

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியான மைலாப்பூரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் “மைலாப்பூர் திருவிழா” வை கோலாகலமாக நடத்தி வருகிறது. வழக்கம்போல இந்த வருடமும் ஜனவரி மாதத்தில் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. இது மைலாப்பூர் திருவிழாவின் 22வது பதிப்பு ஆகும்.
2001ஆம் ஆண்டில் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகை விளையாட்டாக மைலாப்பூர் வாசிகளுக்கு கோலப்போட்டி ஒன்றை நடத்தியது. அதுவே ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று இன்று பெரிய அளவில் மைலாப்பூர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழா, சென்னை நகரத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை இசை, நடனம், பாரம்பரிய நடைபயணம், கோலம், வீதி நாடகம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வகையான நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடுகிறது.
மைலாப்பூர் திருவிழா என்றாலே மயிலை கபாலீசுவரை கோவிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு மாட வீதிகளும், உபரியாக நாகேஸ்வர ராவ் பூங்காவும் களைகட்டிவிடும். இந்தப்பொது இடங்கள் கலை மற்றும் பாரம்பரியத்தின் உயிரோட்டமான மேடைகளாக புதிய பரிமாணம் பெற்றுவிடும்.
மைலாப்பூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சென்னை மாநகரின் பலவேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களையும், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களையும் ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் பெருமை கொண்டது மைலாப்பூர் திருவிழா. இதன் மூலமாக மைலாப்பூர் சென்னை மாநகரத்தின் ‘கலாச்சாரத்தின் மையம்’ என்ற அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஆண்டு, மைலாப்பூர் திருவிழாவின்போது சுந்தரம் ஃபைனான்ஸ் ப்ளூ கிரீன் மைல் என்ற புதிய சுற்றுச்சூழல் முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. இந்திய சுற்றுச்சூழல் கழகத்தின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்கு “உங்கள் உணவை நீங்களே வளர்க்கலாம்” என்று பெயர். இந்தத் திட்டத்தின் மூலமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே “சமையலறை தோட்டம்” அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் ப்ளூ கிரீன் கிளப் எனும் ஆன்லைன் சமூகத்தில் இணைவார்கள்.
மைலாப்பூர் திருவிழாவின்போது சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய திட்டத்தினை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது கிளைகளின் மூலமாக நாடெங்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
மைலாப்பூர் திருவிழா பதினைந்தாவது ஆண்டாக “பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்” இயக்கத்தை முன்னெடுக்கிறது. இதன்படி, மைலாப்பூர் திருவிழா நடைபெறும் நாட்களில் 10,000 துணி பைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கின்றன.
மேலும், மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமான சூழ்நிலை அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் “சுத்தமான மைலாப்பூர்” என்ற இயக்கமும் செயல்படுத்தப்பட உள்ளது.
மைலாப்பூர் திருவிழா குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோசன் இந்த வருட “மைலாப்பூர் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் பற்றிக்குறிப்பிட்டார்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், ஜனவரி 8 முதல் 11 வரை, காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை தினமும் கச்சேரிகள் நடைபெறும்.
லேடி சிவசாமி ஐயர் பள்ளியில் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் குழந்தைகள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 8, 10, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி இடம்பெறும். இதைத் தவிர, காகித குவில்லிங், பானை ஓவியம் ஆகிய கைவினைப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும்.
ஆண்டுதோறும் மைலாப்பூருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் சேவை செய்துவருபவர்களுக்கு “ ஸ்பிரிட் ஆஃப் மைலாபூர்” என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் “ஸ்பிரிட் ஆஃப் மைலாபூர்” விருது பெறப்பாகிறவர் யார்? ஜனவரி 11 அன்று மாலை 6.30 மணிக்கு அது அறிவிக்கப்படும்.
மைலாப்பூர் திருவிழா இயக்குநர் வின்சென்ட் டி’சூசா
“இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நான்கு நாட்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். எட்டு பாரம்பரிய நடைபயணங்கள், கோலம் போட்டிகள், குழந்தைகளுக்கான சைக்கிள் சுற்றுப்பயணம் போன்றவை இடம்பெறும்” என்று தெரிவித்தார்.