
அறுபதுகளில் வெளி வந்த 'கல்யாணப் பரிசு' படத்தில், வேலையில்லாத தங்கவேலு, மனைவிக்குப் பயந்து வேலைக்குப் போவது போல நடிப்பார். காலையில், மதிய உணவுடன் கிளம்பி, பூங்காவில் மாலை வரை இருந்து, மாலையில் அலுவலகத்திலிருந்து களைத்து வருவது போல வருவார். மற்றொரு காட்சியில் மனைவியின் உறவினர், எங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்கும் போது "மன்னார் அண்டு கம்பெனி” என்று பொய்யான பெயரைக் கூறுவார்.
இதை நிஜமாக்குவது போல சீனாவில் போலி அலுவலகங்கள் வளர்ந்து வருகின்றன. இதனை “ப்ரிடெண்ட் டு வொர்க் கம்பெனி” (Pretend To Work Company) என்று கூறுகிறார்கள். சீனாவில் 16 முதல் 24 வயதுடைய இளைஞர்களில், வேலையில்லாமல் இருப்பவர்கள் 14.5 சதவிகிதம். இதில் பெரும்பாலோர் உயர் கல்வி கற்று மதிப்பு மிக்க கல்விச் சான்றுடன் கல்லூரியிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்கள் படிப்பிற்குத் தகுதியான வேலை கிடைப்பதில்லை.
வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலை இருந்தாலும் தகுதிகேற்ற வேலை கிடைக்காமல் தடுமாறும் இளைஞர்களை சமுதாயம் 'தண்டச் சோறு', 'வெட்டிப் பயல்' என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கின்றனர். வேலை கிடைக்கவில்லை என்று பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள்.
அதற்கெல்லாம் மாற்று இந்தப் போலி அலுவலகங்கள். உண்மையான அலுவலகங்களில் வேலை செய்வதற்கு சம்பளம் தருவார்கள். ஆனால், இந்தப் போலி அலுவலகங்களில், அங்கு வேலை செய்வது போல நடிப்பதற்கு நாம் பணம் தர வேண்டும். இந்த அலுவலகங்களில் வேலை செய்வது போல அமர, ஒரு நாளைக்கு 30 முதல் 50 யுவான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு நாளைக்கு சுமார் 365 முதல் 610 வரை. திங்கள் முதல் வெள்ளி வரை, வேலையிலிருப்பது போல நடிப்பதற்கு வருடச் செலவு சுமார் 1,60,000 ரூபாய். இத்தகைய அலுவலகத்தில், அமருவதற்கு நாற்காலி, மேஜை, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்னெட் வசதி என்று எல்லா சௌகரியங்களும் உண்டு.
சில போலி அலுவலகங்களில், மதிய உணவு வசதிகளும் உண்டு. வீட்டில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு இந்தப் பாசாங்கு வேலை நல்லது என்று கருதுபவர்கள் உண்டு. தங்களுடைய சொந்த ஸ்டார்ட் அப் வேலை, இணைய தளத்தில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் தேட, வேலைகளுக்கு விண்ணப்பிக்க, ஆகியவற்றை இந்தப் போலி அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு செய்கிறார்கள்.
பொருளாதார மாற்றம், மற்றும் தங்களுடைய படிப்பு இவற்றின் இடையே உள்ள பொருத்தமின்மை காரணமாக, தாங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலோசித்து முடிவெடுக்க இதைப் போன்ற அலுவலகங்கள் உதவுகின்றன.
ஒரு சில டிகிரி மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, அதற்குரிய சான்றிதழ் பெறுவதற்கு, இத்தனை மாதங்கள் வேலை செய்தேன் என்று அறிக்கை கொடுக்க வேண்டியது கட்டாயம். அவர்களுக்கு இந்தப் போலி அலுவலக வேலை உதவுகிறது.
பிபிசியின் அறிக்கையின் படி, இதைப் போன்ற போலி அலுவலகங்கள் சீனாவின் முக்கிய நகரங்களான ஷென்சென், ஷாங்காய், நான்ஜிங்க், வுஹான், செங்க்டு, குன்மிங்க் ஆகிய இடங்களில் இருக்கின்றன.
2023ஆம் வருடம், சீனாவின் இளைஞர்கள் வேலையின்மை 46.5 சதவிகிதமாக இருந்தது. தொடர்ந்து மூன்று மாதங்கள் வேலையின்மை உச்சத்தில் இருந்து வந்த காரணத்தால், சீன அரசு இந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தி வைத்தது.
படிப்பிற்கேற்ப வேலை கிடைப்பதில்லை என்ற காரணத்தால், சீன அரசின் கல்வித் துறை ஒரு திட்டம் கொண்டு வந்தது. அதன்படி, 2011ஆம் ஆண்டில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு 60 சதவிகிதத்திற்குக் குறைவான வேலை வாய்ப்பு உள்ள எந்தவொரு கல்லூரி படிப்புகளும் ரத்து செய்யப்படலாம் என்று அறிவித்தது. இதை தடுப்பதற்கு சில கல்லூரிகள், தங்கள் பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்குகின்றன. சில, மாணவர்களை போலி அலுவலகங்களில் வேலை செய்யச் சொல்கின்றன.
ஆனால், போலி அலுவலகங்கள், வேலையிலிருப்பது போலப் பாசாங்கு செய்வது ஆகியவை தற்காலிகத் தீர்வு மட்டுமே. சீனாவிலிருப்பது போல நிலைமை பல நாடுகளிலும் இருக்கலாம். தொழில்நுட்பம் வளரும் வேகத்திற்கு இணையாகப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். புதிய தொழில் நுட்பம் கற்பிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும். இல்லை என்றால் படிப்பிற்கேற்ப வேலை கிடைக்காத நிலை தொடர்ந்து வேலையின்மை அதிகரிக்கும்.