பிரதமர் இந்திரா எதற்காக தன்னை சந்திக்க விரும்புகிறார்?

பிரதமர் இந்திரா எதற்காக தன்னை சந்திக்க விரும்புகிறார்?

ஒரு நிருபரின் டைரி 38
Published on

- எஸ். சந்திரமௌலி

  இந்திரா காந்தி வியந்த மேஜிக்

 மேஜிக் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  காரணம், நம் கண்முன்னே இருக்கும் ஒன்றை மேஜிக் கலைஞர் மறைய வைக்கிறார்; நம் கண்ணில் படாத ஒன்றை, வரவழைத்துக் காட்டுகிறார். நாம் அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும், மனிதனால் இல்லாத ஒன்றை உருவாக்கவும் முடியாது; இருக்கும் ஒன்றை மறையச் செய்யவும் முடியாது. மேஜிக் என்பது மந்திரமில்லை; தந்திரம்தான்! இதெல்லாம் நம் அறிவுக்குத் தெரியும். ஆனாலும், நம் கண்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, நம்மை ஒரு கணம் அதை நிஜம் என நம்பச்  செய்கிறார் மேஜிக் நிபுணர். அதுதான் அங்கே இருக்கும் சூட்சுமம்.

உலகப் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர்கள் பலர் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். பி.சி. சொர்க்கார், கே. லால், கோபிநாத் முத்துக்காட், ஜடுகர் ஆனந்த், மித்ரா என்று ஒரு குட்டி லிஸ்ட் போடலாம். இவர்கள் அனைவருமே சென்னைக்கு வந்து மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ரஷ்யாவில் இருந்து  அலெக்ஸ் என்ற மேஜிக் கலைஞர் சென்னை வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர்களில், மேஜிக் நிபுணர் கே.லாலின் வாழ்க்கை அனுபவங்களை, அவரே சொல்லக் கேட்டு கல்கியில் தொடராக எழுதும் வாய்ப்பு கிடைத்தது.   ஒரு முறை கே.லால் என்கிற காந்தி லாலும், அவரது மகன் ஹர்ஷத் என்கிற ஜூனியர் லாலும்   சென்னை வந்தபோது, அவர்களை  பேட்டி கண்டு ஒரு கட்டுரை எழுதினேன். அடுத்த ஆண்டு வந்தபோது, அவரை சந்தித்து, “நீங்கள்தான் சென்னையில் ஒரு மாதத்துக்கு தங்கி மேஜிக் நடத்தப்போகிறீர்களே!  இந்த நாட்களில் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை எனக்குச் சொல்லுங்கள், நான் கல்கி பத்திரிகையில் எழுத ஆசைப்படுகிறேன்” என்று சொன்னதும், அவர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக லாலின் மகள்  பிரீதி, திருமணத்துக்குப் பின் சென்னையில் செட்டில் ஆகி இருந்ததால், கீழ்பாக்கத்தில் அவரது வீட்டில்தான் அப்பா லாலும், மகன் லாலும் தங்கி இருந்தார்கள்.  எனவே, தினமும் மாலையில் அவர்களுக்கு மேஜிக் ஷோ இருந்ததால், பகல் நேரத்தில் நான் பிரீதியின் வீட்டுக்குப் போய் அவர்களை சந்தித்துப் பேசுவேன்.

அப்பாவுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது என்பதால், அப்பாவும், மகனுமாக சேர்ந்தே எனக்கு அனுபவங்களைச் சொல்வார்கள். மேடையில், அவர்களின் மேஜிக்கைப் பார்த்தபோது அப்போதே எழுவது பிளஸ் வயதான சீனியர் லால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாகமேடையில் இயங்குகிறார் என நான் வியந்தது உண்டு.  அதை தமாஷாக அவரிடம், “இந்த வயதில்  உங்களால் மேடையில் இவ்வளவு ஆக்டிவாக மேஜிக் செய்ய முடிகிறதே! உங்கள் வயதில் என்னால், அரங்கத்துக்கு வந்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்து, மேஜிக் நிகழ்ச்சியை பார்க்க முடியுமா என்பது கூட சந்தேகம்தான்!” என்று சொல்லுவேன். ஆனால், அரங்கத்தில் அவரது மேஜிக்கைப் பார்த்தபோது ஏற்பட்டதைவிட பன்மடங்கு ஆச்சர்யம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்டது.

சீனியர் லால் அகமதாபாத்தில் மேஜிக் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில்  குஜராத் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வந்த ஒரு அதிகாரி, “பிரதமர் இந்திரா காந்தி உங்களை சந்திக்க விரும்புகிறார்!” என்று சொன்னார்.  முன்பதிவிலேயே அத்தனை ஷோக்களுக்கும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டு, பிரதமரை சந்திக்க டெல்லி போக முடியாத சூழ்நிலை. அதிகாரியிடம் நிலைமையை விளக்கி, நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மறுநாளே டெல்லி புறப்பட்டு வருகிறேன். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!” என்று மென்மையாக சொல்லி அனுப்பிவிட்டார் சீனியர் லால். ஆனாலும்,  “பிரதமர் இந்திரா எதற்காக தன்னை சந்திக்க விரும்புகிறார்” என்பது அவருக்கு சஸ்பென்ஸாகவே இருந்தது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்போது லால் குடும்பத்தினர் வசித்தது கொல்கத்தாவில்.  பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் லாலை சந்திக்க விரும்புகிறார் என்ற தகவல் முதலில் மே. வங்காள முதலமைச்சர் அலுவலகத்துக்குப் போனது.  அவர்கள், தற்போது லால் குழுவினர் அகமதாபாதில் முகாமிட்டிருக்கிறார்கள் என்று டெல்லிக்குத் தகவல் சொல்ல, அடுத்து குஜராத் முதலமைச்சர் அலுவலகத்துக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் போயிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்டபோது லாலுக்கு சஸ்பென்ஸ் பலமடங்கானது.

லால் உடனடியாக, அகமதாபாதில் மேஜிக் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நேராக கொல்கத்தா செல்லாமல் டெல்லி சென்று  பிரதமரைப் சந்தித்தபின் கொல்கத்தா செல்லும்படியாக  விமான டிக்கெட்டை மாற்றிக் கொண்டார். ஆனால், அதற்குத் தேவையே இல்லாமல், அடுத்த சில நாட்களில் பிரதமர் இந்திரா காந்தி அகமதாபாத் வரவேண்டி இருந்தது. அப்போது  லாலை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். லால், இந்திரா காந்தியை சந்தித்தார். அப்போதைய முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கியும் உடனிருந்தார்.  அப்போது இந்திரா காந்தி சொன்ன தகவலைக் கேட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார் லால்.

விஷயம் இதுதான். பிரதமர் இந்திராகாந்தி ஜப்பான் சென்றபோது, ஜப்பானியப் பிரதமரைச் சந்தித்திருக்கிறார்.  அப்போது, ஜப்பானியப் பிரதமர், இந்திரா காந்தியிடம் மேஜிக் நிபுணர் லால் பற்றி சிலாகித்துப் பேசி இருக்கிறார். எனவே, ஜப்பானிய பிரதமரால்  புகழப்பட்ட இந்திய மேஜிக் நிபுணரான லாலை உடனே சந்திக்க விரும்பினார் திருமதி.காந்தி.  “உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மேஜிக் துறையில் நீங்கள் சிறந்து விளங்குவது குறித்து நான் பெருமை அடைகிறேன்” என்று சொல்லி லாலை இந்திராகாந்தி பாராட்டினார்.

இதை என்னிடம் சொன்ன சீனியர் லால், அடுத்து சொன்னது இன்னும் சூப்பர். இந்திரா காந்திக்கு ஒரு மேஜிக் செய்து காட்ட விரும்பினார் லால். அவரிடம், “உங்கள் புடைவையின் ஒரு பகுதியைக் காட்டுங்கள்” என்றதும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், இந்திரா காந்தியோ கூலாக “லால் ஜீ மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது! கவலைப்படாமல், அவர் செய்து காட்டும் மேஜிக்கை ரசியுங்கள்!” என்று சொல்லிவிட்டு, புடைவையின் தலைப்பைக்  காட்டினார்.  அப்புறம் நடந்ததை லால் கூறினார்: “நான் புடைவைத் தலைப்பின் மீது விரல்களை வைத்து, மந்திரங்களை சொல்லிவிட்டு, கையை எடுத்தேன். புடைவையில்  இருந்து லேசான தீ எழுந்தது. முதலமைச்சர் முகத்தில் அதிர்ச்சி! பாதுகாப்பு அதிகாரி பதறினார். இந்திராஜீ முகத்திலோ ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி! அடுத்த வினாடி நான் என்னுடைய   கையாலேயே  தீயை அணைத்துவிட்டு,   “இப்போது உங்கள் புடைவை தலைப்பைப் பாருங்கள்” என்றேன்.  தீப்பிடித்த அடையாளமே துளியும் இல்லை.  மகிழ்ந்து, பாராட்டினார் இந்திரா காந்தி”.  ஜப்பானியப் பிரதமர், இந்திரா காந்தியிடம் கே.லாலைப் பற்றி விசாரித்தார் என்றால், அதற்குக் காரணம், ஜப்பானில் கே.லால்  அத்தனை பிரபலம்.

இந்த அரிய அனுபவத்தைச் சொன்னபோது, “இப்படி இந்திராஜியிடமே பாராட்டுப் பெற்ற நான் பள்ளி இறுதி  வகுப்புக் கூட  பாஸ் பண்ணாதவன். அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. சிறு வயது முதலே மேஜிக் மீது எனக்கு ஈடுபாடு வந்துவிட்டது. நேரம், காலம் பார்க்காத அசராத உழைப்பு, கடவுள் அருள், காசு கொடுத்து, நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, மனநிறைவோடு பாராட்டிய மக்களின் ஆசி இவைதான் என் வெற்றிக்குக் காரணம்” என்று சொன்னார்.

கே.லால் ஜப்பானில் மிகப் பிரபலம் அடைந்தாலும், அவரது முதல் ஜப்பானியப் பயணம் சுவாரசியமானது.  பெங்களூரில் லாலின் நிகழ்ச்சியைப் பார்த்த தோமி ஹாரா என்ற  ஜப்பானியர்  லாலை ஜப்பானுக்கு அழைத்து அங்கே மேஜிக் ஷோ நடத்த விரும்பினார். பேச்சு வார்த்தை முடிந்து, அக்ரிமென்ட் தயாரானது.  அப்போது, அந்த ஜப்பானியர் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் அதை சொல்லத் தயங்குகிறார் என்று லாலுக்குத் தோன்றியது. “வெளிப்படையாக, தயங்காமல் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள்!” என்று லால் சொன்னதும், அவர், “அண்மையில் அமெரிக்க மெஜீசியன் ஒருவர் ஜப்பானில் நிகழ்ச்சியை நடத்தினார். அவரது குழுவில் இடம்பெற்றிருந்த பெண்கள் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார்கள். அதேபோல உங்கள் குழுப் பெண்களும் கவர்ச்சியாக உடை அணிந்து வர வேண்டும்”  என்றார். “உங்கள் கலாசாரம் வேறு; இந்திய கலாசாரம் வேறு. உங்கள் பணத்துக்காக, எங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாக்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று சொல்லி, அந்த அக்ரிமென்ட்டில் கையெழுத்துப் போட லால் மறுத்துவிட்டார்.

ஏமாற்றத்துடன் திரும்பிய ஜப்பானியர் மீண்டும் வந்து, “ உங்கள் குழுப் பெண்கள் கவர்ச்சி உடை அணிய வேண்டாம்! நான் ஜப்பானியப் பெண்களையே கவர்ச்சி உடையில் மேடையில் தோன்ற ஏற்பாடு செய்துவிடுகிறேன்” என்று சொன்னார். மீண்டும் லாலுக்கு வந்ததே கோபம். இந்தியப் பெண்ணானால் என்ன? ஜப்பானியப் பெண்ணானால் என்ன?  பெண்களை கவர்ச்சிப் பொருளாக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

அதன்பின், ஜப்பான் போக வர செலவு, டீசன்ட்டான தங்கும் வசதி இதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு ஒரு ரூபாய்கூட சன்மானம் வேண்டாம். ஏழு நாள் மேஜிக் ஷோ நடத்துகிறேன். வசூலின் அடிப்படையில் அதற்குப் பிறகு நிகழ்ச்சியை நீடிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யுங்கள். ஆனால், கவர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொல்லி ஜப்பான் செல்ல ஒப்புக்கொண்டார்.  முதல் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு. அதன் பிறகு, லால் குழுவினர் ஆறுமாதம் ஜப்பானில் தங்கி மேஜிக் ஷோ நடத்திவிட்டு இந்தியா திரும்பினார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் ஜப்பான் சென்று, நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார்கள்.

கே.லாலின் வாழ்க்கை அனுபவங்கள் “மந்திரப் புன்னகை” என்ற தலைப்பில் கல்கியில் தொடராக வெளியாகி, பின்னர் அதே பெயரில் புத்தகமாகவும் வெளியானது.

2008ல், குஜராத் அரசின் அழைப்பின்பேரில் நவராத்திரி சமயத்தில் நடந்த ‘வைப்ரன்ட் குஜராத் “ கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அகமதாபாத் சென்றேன். அப்போது கே.லால் அகமதாபாதில் வசித்தார். மந்திரப் புன்னகை புத்தக பிரதிகளை அவரிடம் கொடுத்தபோது, ஒரு குழந்தையைப் போல குதூகலித்தார்.  தன் மனைவியிடமும், மருமகளிடமும், “என்னுடைய வாழ்க்கை கதையை என் தாய் மொழியான குஜராத்தியில் கூட புத்தகமாக வரவில்லை; ஆனால், இவர் தமிழ் மொழியில்  எழுதி, கௌரவப்படுத்தி இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியோடு கூறி, என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

உலகப் புகழ்பெற்ற உங்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு பத்மஸ்ரீ விருது கூட இன்னமும் தரவில்லையே?” என்று கேட்டேன். “முதலமைச்சர் நரேந்திர மோடி பத்மஸ்ரீ விருதுக்கு என் பெயரை சிபாரிசு செய்தார். ஆனால், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் பாலிடிக்ஸ் காரணமாக எனக்கு அந்த அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

88 வயதில் 2012ல் உடல் நலம் குன்றி மறைந்தார் சீனியர் லால். ஜூனியர் லால் என அழைக்கப்படும் அவரது மகன் ஹர்ஷத் மேஜிக் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

(தொடரும்)

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com