
இன்றைய மருத்துவர்களின் அடையாளமே அவர்கள் கழுத்தில் தொங்கும் இதய துடிப்பை அறிய உதவும் 'ஸ்டெதாஸ்கோப்' தான். மருத்துவர்களுக்கு இன்றியமையாத இதனை René-Théophile-Hyacinthe Laennec என்ற பிரெஞ்சு மருத்துவர் 1816 ம் ஆண்டு கண்டுபிடித்தார். முதன் முதலில் அவர் உருவாக்கிய ஸ்டெதாஸ்கோப் மரத்தினால் செய்யப்பட்டதாக இருந்தது.
குழந்தைகள் ஒரு மரக்குச்சியின் ஒரு முனையில் குண்டூசியால் துளையிட்டு, பின்னர் அவர்கள் ஒரு புறமாக இருந்து ஒலி எழுப்பினர். மறுமுனையில் காதை வைத்து அந்த ஒளியை கேட்டனர். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரெஞ்சு மருத்துவருக்கு ஓடிய சிந்தனையின் வடிவே ஸ்டெதாஸ்கோப் (stethoscope) கருவியை அவர் உருவாக்க உதவியது.
ரெனே லேனெக் தனது ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்தி நோயாளிகளை சோதித்தார். அவர், ஸ்டெதாஸ்கோப் குழாயின் ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்களை கேட்டார். பிறகு மேலும் பல நோயாளிகளை சோதனை செய்து, அவர்களின் உடலில் ஏற்பட்ட சப்தங்களையும் அறிந்தார்.
முதல் நோயாளியின் இதயத்தில் இருந்து எழுந்த சப்தங்களையும், பிறகு சோதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து எழுந்த சப்தங்களையும் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு நடத்தினர்.
ஸ்டெதாஸ்கோப்(stethoscope) மூலம் தான் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 1818 ம் ஆண்டு ரெனே லேனெக் 'ஆஸ்கல்டேஷன் மெடியேட்' என்ற நூலை எழுதினார்.'ஆஸ்கல்டேஷன்' என்றால் உடலில் எழும் சப்தங்களை கேட்பது என்று பொருள். இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய்களை கண்டறிய, 'ஆஸ்கல்டேஷன்' முறை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
ரெனே லேன்னெக் கண்டுபிடித்த ஸ்டெதாஸ்கோப் (stethoscope), ஒரு மரக் குழாயாக அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து நீண்ட தூரம் வந்துவிட்டது. இது இதயம் மற்றும் நுரையீரல் நிலைகளைக் கண்டறிவதற்கு முக்கியமான ஒரு அதிநவீன கருவியாக மாறியுள்ளது. மேலும் இது மருத்துவத் தொழிலின் அடையாளமாக உள்ளது. லேன்னெக்கின் புத்திசாலித்தனத்திலிருந்து நவீன மின்னணு ஸ்டெதாஸ்கோப் வரை, இந்த கருவி உருமாறி தற்போது AI தொழில் நுட்பத்துடன் இணைந்துள்ளது.
15 வினாடிகளில் இருதய நோகளைக் கண்டறியும் AI ஸ்டெதெஸ்கோப்பை (AI Stethoscope) அன்மையில் பிரிட்டன் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 200 ஆண்டுகளாக மருத்துவர்களின் முக்கிய கருவியாக இருக்கும் ஸ்டெதெஸ்கோப்பிற்கு, இப்போது செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய வடிவம் கிடைத்துள்ளது.
AI தொழில்நுட்ப ஸ்டெதாஸ்கோப்யை அமெரிக்காவின் EKO Health என்ற நிறுவனம் உருவாக்கியது. அதனை இங்கிலாந்து இம்பீரியல் கல்லூரி சோதித்து அதனை மேம்படுத்தியது.
இங்கிலாந்தில் உள்ள Imperial College London மற்றும் Imperial College healthcare NHS Trust ஆகியவை இணைந்து, British Heart Foundation மற்றும் NIHR ஆகியவற்றுன் நிதியுதவியுடன் இந்த AI ஸ்டெதெஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவி, 15 வினாடிகளில் இருதய நோய்களை கண்டறியும் திறன் கொண்டது. இருதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள மிகச் சிறிய வேறுபாடுகளை கண்டறிந்து, இருதய செயலிழப்பு, வால்வு குறைபாடு மற்றும் சாதாரண துடிப்புகளை கண்டறிய முடியும். இது, ECG (Electrocardiogram) பதிவையும் ஒரே நேரத்தில் எடுக்கிறது.
இந்த AI ஸ்டெதெஸ்கோப்பின் முக்கிய அம்சம், அதன் செஸ்ட் பீஸ் செவ்வக வடிவத்தில் இருப்பது. இது நோயாளியின் மார்பில் வைக்கப்படும் போது இருதயத்தின் மின்னழுத்த சிக்னல்களை பதிவு செய்கிறது. அதே நேரத்தில், இரத்த ஓட்டத்தின் பதிவு செய்கிறது. இந்த தரவுகள் cloud-ல் அனுப்பப்பட்டு, AI Algorithm மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பின்னர் முடிவுகளை ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளலாம்.
AI ஸ்டெதாஸ்கோப் மூலம் நோயாளிகளுக்கு இதய செயலிழப்பு இருப்பது கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு 2.3 மடங்கு அதிகமாகவும், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் இருப்பது கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாகவும், 12 மாதங்களுக்குள் இதய வால்வு நோயால் கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கருவியின் மூலம் இருதய நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியும் என்பதால், அதற்கான சிகிச்சையை விரைவாக தொடங்க முடியும். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.