அந்த காலத்தில் வணிகமானது பண்டமாற்று முறையில் தான் இருந்தது. பணப் பரிவர்த்தனை அவ்வளவாக இருந்ததில்லை. ஒரு மாநிலமோ அல்லது தனிப்பட்ட நபரோ தன்னிடமிருக்கும் ஒரு பொருளை அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அவர்களிடமிருக்கும் வேற பொருளை வாங்கி கொள்வார்கள். இதைத் தான் மகா கவி பாரதியார் அவர்கள்,
“கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்”
என்று பாடி இருக்கிறார்.
ஆகவே அந்நாட்களில் பணத்திற்கு அத்தனை அத்தியாவசியம் இருத்ததில்லை. காலம் மாற மாற, பண்டமாற்று முறை மறைந்து அரிசி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையுமே பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலைமைக்கு மாறிவிட்டது.
பணம் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கி ஆசையை தீர்த்து கொள்ளலாம், இல்லாதவர்கள் வாழ்நாளின் கடைசி கட்டம் வரை எதையுமே அனுபவிக்காமல் நிராசையோடு காலத்தை கழித்து விடுகிறார்கள். (இப்போதெல்லாம் ஒரு குழந்தை பிறந்ததற்கான சான்றிதழை வாங்க கூட பணம் தேவை!)
பணமிருந்தால் தான் மதிப்பு, பணம் இல்லை என்றால் குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பையை போல நம்மை நடத்துவார்கள். பணமிருந்தால் நம்மை தேடி எல்லோரும் வருவார்கள். பணமில்லை என்றால் நம்மால் யாரையும் தேடி செல்ல முடியாது. பணம் இருப்பவனை எல்லோரும் கதவை திறந்து வரவேற்பார்கள், இல்லாதவன் வந்தால் தன் வீட்டு ஜன்னலை கூட இழுத்து மூடி விடுவார்கள்.
சாலையோரத்தில் அவசரத்திற்காக கட்டியிருக்கும் பொதுக் கழிவறையில் கூட பணத்தை கொடுத்தால் தான் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
திருவள்ளுவர் அவர்கள் இப்போது மட்டும் உயிரோடு இருந்திருந்தால், “தோன்றின் பணத்தோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று கூறியிருந்திருப்பார்.
பணம் எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் தான் பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று முன்னோர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் ஒருவர் இறந்து விட்டால் , அவர் இறந்ததற்கான death certificate-ஐ வாங்கினால் மட்டுமே மயானத்திற்கு எடுத்து செல்ல முடியும்; அதற்கு பணம் வேண்டும்; அது மட்டுமா? இன்றைய நாட்களில் பிணத்தை மின்சார மயானத்தில் தான் எரிக்கிறார்கள். வெட்டியானுக்கு எதையோ ஒரு தொகையை கொடுத்து எரிக்கிற மாதிரி இங்கு முடியாது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துதான் ஆக வேண்டும், மறு நாள் ஹஸ்தியை வாங்குவதற்கும் பணத்தை கொடுக்க வேண்டும்.
ஆகவே பணமென்றால் பிணமும் வாயை திறக்குமோ, திறக்காதோ அது தெரியாது.... ஆனால் ஒருவரின் சடலத்தை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ பணம் தேவை. அதற்கு பிறகு அத்தியாவசியமான கர்ம காரியங்களை செய்வதற்கும் கையில் டப்பு வேண்டும்.
செத்த பிறகு எந்த லோகம் போவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த உலகத்தில் உயிரோடிருக்கும் வரை கையில் பணமிருந்தால் சொர்க்கம்; இல்லை என்றால் நரக வாழ்க்கை.