சிரித்து வாழ வேண்டும்: பகுதி 1 - பல்லாங்குழி வாழ்க்கை

நகைச்சுவை நடிகர் நாகேஷ் கல்கி வார இதழில் எழுதிய 'சிரித்து வாழ வேண்டும்' தொடரின் சுவாரஸ்யமான நாடக மற்றும் சினிமா அனுபவங்களைப் படியுங்கள்.
நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நடிகர் நாகேஷ்
Updated on
Kalki Strip
Kalki Strip

2003 ஆம் ஆண்டு 03.08.2003 முதல் கல்கி வார இதழில், நடிகர் நாகேஷ் அவர்கள் 'சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். சுவாரசியமான சம்பவங்கள், நாடகம் சினிமா சார்ந்த பல அனுபவங்கள், சிரிக்க சிந்திக்க தகவல்கள் கொண்ட அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

சிரித்து வாழ வேண்டும்: பகுதி 1

“பல்லாங்குழி வாழ்க்கையில் விழுந்து, எழுந்த என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்!”

நாகேஷ்

"அப்போது எனக்கு ரயில்வேயில் வேலை. காலையில் ஆபீசுக்குப் போனால், 'நான் உண்டு. என் வேலை உண்டு' என்று இருப்பேன். வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தட்டிக் கேட்க ஆள் இல்லை. முதல் தேதியானால், சம்பளம் வந்துவிடும். ஒண்டிக்கட்டை. வாழ்க்கைச் சக்கரம் ஏதோ உருண்டோடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள், எனக்குள்ளே ஏதோ ஒரு வெறி! ஆபீசின் பல்வேறு பிரிவுகளுக்கும் போய், பலரிடமும், இங்கே பாட்டு, நாடகம் போன்ற விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாய் 'கலாசாரப் பிரிவு' இயங்கி வருகிறதா? என்று கேட்டேன். பலருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கடைசியாய் 'ம.ரா' என்று ஒருவர், நாடகங்களை எழுதி, இயக்கி வருவதாகவும், அந்த நாடகத்தில் ரயில்வேயில் வேலை பார்க்கிறவர்கள் நடிப்பதாகவும் எனக்குத் தெரியவந்தது. அந்த ம.ரா. என்பவரைப் போய்ப் பார்த்தேன்.

ஒல்லியான உடம்பு கொண்ட நான், அவர் முன்னால்போய் நின்றேனேயொழிய நான் அவர் கண்ணுக்குத் தென்படவே இல்லை. மெதுவாகச் செருமி, ஒரு வழியாய் அவருடைய கவனத்தை நான் ஈர்க்க, "என்னய்யா வேணும்?" என்று கேட்டார்.

"நீங்க நாடகம் போடறீங்களாமே! அதுல நடிக்கணும்னு விரும்பறேன்" என்றேன்.

"இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா? இந்தக் காலத்துல யார் யாருக்கு நடிக்க ஆசை வரணும்னு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சுப்பா!" என்றார் இடக்கான குரலில்.

அவர் சொன்னதற்காக நான் கவலைப்படவில்லை. "சார்! சார்! எனக்கு நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உங்க நாடகத்துல ஏதாவது ஒரு சின்ன ரோல் கொடுத்தீங்கன்னாகூடப் போதும். நான் சந்தோஷமா ஏத்துக்குவேன்" என்று கெஞ்சும் குரலில் கேட்டேன்.

"நடிச்ச அனுபவம் ஏதாவது இருக்கா?" இது அவரது அடுத்த கேள்வி.

"இல்லை சார்! எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியாது சார்! ஆனா ஒரு சின்ன சான்ஸ் கொடுத்தீங்கன்னா, அதுல என் திறமையைக் காட்ட முடியும்னு தன்னம்பிக்கை இருக்கு சார்!"

"உனக்கு இருக்கு தன்னம்பிக்கை! ஆனா எனக்கு உன்மேல நம்பிக்கை வரலையே! மேடையில, வேகமா படுதா அசைஞ்சாக்கூட விழுந்துருவே போல இருக்கே!"

"அப்படியெல்லாம் சொல்லிடாதீங்க சார்! ஒரு சின்ன ரோல் குடுங்க சார்! ப்ளீஸ்!"

அடுத்த சில நிமிடங்களுக்கு, அவர் ஒன்றும் பேசாமல், ஏதோ யோசனை செய்துகொண்டிருந்தார். சட்டென்று "ம்... ஒரு சின்ன ரோல் இருக்கு! வயித்து வலிக்காரனா நடிக்கணும்!"

"சரி சார்!"

"சின்ன ரோல்தானேன்னு நினைக்கக் கூடாது, சின்சியரா இருக்கணும், ரிகர்சலுக்கெலாம் தவறாம வந்துடணும்" என்றார்.

"சின்னரோலா இருந்தால் என்ன சார்! அதுல கூட என் திறமையைக் காட்ட முடியும்! ரொம்ப தேங்ஸ்!"

"நாளையிலேயிருந்து ரிகர்சல்! கரெக்டா நேரத்துக்கு வந்திடணும்.”

எனக்கு சந்தோஷமான சந்தோஷம்! நாமும் மேடை ஏறப் போகிறோம் என்பதை என்னால் நம்பக்கூட முடியவில்லை.

மறுநாள் ஆபீஸ் முடிந்து நேரே நாடக ஒத்திகை நடக்கும் இடத்துக்குப் போனேன். "இப்படி உட்கார்! உன் சீன் வரும்போது சொல்லறேன்” டைரக்டர் சொல்லிவிட்டார்.

ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு, ஒத்திகையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அடுத்த சீனில் கூப்பிடுவாரோ என்று ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்துக் காத்திருக்க, ஏறத்தாழ நாடகம் முடியப் போகிற கட்டத்தில், "ம்... வா!' என்று கூப்பிட்டார் டைரக்டர்.

நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நடிகர் நாகேஷ்

"காட்சியில டாக்டர் அம்மா உட்கார்ந்திருப்பாங்க! அவங்க ஒரு வயித்து வலி நோயாளியைப் பார்த்துக்கிட்டு இருக்கும் சமயம், ஹீரோ போய் அவங்களைப் பார்த்துப் பேசுகிறாற்போல சீன். நீதான் அந்த வயித்துவலி நோயாளி! உனக்கு பெரிசா வசனமெல்லாம் கிடையாது! டாக்டர் அம்மா, அடுத்த பேஷண்ட்டை வரச் சொன்னதும், நீங்க போறீங்க! என்ன பிரச்னைன்னு டாக்டர் கேட்க, நீங்க, "வயித்துவலி தாங்க முடியலையே!"ன்னு சொல்லணும். அவங்க மருந்து எழுதிக் கொடுத்ததும், நீங்க சீட்டை வாங்கிக்கிட்டு, வந்திடணும்! இதுதான் சீன்! ஒழுங்கா நடிக்கணும்" என்று காட்சியை விளக்கினார் டைரக்டர்.

நானும், ஏதோ இந்த மட்டுக்கும் ஒரு சிறிய ரோலாவது கிடைத்ததே என்று திருப்திப்பட்டேன்.

ஒருநாள் விடாமல் ஒத்திகைக்குப் போவேன். பதினேழாவது சீனில்தான் எனக்கு வேலை என்பதால், அதுவரை பொறுமையாகக் காத்திருப்பேன். சலிப்பாய் ஏதாவது சொல்லி, அது டைரக்டர் காதுக்கு எட்டினால், இந்த சான்ஸும் போய்விடுமே! என்கிற பயம் வேறு!

சுமார் ஒன்றரை மாத காலம் ஒத்திகை முடிந்து, நாடகத்தின் அரங்கேற்றத்துக்காக தேதி குறிக்கப்பட்டது. மயிலாப்பூர் கோகலே ஹாலில் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல் தடவையாக மேடை ஏறப் போகிறோம் என்கிற சந்தோஷம்; ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம். இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில், நான் நடிக்க வேண்டிய காட்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

"அடுத்த பேஷண்ட்" என்று டாக்டர் சொல்ல, காட்சி ஆரம்பித்தது. "சட்டென்று உள்ளே போ!" என்று என்னை இலேசாகத் தள்ளினார் டைரக்டர்.

"டாக்டர் கூப்பிட்டவுடன் உள்ளே போவதற்கு நான் என்ன கம்பவுண்டரா சார்! பேஷண்ட்! அதுவும் வயிற்று வலியால் துடிக்கிற பேஷண்ட்! எப்படி என்னால். கிடுகிடுவென்று நடந்து போக முடியும்?" என்று இலேசான குரலில் ஆனால் அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு,

"டாக்டர்!" என்று வீரிட்டு அலறியபடி மேடைக்குள் நுழைந்தேன்.

திடீரென்று இப்படி ஒரு வீரிடும் குரலை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்கள், சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளிபோல உடலை வளைத்து, நெளித்து கைகளால் வயிற்றைப் பிடித்துக்கொண்டே நடந்து, டாக்டருக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் போய் ஒருவழியாக உட்கார்ந்துகொண்டேன்.

"என்ன உடம்புக்கு?" என்று டாக்டர் கேட்க, நான் அதை சட்டையே பண்ணாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு 'அம்மா' என்று துடித்தேன். என் கையில் ஒரு சீட்டு இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினேன். அதை அவர் வாங்குவதற்குத் தன் கையைக் கொண்டு வந்தபோது, சட்டென்று என் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கி, 'ம்மாஆஆஆ..' என்றேன். மறுபடி சீட்டைக் கொடுக்க கையை நீட்டினேன். டாக்டர் அதை வாங்க கையை நீட்டியபோது, என் கையை பின்னால் இழுத்துக் கொண்டு “அம்ம்ம்ம்மா!" என்று கத்தினேன்.

ஒன்றரை நிமிடங்களுக்கு விதம்விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டுவந்து 'அம்மா' என்று அலறி; துடித்து கதறி "யாரடா இவன்! திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!'' என்று. பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

முதல் வரிசையில் அமர்ந்து, நாடகம் பார்த்துக் கொண்டிருந்த செக்கச் சிவந்த மனிதர், கைதட்டி என் நடிப்பை ரொம்பவும் ரசித்ததையும் நான் கவனித்தேன்.

அட! நம்மகிட்டேயும் விஷயம் இருக்கு போலிருக்கு! இத்தனை ஜனங்களும் எப்படி கைத்தட்டி ரசிக்கிறாங்க? என்ற சந்தோஷம் ஒரு பக்கம் என்றாலும், "நான் சொன்னதைச் செய்யாம, நீ பாட்டுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக என்னென்னவோ பண்ணிட்டியே!" என்று டைரக்டர் கோபித்துக் கொள்ளுவாரோ என்ற பயம் இன்னொரு பக்கம்.

நான் சீனை முடித்துவிட்டு, விண்ணதிரும் கரகோஷங்களுக்கு இடையில், வந்தபோது, "அட! போனாப்போகுதுன்னு ஒரு சின்ன ரோல் கொடுத்தா, அதுலகூட என்னமாப் பிச்சு உதறிட்டே!" என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் டைரக்டர்.

நாடகம் முடிந்தவுடன், மேடைக்கு அழைத்து வரப்பட்டார், முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்த சிவந்த மனிதர். அவர்தான் நாடகத்துக்குத் தலைமை விருந்தினர்.

மைக்கைப் பிடித்த அவர், "நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த டைரக்டரிடம் "அவர் பெயர் என்ன?" என்று கேட்க,

டைரக்டர், "நாகேஸ்வரன்!" என்று சொல்ல, "ம்.ம். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!" என்று சொன்னபோது, என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை! வானில் மிதப்பது போன்ற உணர்வுடன் நடந்து சென்று, அவர் கொடுத்த முதல் பரிசுக்குரிய கோப்பையை வாங்கிக்கொண்டேன்.

மேக் அப் போட்டு மேடை ஏறிய அந்த முதல் நாளன்று நாகேஸ்வரன் என்கிற இளைஞனுக்குக் கிடைத்த கைத்தட்டலும் பரிசும், பாராட்டும்தான், நாகேஷ் என்கிற நடிகர் உருவானதற்குப் பிள்ளையார் சுழி!

அன்று என்னைப் பாராட்டி, கோப்பையைப் பரிசளித்த செக்கச் சிவந்த முதல் வரிசை சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ்!

(சிரிப்பு தொடரும்...)

படங்கள்: யோகா

கல்கி வார இதழ் - 03.08.2003

குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை. 
logo
Kalki Online
kalkionline.com