பரபரப்புக்குப் பஞ்சமில்லாத பிரபலங்கள் பலரைக் கண்ட பெரம்பலூர் தொகுதி யாருக்கு?

Perambalur parliamentary seat for whom?
Perambalur parliamentary seat for whom?https://tamil.oneindia.com
kalki vinayagar
kalki vinayagar

ந்தியத் திருநாட்டின் ஆட்சி, அதிகாரத்தை நிலைநாட்டும் வல்லமை கொண்டதாக மக்களவை தேர்தல் விளங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்களவைக்கான தேர்தல் இந்த ஆண்டு அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 4ம் தேதி வரை இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை 17 மக்களவை தேர்தல்களை நாடு சந்தித்துள்ளது. தற்போது நடைபெறவிருப்பது 18வது மக்களவைத் தேர்தல் ஆகும்.

இந்தியாவின் தலைமை ஆட்சிப் பொறுப்பை முடிவு செய்வதில் பல்வேறு மக்களவைத் தேர்தல்களில் தமிழகம் முக்கியப் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பிரமுகர்கள் பலரை வேட்பாளர்களாகக் கண்டு, அவர்களில் சிலருக்கு வெற்றியையும், பலருக்கு தோல்வியையும் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறப்புக்குரியது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியாகும்.

மிகச் சிறந்த அரசியல்வாதியான இரா.செழியன், திரைப்பட நடிகர் நெப்போலியன், பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆ.ராசா என பல பிரபலங்களை இந்தத் தொகுதி வெற்றிக் கனியைக் கொடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்து அழகு பார்த்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திமுக அதிகபட்சமாக 8 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ராமசாமி பச்சமுத்து வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மிகச் சிறிய மக்களவைத் தொகுதியாகும். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகியவை தனித் தொகுதிகளாகும். தமிழ்நாட்டின் 25வது மக்களவைத் தொகுதியான பெரம்பலூரில் கடந்த 1951ம் ஆண்டு முதல் மக்களவைக்கான தேர்தல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரம்பலூர் மக்களவை தொகுதியில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுப் படையினரிடையே நடைபெற்ற வாலிகண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடிகோட்டை ஆகியவை இந்தத் தொகுதியின் முக்கிய வரலாற்று அடையாளங்களாக உள்ளன. முத்தரையர் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடர்கள், ரெட்டியார் மற்றும் உடையார் சமூகத்தினரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எண்ணிக்கையில் உள்ளனர்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 4 சட்டமன்றத் தொகுதிகளின் வழியே காவிரி ஆறு பாய்ந்தாலும், இங்கே கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயப் பணியையே முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்தத் தொகுதியில் மக்காச்சோளமும் சின்ன வெங்காயமும் பிரதான விளைபொருட்களாக உள்ளன. இவை மட்டுமின்றி, நெல், கரும்பு, வாழை, பருத்தியும் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், போதிய மழை இல்லாததாலும், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயத் தொழிலை கைவிட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விவசாய மக்களிடம் நீண்ட நாட்களாகவே தங்களது விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற மனத்தாங்கல் இருந்து வருகிறது. தங்களது விவசாயப் பொருட்களான வாழை மற்றும் சின்ன வெங்காயத்துக்கு உரிய விலையை மதிப்புக் கூட்டி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
லோக்சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!
Perambalur parliamentary seat for whom?

அதேபோல், பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி, திருமாந்துறை அருகே தனியார் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பல வருடங்களாக தரிசாகக் கிடக்கின்றன. மேலும், இந்த மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரும் திட்டம் ஆகியவையும் நீண்ட நெடுநாட்களாகவே கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றன.

மேற்கூறிய கோரிக்கைகளோடு, இன்னும் சில நலத் திட்டங்களையும், சொன்னதைச் செய்யும் வேட்பாளர்களுக்கே தங்களது வாக்கு என்பதில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் உறுதியாக இருக்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று, வெற்றிக்கனியை கைகளில் தாங்கி  மக்களவையை அலங்கரிக்கப்போது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com