8 அடி தாயும், 16 அடி பிள்ளையும்!

சொல்வதெல்லாம் தமிழ்
வாழை மரம் - தென்னை மரம்
வாழை மரம் - தென்னை மரம்

தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று பழமொழி!

தொன்றுதொட்டு மக்கள் வழக்கில் இவைப் புழங்கப்பட்டாலும் சில பழமொழிகளின் சரியான பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அவற்றுள் குறிப்பிடத்தக்கது.

'தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்' - என்ற பழமொழி. 'தாயின் திறன்களை விட பிள்ளையின் திறன் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்' - என்ற தவறான பொருள்படவே இதுநாள்வரை புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால்... தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற இப்பழமொழி உழவுத் தொழில் தொடர்பான - மிக அறிவார்ந்த,
நுட்பமான  சூத்திரத்தைக் குறிப்பதாகும்.

வாழைக்கு - 8 அடி இடைவெளியும்,
தென்னைக்கு - 16 அடி இடைவெளியும்  தேவை என்பதே இதன் உள்ளார்ந்த பொருள்.

வாழைத் தோப்பில் கன்றுகளை நடவு செய்யும்போது இரண்டு மரங்களுக்கிடையில் 8 அடி இருக்க வேண்டும் என்பதையும் , தென்னம்பிள்ளைகளுக்கிடையில் 16 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும்  மிக நுட்பமாக பழமொழி வடிவில் சொல்லியிருக்கிறார்கள்... அவ்வளவுதான்!

இது தவிர, இதே கருத்தை வலியுறுத்தும் வேறுசில வழக்குகளும் விவசாயிகள் இடையே உண்டு.

'எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை'
'எட்டடி - வாழை கமுகு.
ஈரடி - கரும்பு கத்தரி.
பதினாறடி - பிள்ளை'
(கமுகு - என்றால் பாக்கு மரம்) .

இதே கருத்தை வேறு விதமாக....
"தென்னைக்கு தேரோட,
வாழைக்கு வண்டியோட,
கரும்புக்கு ஏரோட,
நெல்லுக்கு நண்டோட..." - என்றும் சொல்வதுண்டு!

நடவு செய்கையில் மேற்குறிப்பிட்டபடி இடைவெளி இருந்தால்தான் மரங்களின் வேர்கள்  எவ்விதத் தடையுமில்லாமல் சீராகப் பரவி மரங்கள் உரிய காலத்தில் தகுந்த வளர்ச்சியை அடையும். வளர்ந்த மரங்களின் இலைகள் பக்கத்து மரங்களின் இலைகளைத் தொடாது, போதுமான சூரிய ஒளி நிலத்தில் விழுந்து சரியான விளைச்சலுக்கு உதவி புரியும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய் தாக்கத்தைக் குறைக்கும் நாவல் பழம்!
வாழை மரம் - தென்னை மரம்

கடைக்குறிப்பு :
தாய் - என்ற சொல் வாழையையும்,
பிள்ளை - என்ற சொல் தென்னையையும் குறிக்கும்.  நன்கு வளர்ச்சியடைந்த வாழை மரத்தை 'தாய் மரம்' என்றும், அதனைச்சுற்றி சிறிதாக முளைத்து வளர்பவற்றை 'கன்று' எனவும் அழைப்பது தமிழர் வழமை!

வயிற்றில் குழந்தை சுமக்கும் தாயானவள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடப்பதாகச் சொல்வர். அதே போல வாழைமரம் குலை 'தள்ளுவதால்' தாய் என்று ஒப்புமைப் பெயரை பெற்றது. தள்ளை - தாய்!

அதேபோல் தென்னைமரத்தின் இளங்கன்றின் சரியான பெயர்  - தென்னம் பிள்ளை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com