

நமது பயணங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். குறுகிய தூரம், நீண்ட தூரம், மிக நீண்ட தூரம் என்று அவைகளை பிரிக்கலாம்.
இந்த பயணங்கள் இலகுவாக அமைய பெரும்பாலோர் தேர்ந்தெடுப்பது ரயில் பயணங்களை... அந்த ரயில் பயணங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மிகவும் சிரமமாக இருக்கும். 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவுகள் முடிந்துவிடும். தட்கல் பதிவுகளும் தொடங்கிய சிறிது நேரத்தில் முடிந்துவிடும். முன்பதிவில்லா பயணிகள் ரயில் பண்டிகை காலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அது கடைசி நேர பயணத்துக்கு உதவியாக இருக்கிறது.
அதுவும் 12 பெட்டிகள் கொண்ட MEMU (MAINLINE ELECTRIC MULTIPLE UNIT) ரயிலை இயக்குகிறார்கள். தென் மாவட்ட மக்களே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அடித்துப்பிடித்து ஏறி உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே...கழிவறை அருகே நின்று கொண்டே பயணம் செய்ய நேரிடுகிறது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் அட்டகாசம் தாங்கமுடியாத அளவுக்கு போய் கொண்டு இருக்கிறது. அவர்கள் நிர்ணயித்தது தான் கட்டணம். அரசுப் பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டாலும் மக்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியவில்லை. பாதை இருந்தும் பயணிக்க முடியாத ஒரு பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் என்ற ஊரில் இருந்து காரைக்கால் வரை நீண்ட காலத்திற்கு முன்பு ரயில் சேவை (மீட்டர் கேஜ்) இயங்கி வந்தது. 80களுக்கு பிறகு அது நிறுத்தப்பட்டது. தற்சமயம் இந்த பாதை அகல பாதையாக மாற்றப்பட்டது.
மேலும் காரைக்கால் - நாகூர், நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி புதிய பாதைகள் திறக்கப்பட்டு பயணிகள் ரயில், விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பேரளம் காரைக்கால் பாதை எல்லா சோதனைகளும் முடிந்து பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நேரடியாக காரைக்கால் வழியாக வேளாங்கண்ணி வரையில் ரயில் சேவை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு காரைக்கால் செல்ல மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் என்று சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த புதிய பாதை மூலம் அது தவிர்க்கப்படுகிறது.
சுமார் ஒரு மணி முப்பது நிமிடங்களில் மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணி சென்று விடலாம். (தூரம் சுமார் 80 கி.மீ.) இந்த பாதையில் திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய...மும்மதங்கள் தொடர்புடைய முக்கிய ஊர்கள் உள்ளன.
ஒரே ரயிலில் அனைவரும் பயணம் செய்து தங்கள் வழிபாட்டுத் தலங்களை அடையலாம். முறைப்படி திறப்பதற்கு முன்பே வேளாங்கண்ணி திருவிழா, மற்றும் கிருஸ்துமஸ் ஆகிய நாட்களில் இந்த பாதையில் சிறப்பு ரயில்களை இயக்கினார்கள். தற்போது பொங்கல் பண்டிகையும் வந்துவிட்டது. இதுவரையில் இந்த பாதையில் சிறப்பு ரயில்கள் பற்றியோ, முறைப்படி இந்த பாதை திறப்பு பற்றியோ எந்த அறிவிப்பும் வரவில்லை.
மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையில் பயணிகள் ரயில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டு இருந்தது. எந்தவித முன் அறிவிப்பு, காரணங்கள் எதுவும் இல்லாமல் அந்த ரயிலை திருவாரூர் காரைக்குடி என்று மாற்றி திருவாரூரில் இருந்து தற்சமயம் காரைக்குடி வரை இயக்கி வருகிறார்கள். மயிலாடுதுறை மெயின் லைனில் உள்ள ஒரு முக்கியமான சந்திப்பு நிலையம். பல ஊர்களில் இருந்து ரயில்கள் வந்து போய்க்கொண்டு இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ரயில் தொடர்பாக ஒரு வழக்கு போடப்பட்டது. அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. முக நூலில் இது பற்றி பல பதிவுகள் பார்க்கலாம். அதுல ஒரு குருப் இங்கிருந்து அங்க போனால் அந்த வண்டியை பிடிக்கலாம் என்று அடிக்கடி பதிவு போடுவார்கள்.
இந்த நிலைக்கு காரணம் யாரென்று சிபிஐ விசாரணை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும்!? சமீபத்தில் மயிலாடுதுறை எம்.பி. இந்த வண்டியை மீண்டும் இயக்க கோரிக்கை வைத்துள்ளார்.
வருவாயை உயர்த்த புதிய வண்டியை அறிமுகப்படுத்துவார்கள். இது நடைமுறை. ஆனால் ஓடிக்கொண்டு இருந்த ஒரு வண்டியை இப்படி மாற்றியது இந்த பகுதியில் மட்டுமே. பேரளம் காரைக்கால் பாதை திறக்கப்பட்டால் சென்னை வேளாங்கண்ணி விரைவு ரயில், பயணிகள் ரயில், நீண்ட தூர ரயில்கள் அறிமுகப்படுத்தப்படலாம். இதனால் தென்னக ரயில்வே வருவாய் கூடும்.
'எங்கே செல்லும் இந்த பாதை யாரோ..யாரோ..அறிவார்...' இந்த பாடல் திறக்கப்படாத பேரளம் - காரைக்கால் அகலப் பாதைக்கும், மயிலாடுதுறை காரைக்குடி நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலுக்கும் பொருந்தும். பல நேரம் நமக்கான பாதைகளை நாம் தேடிக்கொண்டு இருப்போம். நமது பயணம் சிறப்பாக அமைய..பாதைகளே நம்மை பார்த்து வாருங்கள்... இங்கே பயணம் செய்யலாம் என்று அழைத்தால்...?
தென்னக ரயில்வே நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும்., பண்டிகை காலங்களில் நம்மை கொள்ளை அடிக்கும் ஆம்னி ராட்சதன்களிடம் இருந்து காப்பாற்ற.