
தீபாவளி, கிறிஸ்துமஸ் புத்தாண்டு என பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இனி அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பல சலுகைகளில் பொருட்கள் விற்பனைக்கு வரும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் ஷாப்பிங்(Online shopping) நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு கிளிக் செய்தால் போதும் உலகெங்கிலும் உள்ள பொருட்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு வரலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நன்மைகள் உள்ளது உண்மைதான்.
அதே வேளையில், அதில் நம்மில் பலருக்குத் தெரியாத பல சிக்கல்களும் அதில் உள்ளது. தற்போது பரந்து விரிந்துள்ள இணைய சந்தையில் நாம் மூழ்கும்போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில்(Online shopping) மறைந்துள்ள ஆபத்துக்கள்:
1. பாதுகாப்பு கவலைகள் : இணையத்தில் பொருட்களை வாங்கும்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் உள்ளது. எனவே, இணைய வர்த்தகத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்யும்போது, இணையதளம் பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
2. மோசடிகள் : புகழ்பெற்ற ஆன்லைன் விற்பனையாளர் களிடமிருந்து வருவது போலவே வரும் மின்னஞ்சல்களில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். இப்படி போலியான ஈமெயில்களைப் பயன்படுத்தி ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் கடவுச் சொற்களை மோசடிக்காரர்கள் திருடி பணத்தை ஏமாற்ற வாய்ப்புள்ளது.
3. போலி தயாரிப்புகள் : இணையத்தில் இருக்கும் அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களும் நேர்மையானவர்கள் என சொல்ல முடியாது. இணையதள பக்கத்தில் ஒரு பொருளை காட்டி இருப்பார்கள், ஆனால் நமக்கு வரும் பொருள் தரம் குறைந்ததாக இருக்கும். எனவே அறிமுகமில்லாத இணையதளங்களில் இருந்து ஒருபோதும் பொருட்களை வாங்காதீர்கள். ஒரு பொருளை வாங்கும்போது பயனர்களின் கருத்துக்களை (customer Reviews) ஆராய்ச்சி செய்து வாங்குவது நல்லது.
4. மறைக்கப்பட்ட செலவுகள் : நாம் ஒரு பொருளை வாங்கும்போது ஷிப்பிங் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். இதைப் பற்றி முன்கூட்டியே அறிந்து பொருட்களை வாங்க முடிவு செய்வது நல்லது. ஏனென்றால் இப்படிப்பட்ட செலவுகள் ஒரு பொருளின் விலையை கணிசமாக பாதிக்கலாம்.
5. எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரிட்டர்ன் : ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே நாம் வாங்கிய பொருள் நமக்கு பிடிக்காதபோது அதைத் திருப்பிக் கொடுப்பதும், அல்லது அதற்கு பதிலாக வேறு பொருட்களை வாங்குவதும்தான். ஒரு பொருளை ஆர்டர் செய்வதற்கு முன்பு அதன் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரிட்டன் கொள்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சில பொருட்களை ரிட்டன் செய்ய முடியாத விதிகள் இருக்கலாம். அது உங்களை சிக்க வைக்கும்.
வரும் பண்டிகை காலத்தில் இணையத்தில் பொருட்களை வாங்கும்போது மேற்கூறிய விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள். அடுத்த முறை நீங்கள் ஏதாவது பொருட்களை வாங்க முடிவு செய்தால் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்குங்கள்.