
உலகின் பல மர்மமான இடங்களில் அலாஸ்கா முக்கோணம், பெர்முடா முக்கோணம் ஆகியவை பிரபலமானவை. இந்த மர்மமான பிரதேசங்களில் விமானம் பறக்கையில் காணாமல் போவது வாடிக்கையாக உள்ளது. அலாஸ்கா முக்கோணத்தைப் போலவே, நெவாடா முக்கோணத்திலும் மர்மமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை இங்கு சென்ற எந்த விமானமும் திரும்பி வரவில்லை. இந்த இடம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
ஒரு அறிக்கையின்படி , கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் நெவாடா முக்கோணத்தில் காணாமல் போய் உள்ளன. அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் உயிருடன் திரும்பி வரவே இல்லை. உலகில் பல மர்மமான இடங்களில் இது மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது. இந்த இடம் பெர்முடா முக்கோணத்தை விட மிகவும் ஆபத்தாக கருதப்படுகிறது.
நெவாடா முக்கோணம் 25 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவில் பரந்து விரிந்த மிகப் பெரிய பகுதியாக உள்ளது. மேலும் சியரா நெவாடா மலைத்தொடரின் உயரமான சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. யோசெமிட்டி, கிங்ஸ் கேன்யன் மற்றும் செக்வோயா தேசிய பூங்காக்கள் முக்கோணத்தின் அடியில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன. காணாமல் போன விமானங்களில் பல, பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த விமானிகளால் இயக்கப்பட்டு, மர்மமான சூழ்நிலையில் காணாமல் போயின. விமானத்தின் சிதைவுகளையும் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
செப்டம்பர் 3, 2007 அன்று திறமையான விமானி, ஸ்டீவ் ஃபோசெட் என்பவரின் விமானம் காணாமல் போனது. நெவாடாவின் கிரேட் பேசின் பாலைவனத்தின் மீது பெல்லாங்கா சூப்பர் டெகாத்லான் விமானத்தில் பறந்த ஃபோசெட் மீண்டும் திரும்பி வரவில்லை. பிப்ரவரி 15, 2008 அன்று ஃபோசெட் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், செப்டம்பர் 29-ம் தேதி, கலிபோர்னியாவின் சியரா நெவாடா மலைகளில் ஒரு மலையேற்ற வீரரால் ஃபோசெட்டின் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு, விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு ஸ்டீவ் ஃபோசெட்டின் சில எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நெவாடா முக்கோணத்தில் ஏதோ ஒரு மர்ம சக்தி இருப்பதாக பலராலும் சந்தேகிக்க படுகிறது. அந்த பகுதியில் காந்த சக்தி போன்ற ஏதேனும் ஒரு சக்தி இருப்பதாகக் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த சக்தி என்ன என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மர்ம சக்தி தான் விமானங்களைத் கீழ் நோக்கி இழுத்து விமானத்தை விபத்துக் குள்ளாக்குகிறது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
பொதுவான அமெரிக்கர்கள் இந்த விமான விபத்துக்களுக்கு வழக்கம் போல வேற்றுகிரகவாசிகள் மேல் பழியை போடுகின்றனர். அமெரிக்க அரசாங்கம் வேற்று கிரகவாசிகளின் விவகாரங்களில் தலையிட்டதால் அவர்கள் கோபமடைந்து விமானங்களை தாக்குவதாக அவர்கள் நினைக்கின்றனர். அமெரிக்க அரசு வேற்றுகிரகவாசிகள் பற்றிய தகவல்களை மறைப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதிகமாக ஹாலிவுட் படங்களை பார்ப்பதன் விளைவு இது.
அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இருந்து வேகமாக நகரும் காற்று அடிக்கடி செங்குத்தான மலைகளை தாண்டும் போது மலை அலைகள் எனப்படும் ஒரு நிகழ்வை உருவாக்குகிறது. இந்த நிகழ்வை எதிர்கொள்ளும் ஒரு விமானம் நேராகவும் மட்டமாகவும் பறப்பதில் இருந்து கீழ்நோக்கி செலுத்தப்படும் அலைகளால் இழுக்கப்படுகிறது. இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விரைவாக கீழ் நோக்கி செல்கிறது. இதனால் விமானம் விபத்துக்குள்ளாவதாக ஒரு சிலர் விளக்கம் தருகின்றனர். ஆயினும் மர்மங்கள் முழுதாக விலகவில்லை.