நாடிழந்து நம்பி வந்தோர்க்கு துணை நிற்போம்!

உலக அகதிகள் தினம் (20.06.2024)
இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள்
Published on
kalki vinayagar
kalki vinayagar

லக அகதிகள் தினம் என்பது உலகெங்கிலும் உள்ள அகதிகளுக்கு மரியாதை மற்றும் பாராட்டு தெரிவிக்க ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. போர் அல்லது தவறான செயல்கள் காரணமாக தங்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியேற, அந்நாட்டு அரசால் நிர்பந்திக்கப்படும் தனி நபர்களின் துணிச்சலையும் உறுதியையும் சக மக்கள் அங்கீகரிக்க வேண்டிய நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகளின் மீதான கருணை மற்றும் விழிப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அறியாத நாட்டில் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் துன்பங்களை சமாளிப்பதில் அவர்களின் பிரச்னைகள், அதில் எழும் குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் பற்றிய அதிக புரிதலை இந்த நாள் ஊக்குவிக்கிறது.

2024ம் ஆண்டின் உலக அகதிகள் தினத்தின் அதிகாரப்பூர்வ தீம், ‘அகதிகள் வரவேற்கப்படும் உலகத்திற்காக’ என்பதாகும். ஏதோ ஒரு தவிர்க்க இயலாத காரணத்தால் நாடு விட்டு நாடு அகதிகளாக வந்து வாழ்வு தேடுவோர்க்கு நமது ஆதரவு நீட்ட வேண்டியது அவசியம் ஆகும். ஆதரவுக் கரம் என்பது நமது அன்பு மனக் கதவுகளைத் திறந்து வைப்பது, அவர்களின் பலம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடுவது மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் துணை நிற்பது.

இது குறித்து அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த அகதிகளுக்கான பிரச்னைகளைத் தீர்ப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருவது தற்போது அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது என்றாலும், அகதிகளின் நிலை மாறியுள்ளதா? அவர்களின் தேவைகள் பூர்த்தியாகிறதா? எனும் கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழ்நாடு இலங்கைத் தமிழர் ஆலோசனைக் குழு உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் கோவி.லெனின்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

"இலங்கையில் 1980களில் தலைதூக்கிய இனக்கலவரம் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த அகதிகள் அதிகம். 30 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இந்த மண்ணை தாய்மண்ணாக அறிமுகப்படுத்தி வாழும் அகதிகளும் உண்டு. இவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 108 இலங்கை அகதிகள் முகாம்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதோடு, தாய்நாடு பற்றிய குழப்பத்துடன் வாழ்ந்து வரும் அவர்களுக்காக தற்போது தமிழக முதல்வரின் அறிவிப்பில் சுமார் 3500 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பொருட்டு உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பாலியல் வன்முறைக்கு ஆண் குழந்தைகள் பலியாவது இல்லையா?
இலங்கை அகதிகள்

என்னதான் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் நாடற்ற நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியம் இல்லாதவர்கள் மற்றும் எந்த நாட்டையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதே நிதர்சனமான உண்மை. சில பாரபட்சமான சட்டங்களால் குடியுரிமைச் சான்றிதழ் போன்ற பணிக்கான அடையாளங்கள் இல்லாததன் விளைவாக இவர்களின் மருத்துவம், கல்வி அல்லது வேலை வாய்ப்பு போன்ற முக்கியமான அரசாங்க சேவைகளை அணுகுவதில் இவர்கள் தடைகளை சந்திக்க நேரிடுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. குறிப்பாக, அந்தந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளிலிருந்து குடியேறிகளான அவர்கள் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற அரசுக்கும் அகதிகளுக்கும் இடையில் உள்ள, அரசால் நியமிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களும், இத்துறையின் அமைச்சர்களும் ஆவன செய்ய முயற்சிகள் செய்து வருகிறோம். அகதிகளாக நம் பாதுகாப்பை நாடி வருபவர்களை சக மனிதர்களாக மதித்து அன்பைக் காட்ட வேண்டியது நமது கடமை" என்கிறார் இவர்.

நம்மிடையே சக மனிதராக, சகோதரராக, சகோதரியாக வாழும் அகதிகளை மதித்து திறமைக்கு அங்கீகாரம் தந்து, நாடிழந்த வேதனையில் நாடிவந்த அவர்கள் மன அமைதியுடன் வாழ துணை நிற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com