
தகவல் தொடர்பு உலகில் நாளுக்கு நாள் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் அதிவேக 5ஜி இணையச் சேவை இன்னும் முழுமையாகக் கால்பதிக்காத நிலையில், சீனா ஒரு படி மேலே சென்று 10Gbps வேகத்திலான புதிய நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இணையத் தொழில்நுட்ப வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள சுனான் மாவட்டத்தில், தொலைத்தொடர்பு ஜாம்பவான்களான ஹூவாய் மற்றும் சீனா யூனிகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த 10ஜி நெட்வொர்க் சேவையைத் தொடங்கியுள்ளன. இது வழக்கமான மொபைல் நெட்வொர்க் போல வயர்லெஸ் சேவை அல்ல. மாறாக, அதிநவீன ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு மூலம் வழங்கப்படும் பிராட்பேண்ட் சேவையாகும்.
F5G-A (Enhanced All-Optical Network) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சேவை, மேம்பட்ட 50G-PON உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் ஃபைபர் அணுகல் வலையமைப்பின் மைய அமைப்பில் செய்யப்பட்ட மேம்பாடுகளே இந்த ஜிகாபைட்டிலிருந்து 10ஜி நிலைக்கு வேகத்தை உயர்த்த உதவியுள்ளன.
இந்த 10ஜி நெட்வொர்க்கின் வேகம் கற்பனை செய்ய முடியாத அளவிலானது. நடத்தப்பட்ட சோதனைகளில், இதன் பதிவிறக்க வேகம் சுமார் 9834 Mbps ஆகவும், பதிவேற்ற வேகம் சுமார் 1008 Mbps ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வேகத்தை எளிமையாகப் புரியவைக்க ஒரு 8K தரத்திலான மிகத் தெளிவான ஒரு திரைப்படத்தை இந்த நெட்வொர்க்கில் வெறும் 2 வினாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இது தற்போது வேகமாக இருக்கும் எனக் கருதப்படும் 5ஜி-யைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். வேகத்துடன் மட்டுமல்லாமல், இணையப் பயன்பாட்டில் ஏற்படும் தாமதத்தையும் (latency) இந்தத் தொழில்நுட்பம் மிகக் கணிசமாகக் குறைத்துள்ளது. இது சில மில்லி விநாடிகளில் மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த 10ஜி நெட்வொர்க் அறிமுகம், உலகளாவிய இணைய வேகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஒரு புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது. இது வருங்காலத்தில் அதிவேக இணையத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. தகவல் பரிமாற்றம், டிஜிட்டல் சேவைகள், பொழுதுபோக்கு எனப் பல துறைகளில் இந்த அதீத வேகம் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகள் இன்னும் 5ஜி விரிவாக்கத்திலேயே இருக்கும் வேளையில், சீனா அடுத்த தலைமுறைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.