
புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம் என்றார் ஜீன் காக்டி. ஒரு மனிதன் ஒரு செயலை செய்யும்பொழுது அதை ஏன் செய்கிறார் என்று நிதானமாக கவனிக்கவேண்டும். அப்படி கவனித்து வரும்பொழுது பல்வேறு பிரச்னைகளுக்கு நல்லதாக தீர்வு கிடைக்கும். இரு குடும்பத்திற்குள் நடந்திருந்த சில சண்டை சச்சரவுகள் கூட நீங்கிவிடும். அப்படிப்பட்ட சிறப்பு தன்மை வாய்ந்தது நிதானம்.
எனக்குத் தெரிந்த இரண்டு குடும்பங்கள் எப்பொழுதும் எல்லை, கொல்லை சச்சரவுகளிலேயே வழக்கு செய்து கொண்டிருப்பார்கள். பேச்சு வார்த்தையே கிடையாது. ஒருமுறை வெளியில் சென்று வந்த பெரியவர் அந்த எதிராளியின் வீட்டில் இருந்த இரண்டு செடிகளை பறித்துப் போட்டுவிட்டு வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் பயத்தில் இருந்தனர்.
எதற்கு இந்த பெரியவருக்கு இந்த வேலை. சென்றவர் சாதாரணமாக செல்ல வேண்டியதுதானே. அதுதான் ஒருவருக்கு ஒருவராகவில்லையே. இப்பொழுது பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்து இருந்தார்கள். அந்த நேரத்தில் வெளியில் வந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அந்தப் பையன், பறித்துப் போட்டிருந்த செடிகளை பார்த்துவிட்டு, அந்த பெரியவருக்கு நன்றி அப்பா என்று கூறினான்.
இதைக் கேட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. அந்தப் பையனின் அம்மா, அப்பாவும் வந்து பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். காரணம் இதுதான் அந்த இரண்டு செடிகளும் வீட்டிற்குள் வளரக்கூடாது என்று கூறப்படும் செடிகள். அது அவரின் கண்ணில் தென்படவும் பாவம் பிள்ளை குட்டிக்காரன் கஷ்டம் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் பறித்து போட்டு விட்டு சென்றார் என்பதை எதிராளி புரிந்து கொண்டதன் விளைவு. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பையன் நிதானமாக இருந்ததால் ஏற்பட்ட நன்மை.
ஒரு குளத்தில் தாய் மீனின் பக்கத்தில் ஒரு சிறிய மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த மீன் குஞ்சு சென்ற இடத்திற்கெல்லாம் தாய்மீனும் சென்று அதை கவனித்து வந்தது.
அப்போது தண்ணீரில் ஒரு பெரிய ஈ மிதப்பதை பார்த்த மீன் குஞ்சு அதைப்பிடித்து உண்ண விரைந்ததை தாய் மீன் தடுத்து நிறுத்து அதைப் பிடிக்காதே. நம்முடைய ஆகாரம் தண்ணீரில் மிதக்கிறது என்று எண்ணி அதைப் பிடிப்பதற்கு முன்னால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த அதேவேளையில், விரைந்து வந்த ஒரு பெரிய மீன் அந்த மாட்டு ஈயை லபக் என்று கவ்வவும் தூண்டிலில் மாட்டிக்கொண்டது.
பார்த்தாயா? நான் சொல்லி வாய் மூடுவதற்குள் என்ன நடந்தது. எதையும் செய்வதற்கு முன்னால் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், நமக்கு துன்பமே ஏற்படாது. கொஞ்சம் நிதானமுடன் நாம்தான் செயல்பட வேண்டும். எதையும் எண்ணி பார்க்காமல் செய்துவிட்டு அதன் பின்னர் "விதி" என்று வீண்பழி கூறக்கூடாது என்று அறிவுரை கூறியது.
அந்தப் பெரிய மீனுக்கு ஏற்பட்ட ஆபத்தை கண்கூடாகக் கண்ட சின்ன மீன் அதன் பின்னர்தான் தன்னுடைய தாய் மீன் சொன்னது உண்மை என்று உணர்ந்து எதிலும் நிதானமுடன் செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்தது.
ஆதலால் நிதானம் காப்போம்; நிம்மதியாய் வாழ்வோம்.