சக்கைப்போடு போடும் விளம்பரங்களும் பொக்கைவாய் தெய்வங்களும்!

Old age home
Old age home

- பி.ஆர்.லட்சுமி

இன்று விளம்பரக் கம்பெனிகள் மக்களை வெளிநாடுகளில் வசிக்கிறாற்போல தனி குடும்பங்களாக நினைத்து தான் இந்தியாவில் விளம்பரப் படங்களை வெளியிடுகின்றன. அதனால், விளம்பரங்களில் கூட குழந்தைகளுக்குத் தனியறை, தனி மொபைல், தனி படுக்கை என சகலமும் தனியாகவே பெற்றோர் அமைக்கின்றனர். நாலு நாளைக்கு தாத்தா, பாட்டி உன் அறையில் தான் இருப்பார்கள். அதுக்காக நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்… உடனே பிள்ளை முகம் வாடுவதைப்போலக் காட்டி கவலையே வேண்டாம்! நீங்க இந்த ஃபிளாட் வாங்க உங்களுக்குக் கம்மி விலையில் எல்லாம் ஏற்பாடு பண்ணி தர்றோம்… இந்த மாதிரியான விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன.

கீழ்த்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் இந்த கலாசாரம் பொருந்துமா? சென்னையை விட கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையில் முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் முதியோருக்கு வீட்டிலேயே உணவுகளை எடுத்துச் சென்று வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால், முதியவர்களைப் பளு என நினைத்து அதற்கென வருபவர்களிடம் சொல்லி முதியோரைக் கொன்றுவிடும் அவலமும் தெற்குப் பகுதிகளில் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சட்டங்கள் தடுத்தாலும் மக்கள் வெளியே சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். என்ன கொடுமையடா சாமி!

சில முதியோர்கள் தன் வயது ஒத்த நிரம்பிய பெரியவர்களிடம் பேசுவதை விரும்புகின்றனர். ஏனெனில், வீட்டில் தனிமையில் இருக்க அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பெற்ற மகன் மற்றும் மகள் தாய், தகப்பனைக் கவனிக்காத முக்கிய காரணம் பணம். இவர்களுக்காகப் பெற்றோர் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை! எத்தனை! கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைத்து, வேலை பார்க்க வைத்து ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கும் வரை அவர்களுக்கு எந்திரம் போல் உழைத்து, மனதில் தனது குறிக்கோளை அடைய போராட வேண்டி இருக்கிறது. அந்தக் காலம் போல ஏழு, எட்டு பிள்ளைகள் காலமா இது! என மனதிற்குள் நினைத்தாலும் முதியோர்கள் தனது பிள்ளைகளை மற்றவர் முன்னிலையில் விட்டுக் கொடுப்பதில்லை. பேரன்,பேத்தி முகம் பார்த்தால் போதும் என்று அவர்கள் செய்யும் லூட்டிகளைப் பொறுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பொக்கைவாய் தெய்வங்களை இனியாவது இளந்தலைமுறையினர் பராமரிப்பார்களா?

சில நிறுவனங்களில் ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் நல்ல உள்ளங்களுக்கு விடுமுறை கொடுத்து பெற்றோரைக் கவனிக்க அனுப்பி வைக்கின்றனர். தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகள் வீட்டில் வளரும் பண்பாட்டுமுறைகள் போன்றவற்றை நன்கு கற்றுக் கொள்கின்றனர். அதனால், அவர்களால் பணியிடங்களில் வரும் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ள முடிகிறது.

இதையும் படியுங்கள்:
படைப்பாளிகளைக் கொண்டாடுவோம் 5 எழுத்தாளர்கள் 5 சிறுகதைகள் 5 நாடகங்கள்!
Old age home

குழந்தையைக் கொண்டு போய் காப்பகங்களில் விட்டுவிட்டு இரவானால் குழந்தையிடம் பேசுவதற்குக் கூட நேரம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் இந்த யுகம் எப்படிப் போகும் என்று தெரியாமல் இருக்கிறது. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போது இல்லறம் என்பது இலைமறை காய், மறை ஆக கணவன் மனைவியிடையே சிக்கல்கள் இல்லாமல் இருந்தது. தனுசை ஒடித்து ராமன்,சீதையை மணந்த காலத்திலேயே குடிமக்கள் சொன்னதாக ஒரு கற்பனை புனையப்பட்டு வான்மீகி முனிவரின் ஆணாதிக்க சிந்தனையைக் காப்பியமாக வாசிக்கும் கலாசாரத்தில் இருக்கிறோம். இன்று கணவன்,மனைவி பணிக்குச் செல்வதால் மனச்சுமை அதிகரித்து விவாகரத்துவரை சென்றுவிடும் அவலம் அதிகரித்துள்ளது. இதனால் வயதானவர்களும்,குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பணம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றுதான். ஆனால், அன்புகளை மட்டுமே சங்கிலியாகக் கொண்டு வாழும் இடத்தில் பணத்திற்கு என்ன வேலை! சொத்துக்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு எல்லா இடத்திலும் மனஸ்தாபங்கள் . அடுத்தடுத்த வீடுகளில் இருப்பவர்கள் கூட அண்ணன், தம்பிகள் என்று போஸ்ட்மேன் சொன்னால்தான் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைமையே நகர்ப்புறங்களில் காணப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக மரம், செடி கொடி நிறைந்த வீடுகளை விற்று ஆளுக்கு ஒரு ஃபிளாட்டை உருவாக்கிக் கொடுத்து தனிமரமாக முதியோர் இல்லத்தில் அடைக்கலம் ஆகி விட்டனர்.

அமெரிக்காவில் உள்ளவர் நமது ஒருவனுக்கு ஒருத்தி - கலாசார பண்பாட்டைப் பார்த்து வியந்து போய் பாராட்டி நிற்கும் பொழுது நமக்கு எதற்கு இந்த முதியோர் இல்லப் பண்பாட்டு மோகம்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com