரிகளைப் பயன்படுத்தி, சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து கடித்து, ரத்தம் உறிஞ்சுகின்றன. இது எப்படி இருக்கு!

இதுவே கொசுப் புராணமும், கொசுக் கடித்தல் மகாத்மியமும் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com