பரமாச்சாரியார் சொன்னார்! டாக்டர் பத்ரிநாத் செய்தார்!

Dr. Badrinath
Dr. Badrinath
Published on

ண் மருத்துவத்துறையில் சீரிய தொண்டாற்றிவரும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா என்றதும் உடனே நம் நினைவுக்கு வருபவர் டாக்டர் பத்ரிநாத்! அதேபோல டாக்டர் பத்ரிநாத் என்றதும் உடனே சங்கர நேத்ராலயாதான் நம் நினைவுக்கு வரும். அயராத  சேவைக்காக உள்ளூர் விருதுகள் முதல் உயரிய பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் வரை அவருக்கு அளிக்கப்பட்டன.

டாக்டர் பத்ரிநாத்
டாக்டர் பத்ரிநாத்

தன் மருத்துவ பணியின் ஆரம்ப நாட்களில் சென்னையில் சில பிரபல தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய இவர், காஞ்சி பரமாச்சாரியாரின் ஆலோசனையின்பேரில் 1978-ல் இன்னும் சில புரவலர்களின் துனையுடன் சங்கர நேத்ராலயா கண் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையைத் துவக்கினார்.

டாக்டர் பத்ரிநாத் அமெரிக்காவிலும் கனடாவிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1970ல் இந்தியா திரும்பியபோது,  தான் அமெரிக்காவில் பயன்படுத்திய கண் மருத்துவ உபகரணங்களை தன்னுடன் கொண்டு வந்திருந்தார். இந்த உபகரணங்கள் பளபளவென்று புதியன போல் இருந்தன.

எதையும் சுத்தமாக, பளிச்சென்று பராமரிக்க வேண்டும் என்ற குணமுடையவர்  டாக்டர் பத்ரிநாத். எனவே, அவர் அமெரிக்காவில் இருந்து  கொண்டுவந்திருந்த மருத்துவ உபகரணங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தவை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள் நம்பவில்லை. 

இறக்குமதி கெடுபிடிகளும், வரிவிதிகளும் கடுமையாக இருந்த காலகட்டம் அது. எனவே, அந்த பழைய உபகரணங்களுக்கு, புதிய உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது எவ்வளவு வரி விதிப்பார்களோ, அதே விகிதத்தில் வரி விதித்தார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள். டாக்டர் பத்ரிநாத் சிரமப்பட்டு, பணத்தைப் புரட்டி அந்த வரியைக் கட்டும்படி ஆனது.

ஜெயேந்திரருடன்டாக்டர் பத்ரிநாத்
ஜெயேந்திரருடன்டாக்டர் பத்ரிநாத்

ங்கர நேத்ராலயா உருவானதற்குக் காரணம்கூட நெஞ்சை நெகிழ வைக்கும் ஒன்றுதான்.  காஞ்சி பரமாச்சாரியாருக்கு ஒரு கண்ணில் கேடராக்ட் அறுவைச் சிகிச்சை நடந்து, அது துரதிர்ஷ்டவசமாக பலனில்லாமல் போய்விட்டது.  காரணம், ஆபரேஷன் முடிந்த மறுநாளே, அவர் ஆற்றில் குளித்துவிட, ஆபரேஷன் ஆன கண்ணில் இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கடராமன் கேட்டுக் கொண்டதன்பேரில் டாக்டர் பத்ரிநாத் இன்னொரு கண்ணில் கேடராக்ட் ஆபரேஷன் செய்ய முன்வந்தார். அதன்படி, ஆபரேஷன் செய்து முடிந்ததும், டாக்டர் பத்ரிநாத், “முன்புபோல இன்ஃபெக் ஷன் ஆகிவிடாமல் இந்த முறை மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதைக் கேட்ட பரமாச்சாரியார், “ நீ சொல்கிறபடி நான் கண்டிப்பாகக் கேட்கிறேன்.  அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எனக்கு இந்தக் கண்ணிலும் கண் பார்வை போய்விடக் கூடாது; இரண்டாவது காரணம் அதைவிட முக்கியமானது உன்னோட பேர் கெட்டுப் போயிடக் கூடாது” என்று சொன்னாராம். பரமாச்சாரியாரைத் தொட்டு, ஆபரேஷன் செய்ததை தன் வாழ்க்கையின் பாக்கியமாகக் கருதுவதாக நெகிழ்க்சியோடு டாக்டர் பத்ரிநாத் அடிக்கடி கூறியதுண்டு.  (கல்கி தீபாவளி மலரில் அந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாகவும் பகிர்ந்துகொண்டார் டாக்டர் பத்ரிநாத்.)

அப்போதுதான், “நீ ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்துகொண்டிருப்பதைவிட, ஏழை எளிய மக்களுக்கும் மிகச் சிறப்பான கண் மருத்துவச் சிகிச்சை கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் ஒரு ஆஸ்பத்திரியை நீயே ஆரம்பி! அப்படிச் செய்தால், காஞ்சி காமாட்சியின் அருளும், என்னோட ஆசியும் உனக்கு உண்டு” என்று பரமாச்சாரியார் சொல்ல,  அதன்படி பரமாச்சாரியார் பெயரிலேயே டாக்டர் பத்ரிநாத் சங்கர நேத்ராலயாவை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
மைக்ரோசாஃப்டில் இணையும் சாம் ஆல்ட்மேன்! என்ன செய்ய போகிறார்?
Dr. Badrinath

1978ல் துவக்கப்பட்ட சங்கர நேத்ராலயா இன்று ஆலமரமாகத் தழைத்து வளர்ந்து தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து வருகிறது. ஆசியாவின் மிகச் சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

டாக்டர் பத்ரிநாத் மறைந்தாலும், சங்கர நேத்ராலயா, அவர் பெயரை என்றென்றும் இந்த உலகத்துக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.

சங்கர நேத்ராலயா இருக்கும் கல்லூரி சாலைக்கு, டாக்டர் பத்ரிநாத்தின் பெயரைச் சூட்டி, தமிழக அரசு அவரை கௌரவிக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com