

சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், வாழ்க்கைச் சரிதங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், 18 இந்திய எழுத்தாளர்களின் தொகுப்பு, தன்னம்பிக்கை நூல்கள், பயணக்கட்டுரை நூல்கள் என்று நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதியிருக்கும் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளரான சிவசங்கரி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்காக, உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், 26-06-2026 அன்று மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி கலையரங்கத்தில் பாராட்டு விழா மிக சிறப்பாக நடந்தேறியது.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், நிகழ்ச்சிகளை புதுமையான முறையில் தொழில் நுட்பத்துடன் சிறப்பாகத் திட்டமிட்டு, பரிசுகளை வடிவமைத்து, நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார்.
சிவசங்கரி அவர்களை இன்னிசையுடன் பள்ளி மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து சிவப்புக் கம்பளத்தில் வரவேற்க, உரத்த சிந்தனை தலைவர் பத்மினி பட்டாபிராமன் மற்றும் செயலாளர் உதயம்ராம் ஆகியோர் அவரை மேடையில் சிம்மாசனத்தில் அமரவைத்தனர்.
பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், ஷோபனா ரமேஷ், எழுத்தாளர் சீதா ரவி, வானவில் ரவி, மீரா நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
பத்மினி பட்டாபிராமன் அன்புடன் வரவேற்றார்.
சிவசங்கரியின் வாழ்க்கை வரலாற்றை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் A.R.P. ஜெயராம் தயாரித்த குறும்படம் பெரிய எல்.ஈ.டி திரையில் திரையிடப்பட்டு அரங்கத்தை அதிரச்செய்தது.
அப்போது பல திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிவசங்கரியை வாழ்த்திப் பேசிய காணொளி திரையிடப்பட்டது.
"மனிதம் போற்றும் மனுஷி" என்ற விருதினை சிவசங்கரி அவர்களுக்கு எழுத்தாளர் மாலன், திரைப்பட இயக்குநர் S.P.முத்துராமன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
குட்டி ROBOT ஒன்று , சிவசங்கரியின் அருகில் சென்று, கை கொடுத்து வாழ்த்தியது. மேடையில் பரிசுப் பொருட்களைக் கொண்டு வரும் பணியை சோனி என்ற மற்றொரு ரோபோ Robot சிறப்பாக செய்தது.
சிவசங்கரி எழுதிய நூல்களின் மையக் கருத்து, எழுதிய ஆண்டு, நூல் குறித்த சிறு குறிப்பு மற்றும் அட்டைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்த ஆல்பம், “சிவசங்கரியின் சிந்தனைச் சிதறல்கள்’’ –புத்தகம், அவர் எழுதியிருக்கும் நாவல்களின் பெயர்களை வைத்து, பட்டுக்கோட்டை பிரபாகரின் புதல்வி ஸ்வர்ண ப்ரியா உருவாக்கிய சிவசங்கரியின் உருவப்படம், சிவசங்கரியின் பிறந்த நாள் எண் கொண்ட கரன்சி, போன்ற பல பரிசுகளை, உரத்த சிந்தனை உறுப்பினர் களும் பிரமுகர்களும் இணைந்து வழங்கினர்.
மருத்துவர் சுதா சேஷய்யன் எழுத்தாளர் இந்துமதி, பத்திரிகையாளர் ஜி.மீனாட்சி, வேதா கோபாலன், உலக நாயகி பழனி, ஃபாத்திமா பாபு, தாரிணி கோமல் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
சிவசங்கரி எழுதிய "சண்டை" சிறுகதை, அவரைச் சிறப்பிக்கும் விதமாக கோமல் தியேட்டர்ஸ் நாடகமாக, தாரிணி கோமல் இயக்கத்தில், அன்று மேடையில் அரங்கேறியது.
பத்மஶ்ரீ சிவசங்கரி தனது ஏற்புரையில் விழா அமைப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்.
இந்தச் செய்தியை வாசிப்பதன் மூலம், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த ஆளுமையான சிவசங்கரி அவர்களின் வாழ்நாள் சாதனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாராட்டு விழாவின் அரிய தருணங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, தமிழ் இலக்கிய உலகின் தற்போதைய நகர்வுகளைப் புரிந்து கொள்ளலாம்.