

பெண் பார்க்கும் படலத்தில் ஒவ்வொருவரின் ஆசைகள் என்ன? மணப் பெண்ணின் ஆசை என்ன? கல்யாணம் (Marriage) பேசலாம் என காத்திருப்பவர்கள் ஒரு வழியாக மாப்பிள்ளை பார்க்க, ஆரம்பிக்கும் நேரமிது. அப்படி மாப்பிள்ளை வீட்டார் மணமகளைப் பார்க்க குடும்பத்தாரோடு கலந்து கொள்ளும் ஒரு கிராமத்து வீட்டு நிகழ்வில் என்ன மாதிரியான உரையாடல்கள் நிகழ்கின்றன என பார்க்கலாமா?
மாப்பிள்ளை வீட்டார் வீட்டை விட்டு கிளம்பும் நேரம்.
அந்தி வானத்தில் வானத்து இளம் பெண் 'நிலா' வருவதைப் பார்த்த 'கதிரவன்', அதற்கு கண்ணாமூச்சி காட்ட வேண்டுமென்பதற்காக, மலைமுகடுகளில் ஒளிந்து கொள்கிறான். அந்த நேரத்தில்தான் பழமையும், பாரம்பர்யமும் ஊறிப்போன அந்த கிராமத்தின் ஓட்டு வீடு பரபரப்பானது.
வீட்டின் தலைவர், வாசலுக்கும், வீட்டிற்குள்ளும் நடைப்போட்டார். அந்த நடையில் ஒரு பதட்டம் தென்பட்டது. முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஒரு வழியாக, அவர் எதிர்பார்த்த வண்டி வாசலில் வந்து நின்றது. வீட்டின் தலைவரும், தலைவியும் வாசலுக்கு ஓடிவந்து அவர்களை வரவேற்றார்கள்.
வரவேற்றது மாப்பிள்ளை வீட்டாரை. தடபுடல் உபசரிப்புகளோடு வீட்டின் உள்ளே அழைத்து போனார்கள். அனைவருக்கும் குடிக்க தண்ணீர் வழங்கப்பட்டது. சம்பிரதாயமாக குடும்ப நலன்கள் விசாரித்து தெரிந்து கொண்டனர். பின்னர், வீட்டின் மையப்பகுதியில் ஒரு நாற்காலி போடப்பட்டது. அதில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த இளைஞன். அவன்தான் ”மாப்பிள்ளை”.
உறவினர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க… பேச்சை ஆரம்பிப்பதற்காகவே கூட்டத்தில் யாரேனும் ஒருவர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர், ”என்னப்பா நம்ம வீட்ல விசேஷம், தம்பி யாரு?” விஷயம் தெரிந்திருந்தாலும், தெரியாதவர் போலவே பேச்சை ஆரம்பித்து விட்டார்.
வீட்டின் மையத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பதோ 'மணமகனாக வரப்போகும் இளைஞன்' ஆனால், அவனைச் சுற்றி உறவினர்களிடையேயும், பெண்ணைப் பெற்ற தாயிடமும், தந்தையிடமும் ஓடிக் கொண்டேயிருக்கும் எண்ணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? அவைதான் இதோ..
பெண்ணின் தந்தைக்கு ஒரு சந்தேகம்... ”மாப்பிள்ளை நல்ல படிச்சிருக்காரா? இல்லையா? ” அதைக் கேட்டு தெரிஞ்சுக்கணும்னு அவருக்குள் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டின் சமையலறையில் காபியும், பலகார வகைகள் செய்தபடியே, ”மாப்பிள்ளைக்கு சொத்து ஏதேனுமிருக்கா? கடன் தொல்லை இருக்காதே, என் பொண்ணு கண்கலங்காம இருக்கணுமே...” இரகசியமாய் ஒரு பெண்ணின் காதோரம் கிசுகிசுத்து, கேட்டு தெரிந்து கொள்ள அச்சாரம் போட்டார் பெண்ணைப் பெற்ற தாய்.
கூட்டத்திலிருந்த உறவினர் ஒருவர் ”இன்னாப்பா, மாப்பிள்ளை பண்பானவர் தானா? நல்ல குடும்பமா? விசாரிச்சு தெரிஞ்சிகிட்டிங்களா?” என்று பெண்ணின் தந்தையை தனியே அழைத்து விவரத்தை அறிந்து கொண்டார்.
இவர்களின் பரபரப்புகளுக்கிடையே, மணமகள் என்ன செய்தாள் தெரியுமா? அவளிருந்த அறை ஜன்னல் வழியாக, மாப்பிள்ளை அழகாக இருக்கிறானா? என்று அவனை அணுவணுவாக கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.
இதில், பெண்ணின் தந்தை மணமகனின் கல்வி பற்றி கவலைப்படுகிறார். தாயோ, செல்வத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முற்படுகிறார். உறவினரோ, மணமகனின் குலச்சிறப்பையும், பண்பாட்டை அறிந்து கொள்ளவும் ஆவலாய் இருக்கிறார். ஆனால், மணப்பெண்ணோ, தனக்கு வரும் மணாளன் கண்ணுக்கினியவனாக, அழகானவனாக உள்ளானா என்று ஆவலாக இருக்கின்றாள்.
நாகரிகம் வளர்ந்த இந்நாளிலும், பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் முந்தைய காலத்திலேயே… மணப்பெண் விரும்புவது என்ற தலைப்பில் பாடலாக எழுதி வைத்து உள்ளார்கள்.
”பெண்உதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே!
எண்ணில தனம் விரும் ஈன்றதாய் – நண்ணிடையில்
கூரியநல் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான்விரும்பும் பெண்."